தூங்குகின்ற போது சிலர் உரிய நேரத்தில் தானாகவே கண்விழித்து விடுவார்கள். இன்னும் சிலர் அலாரம் வைத்து கண்விழிப்பார்கள். அநேகர் அலாரம் ஒலி எழுப்ப எழுப்ப அதனது ஒலியை நிறுத்தி விட்டு, சிறுதூக்கம் கொள்வார்கள். இப்படியே பொழுது விடிந்து விடும். இன்னும் சிலருக்கு அதைவிடப் பெரிய ஒலியை எழுப்பினாலும் கண்விழிக்கச் செய்வது பெரும்பாடாக இருக்கும். இலங்கையில் இனவாதமும் கடும்போக்கு சக்திகளின் செயற்பாடுகளும் தலைவிரித்தாடுகின்ற போதும், நாட்டின் நல்லிணக்கத்திற்கு அபாய சங்காக அது ஒலித்துக் கொண்டிருக்கின்ற போதும் அரசாங்கமும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோரும் இன்னும் முழுமையாக விழித்தெழாதிருக்கின்றமை அதுபோன்ற நிலையையே ஞாபகப்படுத்துகின்றது.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இந்த பின்நவீனத்துவ இனவாதம் ஆரம்பமானது. முஸ்லிம்களின் இன, மத அடையாளங்கள் நெருக்குவாரத்திற்கு உட்படுத்தப்பட்டன. அந்த இனவாதத்திற்குப் பின்னால் அன்றைய ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள் என்று சொல்லப்பட்டது. அதனை மூலதனமாக்கியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரமும் வேறு சில சம்பவங்களும் இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலின் முக்கிய கூறு என்று பின்னர் வெளியாகிய தகவல் பல்வேறுபட்ட கேள்விகளை சிறுபான்மைச் சமூகங்களின் மனதில் ஏற்படுத்தியது.
எவ்வாறிருப்பினும் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் பேராதரவுடன் நல்லாட்சி என்ற பெயரில் புதிய அரசாங்கம் நிறுவப்பட்டது. ஆகவே, ஒரு அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாவதற்கும், பல தடவை தோல்வியடைந்திருந்த ஐ.தே.கட்சி வெற்றி பெற்று, அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக வருவதற்குமான ஆட்சிக் கனவுகளை நனவாக்கியவர்கள் தமிழர்களும் முஸ்லிம்களுமே என்றால் பொய்யில்லை. எனவே, இவ்விருவரும் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக, இனவாதத்திற்கு கைவிலங்கிடப்படும் என்று குறிப்பாக முஸ்லிம்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த நிமிடம் வரைக்கும் அது நிறைவேறவில்லை.
அதிகரித்த வன்முறைகள்
முன்னரெல்லாம் எப்போதாவது நடைபெற்றுக் கொண்டிருந்த பள்ளிவாசல் மீதான தாக்குதல்கள், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள், பெற்றோல் குண்டுவீச்சுக்கள் எல்லாம் இன்று நாளாந்த நிகழ்வுகளாகி விட்டன. கடந்த 40 நாட்களுக்குள் மாத்திரம் சுமார் 20 மேற்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் சட்டம் எல்லோருக்கும் சமமானது என்பதை யதார்த்தத்தில் காணக்கிடைக்கவில்லை.
