இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். சுமார் 58-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரை கைது செய்துள்ளனர். அதேசமயம், மீண்டும் அதுபோன்ற தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், மத்திய லண்டனில் வாட்டர்லூ ரெயில் நிலையம் அருகில் உள்ள ஓல்டுவிக் தியேட்டருக்கு மர்ம நபர் ஒருவன் இன்று மதியம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளான். இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தியேட்டருக்கு படம் பார்க்க வந்த அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றினர். அருகில் இருந்த உணவகங்கள், பப்புகளில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர். தியேட்டரை சுற்றியுள்ள அனைத்து சாலைகளும் மூடப்பட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
அதேசமயம், தியேட்டருக்குள் அனைத்து பகுதிகளிலும் போலீசார் சோதனை செய்தனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.