விலையை வேண்டுமென்றே அதிகரித்தால் சட்ட நடவடிக்கை: அமைச்சர் றிஷாட் எச்சரிக்கை

ஊடகப்பிரிவு

வெசாக் பண்டிகை காலத்தில் பொருட்களுக்கு எத்தகைய தட்டுப்பாடும் ஏற்படாதவகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொருட்களின் விலையை அதிகரித்து விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இதே வேளை அத்தியாவசிய உணவுப்பண்டங்கள் இறக்குமதி மற்றும் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஹேமக்க பெர்னாண்டோ, சந்தையில் பொருட்கள் தாராளமாக இருப்பதாகவும் எந்தப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவவில்லை எனவும் உறுதிபடத் தெரிவித்தார். 

கடந்த வெசாக் பண்டிகை காலத்தோடு ஒப்பிடும் போது இந்த வருட பண்டிகை காலத்தில் மொத்த விற்பனைச் சந்தையில் பொருட்களின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 

கடந்த வருடம் மே மாதமளவில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூபா. 78 – 80 வரை இருந்தாகவும் தற்போது சந்தையில் கிலோ ஒன்றுக்கு ரூபா 62- 63 வரையே விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். 

கடந்த வெசாக் காலத்தில் வெள்ளைச் சீனி கிலோ ஒன்றுக்கு ரூபா 103 – 105 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டதாகவும் இந்த வருடம் ரூபா 98 – 78 வரை மொத்த வியாபாரச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் பருப்பின் மொத்த விலையும் கடந்த வெசாக் காலத்துடன் ஒப்பிடும் போது வெகுவாகக் குறைந்துள்ளது கிலோ ஒன்றுக்கு ரூபா 175 – 185 வரை விற்கப்பட்ட பருப்பு தற்போது ரூபா 135 தொடக்கம் 145 வரை விற்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

‘சந்தையில் அரிசிக்கும் எந்தத்தட்டுப்பாடுமில்லை ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயத்தின் அடிப்படையில் இது விற்கப்படுகின்றது. தாராளமாகப் பெற்றுக் கொள்ளலாம்.’