இனவாத சக்திகள் யாரென்று இப்போது சிறுபிள்ளைக்குக் கூட தெரிவும். அவர்கள் பத்திரிகையாளர் மாநாடு நடத்துகின்றார்கள், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்றார்கள், பாதுகாப்புசார் அலுவலகங்களுக்கு போகின்றார்கள், அமைச்சுக்களுக்குள் புகுந்து வகுப்புநடாத்த முனைகின்றார்கள். ஆனால் இது விடயத்தில் சட்டம் இன்னும் நிலைநாட்டப்படவில்லை. இப்போதுதான் ஞானசார தேரரை கைது செய்வதற்காக பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
இப்போதாவது இது நடந்ததே என்பது சிறுபான்மை மக்களுக்கு ஒரு ஆறுதலே என்ற அடிப்படையில் அரசாங்கத்திற்கும் நீதித் துறைக்கும் நன்றிகளை தெரிவிக்க வேண்டும். ஆனால் ஞானசார தேரர் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற ஊகங்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. அவர் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக அவரது கூட்டத்தாரும் சொல்லியிருக்கின்றனர். இனவாத சிந்தனையுள்ள அரசியல்வாதிகளும், வெளிச் சக்திகளும் இன்னும் அவரை பாதுகாக்கவே முயற்சிப்பார்கள். இவற்றை வைத்துப் பார்க்கின்ற போது அவரை கைது செய்வதற்கான முயற்சி வெற்றியளிக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
திட்டமிட்ட நடவடிக்கை
நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இனவெறுப்புப் பிரசாரங்களும் இனரீதியான அடக்குமுறைகளும் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுவதை அவதானிக்க முடிகின்றது. பொது பலசேனா போன்ற அமைப்புக்களுக்கு யாரோ பலமான, அதிகார தரப்பினர் ஆதரவு வழங்குகின்றனர் என்பதை ஊகிப்பது கடினமான விடயமல்ல. இல்லாவிட்டால் இந்தளவுக்கு அவர்களால் ஆட முடியாது. அதாவது, இன்று இனவாத சக்திகளின் பொம்மலாட்டத்தை திரைக்குப் பின்னால் இருந்து யாரோ ஆட்டுவிக்கின்றார்கள். அதற்குப் பின்னாலுள்ள மாயக் கரங்கள் பற்றி பல்வேறு அனுமானங்களை சமூக அரசியல் ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர்.
இலங்கையின் இனப் பிரச்சினை மோசமான நிலையை அடைந்ததற்கு வெளிநாடுகளின் தலையீடும் ஒரு காரணம் எனலாம். இலங்கையுடன் தொடர்புகளைப் பேணும் இந்தியா, அமெரிக்கா, சீனா, அமெரிக்கா, நோர்வே மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு என்று சில நிகழ்ச்சி நிரல்கள், திட்டங்கள் இருக்கின்றன. இவற்றுள் சில இலங்கை மக்களுக்கு நன்மையளிக்கலாம். ஆனால் பல நகர்வுகள் மேற்சொன்ன நாடுகளின் இலாபத்தை இலக்காகக் கொண்டதாகவே இருக்கும்.
எனவே, இலங்கையில் உள்ளக நிலைமைகளை தமக்கேற்றால் போல் மாற்றியமைப்பதற்காகவும் பிராந்திய, இராணுவ, பொருளாதார, அதிகார நலன்களுக்காகவும் இனவாதத்தை வைத்து ஏதேனும் ஏதேனும் ஒரு நாடு ஒரு விளையாட்டை விளையாடுகின்றதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. சர்வதேச அளவிலான இராஜதந்திரத்தின் உள்ளே இவ்வகையான தந்திரோபாயங்கள் இருப்பது வழக்கம் என்பதாலும் வெளிநாட்டுச் சக்திகளின் நிகழ்ச்சிநிரலை செயற்படுத்துகின்ற தரப்பினர் இலங்கையில் இருக்கின்றமையாலும் இச் சந்தேகம் புறந்தள்ள முடியாததும் ஆழமாக ஆராயப்பட வேண்டியதுமாகும்.
