க.கிஷாந்தன்
அட்டனுக்கு விஜயத்தை மேற்கொள்ளும் இந்திய பிரதமர் ஸ்ரீ. நரேந்திரமோடியை இலங்கை அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தான் வரவழைக்கின்றனர்.
மாறாக நாங்கள் தான் இந்திய பிரதமரை வரவழைக்கின்றோம் என மலையகத்தின் இரண்டு பிரதான கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு பொய் கூறி அட்டன் பிரதேச தோட்டப்பகுதி மக்களிடத்தில் மோதல்களை உண்டு பன்னுகின்றனர்.
எனவே அட்டனுக்கு வருகைதரவுள்ள இந்திய பிரதமரின் வருகையை இவ்விரு கட்சிகளும் தமது பலத்தை நிரூபிக்க அடித்தளமாக பாவிக்கின்றது என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பு 09.05.2017 அன்று அட்டனில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது இங்கு மேற்கண்டவாறு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்திய பிரதமரின் மலையக விஜயம் தொடர்பில் தனிப்பட்டு செயற்படும் அதிகாரம் எந்தவோர் மலையக கட்சிக்கும் அரசாங்கம் வழங்கவில்லை என்பதை உறுதியாக சொல்லமுடியும்.
நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் இந்திய அரசாங்கம் வைத்துள்ள நட்புறவு காரணமாக இந்திய பிரதமரை இலங்கைக்கு தேசிய நிகழ்வொன்றுக்கு அழைத்ததனால் வருகை தரும் இந்திய பிரதமர் மலையகத்திற்கும் விஜயத்தை மேற்கொள்ள உள்ளார் இதுதான் உண்மை.
மாறாக மலையகத்தின் பிரதான கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழைத்து இந்திய பிரதமர் வருகின்றார் என்பதில் மலையக மக்களுக்கு போலியான தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அட்டன் பிரதேசத்தில் மக்கள் மத்தியில் மோதல்களை உருவாக்கும் நிலை தென்படுவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நோர்வூட் நகரில் த.மு.கூட்டணியின் திகா அணிக்கும் இ.தொ.கா செந்தில் அணிக்கும் மோதல் இடம் பெற்றது. இந்த மோதல் சம்பவம் மோடியின் வருகையை முன்னிட்டு தனிக்கட்சி ஒன்று தனது பலத்தை நிருபிக்க எடுத்து கொண்ட நடவடிக்கையாகும்.
ஆனால் அரசாங்கம் எந்த வகையிலும் மலையகத்தின் அமைச்சர்கள் சார்ந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை சார்ந்த எந்த தனிக்கட்சிக்கும் தனிப்பட்ட அதிகாரங்களை வழங்கவில்லை.
ஆனால் த.மு.கூட்டணி நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமர் சார்பாக அழைக்கப்பட்டுள்ள நிலையில் நோர்வூட் மைதானத்தில் இடம்பெறும் பொது கூட்டம் தொடர்பில் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதேவேளை இ.தொ.கா தரப்பினர் ஜனாதிபதியின் பக்கம் சார்ந்துள்ளமையால் இந்திய பிரதமர் வருகையிலான நடவடிக்கையில் ஈடுப்பட ஆழைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் தனிப்பட்ட ரீதியில் எவரும் எந்த தனிகட்சியும் செயற்பட அதிகாரம் வழங்கப்படவில்லை என்பதுதான் உண்மை என அவர் மேலும் தனது கருத்தில் தெரிவித்தார்.