சென்னையை சாய்த்து 2-வது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது மும்பை !

214141

214125

 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை- மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பீல்டிங் தேர்வு செய்தார். இரு அணிகளிலும் வீரர்கள் யாரும் மாற்றப்படவில்லை.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி தொடக்க வீரர் சிம்மன்ஸ் (68), கேப்டன் ரோகித் சர்மா (50), பொல்லார்டு (36), அம்பதி ராயுடு (36 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. சென்னை அணி சார்பில் நெஹ்ரா 4 ஓவரில் 41 ரன்களும், மோகித் சர்மா 4 ஓவரில் 38 ரன்களும், ஜடேஜா 2 ஓவரில் 26 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.

214139
203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சென்னை அணியின் சுமித், ஹசி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 9 பந்துகள் சந்தித்த ஹசி 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து ரெய்னா களம் இறங்கினார்.

ரெய்னாவும், சுமித்தும் களத்தில் நீண்ட நேரம் நின்றார்கள். ஆனால் அவர்களால் அதிரடியாக விளையாட முடியவில்லை. மும்பை அணியின் வேகப்பந்து வீச்சு அபாரமாக இருந்தது. 11-வது ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சுமித் அரை சதத்தை கடந்தார்.

12-வது ஓவரை ஹர்பஜன் சிங் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் சுமித் எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார். அவர் 48 பந்தில் 57 ரன்கள் எடுத்தார். அடுத்து சென்னை அணி கேப்டன் தோனி களம் இறங்கினார். ஹர்பஜன் சிங் வீசிய 14-வது ஓவரில் ரெய்னா ஸ்டம்பிங் ஆகி பெவிலியன் திரும்பினார். அவர் 19 பந்தில் 28 ரன்கள் எடுத்தார். ரெய்னா அவுட் ஆனதும் சென்னை அணியின் தோல்வி உறுதியானது.

அடுத்து வந்த பிராவோ 9 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் தோனி (18), டு பிளிசிஸ் (1), நெஹி (3), அஸ்வின் (2) அவுட் ஆக சென்னை அணியால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை அணி சென்னையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

மும்பை அணி சார்பில் மெக்கிளெனகன் 3 விக்கெட்டும், மலிங்கா மற்றும் ஹர்பஜன் சிங் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.