இலங்கையில் சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைத்தாலும் அதற்கு நல்லாட்சி என்று பெயர் வைத்தாலும் இரு கட்சிகளுக்கும் இடையில் முழுமையான இணக்கப்பாடு இல்லை என்பது வெளியில் தெரிய ஆரம்பித்து விட்டது. அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மனதிலும், சுதந்திரக் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்திலும் ஏற்பட்டிருப்பதாக தெரிகின்றது. எனவே இனவாதத்தை அவர்கள் தூண்டிவிடவில்லை என்றாலும், சிங்கள வாக்குகளுக்காக மெத்தனமாக செயற்படுகின்றனர் என்று முஸ்லிம் சமூக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
இவ்விடயத்தை இன்னும் விரிவாக நோக்கலாம். அதாவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகள் இரு பெரும் துண்டங்களாக உடைவடைந்துள்ளன. இந்நிலையில் அடுத்துவரும் தேர்தலில் வெற்றிபெறுவது என்றால் கடும்போக்கு சிந்தனையுள்ள சிங்கள மக்களின் வாக்குகளையும் தக்க வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அக்கட்சியின் தலைவருக்கு ஏற்பட்டுள்ளது எனலாம். மஹிந்தவின் பக்கமிருந்து அவ் வாக்குகளை தம்பக்கம் திசைமாற்ற முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் சுதந்திரக் கட்சியுடன் அவர்களை வைத்திருக்க வேண்டுமாயின், கடும்போக்கு சக்திகளை இவ்வாறு கையாள்வதைத் தவிர வேறு தெரிவுகளும் இல்லை என்று ஒரு ஆய்வாளர் கூறுகின்றார்.
மறுபுறத்தில், சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி ஐ.தே.கட்சியை இனிவரும் காலங்களில் ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு அதன் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க பிரயாசைப்படுவது சாதாரணமானது. அந்த அடிப்படையில் சு.க. இரண்டு அணிகளாக இருப்பதை ஐக்கிய தேசியக்கட்சி விரும்புகின்ற அதேநேரத்தில் கடும்போக்கு சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளையும் தன்பக்கம் திருப்புவதற்கான ஒரு ஆயுதமாக இந்தக் களநிலையை பாவிக்கும் நோக்கில் அக்கட்சித் தலைமை இவ்வாறு செயற்படலாம் என்றும் மேற்படி ஆய்வாளர் கூறுகின்றார்.
இதேவேளை, நாட்டில் இப்போது அரசியலமைப்பு மாற்றம் இடம்பெறுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அல்லது அவ்வாறு நம்பிக் கொண்டிருக்கின்றோம். இப் பின்னணியில் சிறுபான்மையினருக்கு சார்பான ஒரு கனதியான தீர்வுத் திட்டம் வழங்கப்பட்டு விடக் கூடாது என்பதில் ஆளும்தரப்பிலேயே பலர் குறியாக இருக்கின்றனர். இவர்கள், இவ்வாறான ஒரு தீர்வை வழங்கினால் நாட்டில் கலவரம் வெடிக்கும் என்று சொல்லி வெளியுலகைப் பயமுறுத்துவதற்காக, சில காவியுடைதாரிகளை ஆட்டுவிக்கின்றனரா என்ற கேள்வியும் எழுகின்றது.
அடுத்த அனுமானம், நமது வழக்கமான அவதானமாகும். இலங்கையில் தமிழர்களை எல்லா வகையிலும் அடக்கி ஒடுக்கியாயிற்று. எனவே அடுத்த சிறுபான்மையினமான முஸ்லிம்களையும் ஒருகை பார்த்து அடக்கி வைக்க வேண்டும் என்ற அற்பத்தனமான சிந்தனையின் அடிப்படையிலேயே இனவாதிகளுக்கு ஒத்தாசைகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகின்றது. அதாவது, தமிழர்களிடம் படித்த பாடத்தை மறந்து விட்டு, முஸ்லிம்களுக்கு வகுப்பெடுக்கப் பார்க்கின்றது பேரினவாதம். கொழும்பில் நடைபெற்ற விஷேட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ராவய பத்திரிகை ஆசிரியர் விக்டர் ஐவனும் இதே கருத்தை கூறியிருக்கின்றார்.
இலங்கையில் முஸ்லிம்களின் வியாபார மையங்களும் கடந்த பல வருடங்களாக இலக்கு வைக்கப்பட்டு வருகின்றன. இதில் எல்லா சம்பவங்களும் இனவாதத்துடன் தொடர்புபட்டது எனச் சொல்ல முடியாது எனினும் பெரும்பாலானவை இனவாத கும்பல்களின் அடிவருடிகளின் வேலை என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. எனவே, முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக முடக்குவதற்கான ஒரு உப திட்டமும் இதில் இருப்பதாக உணரப்படுகின்றது. அதாவது 1983ஆம் ஆண்டு ஜூலைக் கலவரம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் தமிழர்கள் பொருளாதார ரீதியில் நல்ல செழிப்பாக இருந்தனர். எனவே கலவரத்தோடு கலவரமாக தமிழர்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களும் கொளுத்தப்பட்டன.
அதுபோல இப்போது முஸ்லிம்கள் ஓரளவுக்கு பொருளாதாரத்தில் முன்னேறியிருக்கின்றனர். எனவே 83இல் தமிழர்களின் வியாபாரத்தை நாசமாக்கியது போல இப்போது முஸ்லிம்களை பொருளாதார அழிவுக்கு உட்படுத்துவதற்கும் ஒரு சிலர் மனக்கணக்கு போட்டிருக்கக் கூடும். விக்டர் ஐவன் இந்தக் கருத்தையும் முன்வைத்துள்ளார். ‘அரசியல் காரணத்திற்கு அப்பால் பொருளாதார ரீதியாக முஸ்லிம்களை முடக்கும் நோக்கமும் இருப்பதாக’ அவர் கூறியிருக்கின்றமை இங்கு கவனிப்பிற்குரியது.
காரணம் கற்பித்தல்
இவற்றுக்கெல்லாம், அரசாங்கத்தாலும் அரசாங்கத்திற்கு சார்பான தரப்பினராலும் முன்வைக்கப்படுகின்ற காரணம், இந்த இனவாத நடவடிக்கைகள் அனைத்தும் இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சர்வதேச சதி என்பதாகும். பொதுவாக இலங்கையை தமது நாட்டின் மாநிலம் போல பார்க்கும் இந்தியா போன்ற நாடுகளும் தமது விருப்பத்திற்கேற்ப ஆடச்சொல்லும் சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் இலங்கையில் ஒரு தளம்பல் நிலையை உண்டுபண்ணினாலேயே அரசாங்கம் தம்முடைய கதைகளுக்கு அடிபணிந்து நடக்கும் என்ற புராதன ராஜதந்திரத்தை இன்னும் கையாளுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இது உள்நாட்டு (மஹிந்த அணியினரின்) மற்றும் வெளிநாட்டு சதி மட்டுமே என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
பொதுபலசேனாவும் இன்னபிற கடும்போக்கு அமைப்புக்களும் சிங்கள சிவில் சமூகத்தின் மத்தியில் இனவாதத்தை விதைக்கும் வேலையையே செய்யத் தொடங்கியிருக்கின்றன. முன்னைய காலத்தில் இனவாதத்தை அரசியல்வாதிகளிடையே விதைக்கும் வேலையையும் அதிகார வர்க்கத்தினரிடையே வேரூன்றச் செய்யும் கைங்கரியத்தையும் இவர்களது சீனியர்கள் ஓரளவுக்கு செய்திருக்கின்றனர். இப்போது சிங்கள சிவில் சமூகத்தை இனவாதமயமாக்கும் முயற்சியையே ஆரம்பித்துள்ளதாக தோன்றுகின்றது. அதன் காரணமாகவே, வாய்க்கும் மூளைக்கும் சம்பந்தமில்லாத, தரக்குறைவான வார்த்தைகளை எல்லாம் இனவாதிகள் உளறுகின்றனர் என்றும் சொல்லலாம்.
அந்த வகையில் இந்த இனவாத செயற்பாடுகளுக்குப் பின்னால் நாம் மேற்குறிப்பிட்ட எந்த சக்திகளும் இருக்கலாம். முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இனவாத நடவடிக்கைகளுக்கு ஆட்சிமாற்ற சதி, வெளிநாடுகளின் பின்புலம், பிராந்திய நலன், மேற்குலகின் நிகழ்ச்சிநிரல், மஹிந்த அணியின் சூழ்;ச்சிகள், சு.க. – ஐ.தே.க.அதிகார மேலாதிக்க போட்டிகள் என எதுவும் காரணமாக அமையக்கூடும். இந்த எல்லாக் காரணங்களும் சிறியதும் பெரியதுமான பங்களிப்பை கொண்டிருக்கலாம் அல்லது இவற்றுள் ஒன்றிரண்டு காரணங்களுக்காக இது மேற்கொள்ளப்படலாம்.
அது உண்மையாயின், ஆட்சியில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த நினைப்போரின் பங்கு அதில் முக்கியமானதாக இருக்கலாம். அந்த வகையில், இது ஆட்சியை மாற்றுவதற்கான சதி என்று அரசாங்கமும் கூறுவதில் உண்மையிருக்கும். அதற்காக இது முழுவதுமே ஆட்சிமாற்றத்திற்கான சதி என்று சொல்ல முடியாது. அப்படியென்றாலும், ஆட்சிமாற்றத்திற்கான சதி என்று தெரிந்திருந்தும், அதற்கு கருவியாக பயன்படுத்தப்படும் இனவாதிகள் பகிரங்கமாக இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்த முனையும் போது அரசாங்கம் ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கின்றது?
அப்படியென்றால் ஒன்றில் அரசாங்கமும் ஸ்திரமற்ற ஆட்சியை விரும்புவதாக இருக்க வேண்டும். அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காக சட்ட நடவடிக்கை எடுக்காதிருப்பதன் மூலம் மறைமுகமாக இனவாதத்தை வளர விடுவதாக இருக்க வேண்டும். இவ்விரண்டும் இல்லையென்றால் பொறுப்புள்ள அதிகார தரப்பினர் பல மாதங்களுக்கு முன்னரே இனவாதத்தின் மூக்கணாங்கயிறை இழுத்துக் கட்டியிருக்க வேண்டும். ஆனால், அது நடந்தபாடில்லை.
கடும்போக்கு அமைப்புக்கள் ஒரு சிறிய குழுவாக இருந்தாலும், அவர்களுக்கு பின்னால் ஒரு பலமான பின்புலம் இருக்கின்றது என்பதே கணிசமானோரின் நிலைப்பாடாகும். அத்துடன், ஞானசார தேரர் ஒவ்வொரு வாரமும் புதுப்புது கதைகளை அவிழ்த்து விடுகின்றார். இதுவெல்லாம் அவராக சிந்தித்து பேசுவது போல தெரியவில்லை. யாரோ கருப்பொருட்களை அவருக்கு சொல்லிக் கொடுத்து அவர் வாயால் வெளியில் விடுகின்றார்கள் என்றே எண்ண வேண்டியுள்ளது.
மேலும், ஞானசார தேரர் விடயத்தில் சட்டம் விதிவிலக்காக இயங்குகின்றது. முன்னர் றிசாட் பதியுதீனின் அமைச்சுக்குள் புகுந்த ஞானசார தேரர், சகவாழ்வு அமைச்சுக்குள் சென்று இலங்கை சிங்களவர்களின் நாடு என்று மனோ கணேசனுக்கு சொல்லிக் கொடுக்கின்றார். நீதிமன்ற உத்தரவுகளை அவமானப்படுத்துகின்றார். இலங்கையில் வாழும் 20 இலட்சம் முஸ்லிம்களின் மனங்களையும் அவர்களது நம்பிக்கைகளையும் கேவலப்படுத்துகின்றார். இன்னுமொரு இனமுறுகல் ஏற்படுவதற்கான எல்லா நச்சுக் கருத்துக்களையும் வெளியில் விடுகின்றார். இப்படி இன்னும் எத்தனையோ…!
இவ்வாறெல்லாம் நடந்தும் கூட ஞானசாரவும் அவரது கூட்டாளிகளும் இன்னும் சட்டத்தால் தண்டிக்கப்படவில்லை. அத்துடன் வன்முறை ஏற்படாமல் தடுத்தல் என்ற தோரணையில் சிங்கள, ஆங்கில ஊடகங்கள் வழக்கம் போல இச் செய்திகளை இருட்டடிப்புச் செய்கின்றன. அத்துடன் அரசாங்கத்தில் உள்ள சிலரே இவர்களுக்கு வக்காளத்து வாங்குவதையும் காணமுடிகின்றது. அப்படியென்றால் இதற்குப்பின்னால் பெரியதொரு பலமான சக்தி இருக்கின்றது என்று நினைப்பதில் என்ன தவறு இருக்கின்றது?!
ஏன் இந்த தயக்கம
மிக இலகுவாக இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்திருந்தால், இப்போது கோடரி தேவைப்பட்டிருக்காது. இது யாருடைய சதியாக இருந்தாலும், களத்தில் மக்களின் முன்னால் இனவாதத்தை தூண்டுபவர்கள் யாரென்று தெரிகின்றது தானே எனவே அவர்களைப் பிடித்தால் உண்மைகள் வெளியில் வரும். அணிலைப் பிடித்தால் அதனை மாங்காய் ஆய்வதற்கு அனுப்பியது யாரென்று தெரிய வரும். அதாவது தோட்டாவை வைத்து அது எந்த துப்பாக்கியில் இருந்து வெளிவந்தது என அறிவது மாதிரி சூத்திரதாரிகளை பிடிக்க முடியும். ஆனால் அதற்கு நல்லாட்சி அரசாங்கம் தயங்குவது வினோதமாக உள்ளது.
அதேபோன்று, இலங்கை மக்களின் அபிமானத்தைப் பெற்ற மூன்று பௌத்த பீடங்களே இதுவரை காலமும் இலங்கையில் பௌத்தத்தின் காவலர்களாக இருந்து வந்துள்ளன. ஆனால் இப்போது நடக்கின்ற இனவாத சம்பவங்கள் புத்தரின் போதனைகளுக்கே முரணானது என்பதுடன் பௌத்தம் பற்றிய தோற்றப்பாட்டையும் மோசமானதாக்கும் வாய்ப்புள்ளது. முப்பீடங்கள் இனவாதிகளின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ளன என்ற போதிலும், பகிரங்கமாக இதைக் கட்டுப்படுத்தாமை சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒரு கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஆனால், நிலைமைகள் இவ்வாறே தொடர முடியாது. இப்போது அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. பாராளுமன்றத்தில் றிசாட் பதியுதீன், றவூப் ஹக்கீம், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பல முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் இது பற்றி உரையாற்றி இருக்கின்றார்கள். அமைச்சர் மனோ கணேசன், பிமல் ரட்ணாயக்க, அனுர குமார திசாநாயக்க, அர்ஜூன ரணதுங்க என சகோதர இனங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் முஸ்லிம்களுக்கு நியாயம் வேண்டி குரல் கொடுக்கின்றனர். மறுபுறத்தில் மோசமான இனவாதமும் முஸ்லிம்களின் பொறுமையும் சாதாரண சிங்கள மக்களிடையே முஸ்லிம்கள் பற்றிய நல்லபிப்பிராயம் ஏற்படுவதற்கு காரணமாகியிருக்கின்றது. சமூக வலைத்தளங்களில் சிங்கள முற்போக்கு செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர் இனவாதத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவேற்று வருகின்றனர்.
இந்தப் பின்னணியிலேயே, பாதுகாப்பு தரப்பினருக்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய ஞானசார தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவும் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவரை கைது செய்வதற்காக பல குழுக்கள் களத்தில் குதித்துள்ளன. இது சிறுபான்மை மக்களுக்கு ஆறுதலான செய்தியே. ஆயினும் இதனை நிரந்தரமாக்குவது சட்டத்தையும் நாட்டையும் ஆள்பவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. முன்னைய அரசாங்கம் செய்த பிழையை இந்த அரசாங்கமும் செய்யக் கூடாது.
எல்லா ஆட்டங்களும் ஒருநாள் முடிவுக்கு வருவதே இயற்கையின் நியதி.
• ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 28.05.2017)