மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களின் சட்ட பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறை!

5-DSC04699_Fotor_Collage_Fotor

பழுலுல்லாஹ் பர்ஹான்

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், இலங்கை இணைய ஊடகவியலாளர் சங்கம், ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு இயக்கம் ஆகியன இணைந்து றைட்ஸ் நைவ் அமைப்பின் அனுசரணையில் மட்டக்களப்பிலுள்ள வொயிஸ் ஒப் மீடியா – ஊடகக் கற்கைகள் நிறுவன அலுவலகத்தில் ஊடகவியலாளர்களுக்கான சட்ட பாதுகாப்புக்கான பயிற்சிப்பட்டறை நேற்று 23 சனிக்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளத்தின் தலைவர் எல்.தேவ அதிரன் தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சிப்பட்டறையில் கருத்துத் தெரிவித்த தேவ அதிரன், ஊடகவியலாளர்களுக்கான சட்டத்துறை சார்ந்த அறிவு, அதுசார்ந்த தேவைகள் தொடர்பில் கருத்துரை வழங்கினார்.

 அத்துடன், சட்டங்கள் தொடர்பாக அறிந்திருப்பதன் ஊடாக செய்திகளை ஊடகங்களுக்கு வழங்குகையில் கடைப்பிடிக்க வேண்டிய சட்டம் சார்ந்த ஒழுங்குகள், சட்டத்தரணிகளை அணுகுதல், சட்டம் சார்ந்து ஊடகவியலாளர்கள் கடைப்பிடிக்க வேண்டியவைகள் தொடர்பிலும் கருத்துத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனமும், ஊடகச் சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக்குமான அமைப்பு, இணைய ஊடகவியலாளர்கள் சங்கம் ஆகியன இணைந்து கடந்த 2014ஆம் ஆண்டு டிசெம்பரின் ஆரம்பத்தில் இணைப்பாதுகாப்பு தொடர்பான இரண்டு பட்டறைகளை நடத்தியுள்ளது.

இதில் பயன்பெற்றவர்களும், அவற்றில் கலந்து கொள்ளாதவர்களும் இந்தப் பயிற்சிப்பட்டறையில் பங்கு கொண்டுள்ளீர்கள். இனி வரும் காலத்தில் எமது அமைப்புகள் இணைந்து பல்வேறு பட்ட பயிற்சிப்பட்டறைகளை ஊடகவியலாளர்களுக்காக நடத்தவிருக்கிறோம். அவற்றிலும் பங்கு கொண்டு காத்திரமான ஊடகவியலாளர்களை உருவாக்கி நாட்டில் மக்களுக்கும் நாட்டிற்கும் பயன்படக் கூடியவர்களாக மாற்றுவதற்காக செயற்படவுள்ளது என்று தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த இணைய ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டாளர் பெடி கமகே, ஊடகவியலாளர்களை வளப்படுத்தி சிறந்த ஊடகத்துறையினை பிராந்திய ரீதியில் மேம்படுத்துவதற்காக பல்வேறு பட்ட பயிற்சிப்பட்டறைகளை நாடு பூராகவும் எமது அமைப்பு நடத்தி வருகிறது.

இதற்கு முன்னர் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சங்கத்துடன் இணைந்து இணையப்பாதுகாப்பு (டிஜிட்டல்) தொடர்பான இரண்டு பயிற்சிப்பட்டறைகளை நடத்தியுள்ளது. 

அந்த வகையில் அதன் தொடர்ச்சியாக சட்டப்பாதுகாப்பு, நீதித்துறை சார்ந்த விடயங்கள் சார்ந்து ஊடகவியலாளர்களுக்கு அறிவு வழங்கும் வகையிலும், சட்டத்துறையில் சிக்கல்களை உருவாக்காத செய்திகளை எழுதக்கூடிய செய்தியாளர்களை உருவாக்குவதற்காக இந்த சட்டப் பாதுகாப்புக்காள பயிற்சிப்பட்டறை நடத்தப்படுகிறது.

இந்தப்பயிற்சிப்பட்டறையினை ஊடகத்துறையினராகிய நீங்கள் முழுமையாகப்பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதே நேரம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களின் சம்மேளத்துடன் இணைந்து எதிர்வரும் காலத்தில் சட்டத்துறையினருடன் ஊடகவியலாளர்களை இணைக்கும் வகையில் ஒரு வலையமைப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்றினையும் நடத்தவுள்ளோம். தொடர்ந்தும் தாங்கள் வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி என்று தெரிவித்தார்.

இப் பயிற்சிப்பட்டறையில் வளவாளராகப் பங்கு கொண்ட மட்டக்களப்பைச் சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணி தட்சனாமூர்த்தி சிவநாதன் ஊடகவியல் சட்டங்கள் தொடர்பாக விளக்கவுரையினை வழங்கினார்.

ஊடகவியலாளர்கள் சமூகப் பொறுப்புள்ளவர்களாகவும், சமூகத்திலுள்ள மக்களுக்கு அறிவுரையினையும், அவர்களது பிரச்சினைகளையும் வெளிக் கொண்டுவருபவர்களாகவும் மக்கள் நலநோன்பு மனோபாவம் உடையவர்களாக இருக்க வேண்டும். ஊடகவியலாளராக இருக்க வேண்டுமாக இருந்தால் அவர் சமூகத்தில் எதிர் நோக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு, அதற்கான சக்தி, முயற்சி, விடயம் சம்பந்தமான அறிவினை உடையவராக இருத்தல் வேண்டும். அதனை வெளிப்படுத்துவதற்கான விருப்பம் இருத்தல் வேண்டும் எனத் தெரிவித்தார்.

இலங்கையில் தேசவழமைச் சட்டம், முஸ்லிம் சட்டம், கண்டியச் சட்டங்கள் எழுதப்படாதவைகளாக காணப்படுகின்றன. ஆனால் நடைமுறையில் அரசியல் யாப்புச் சட்டமே நடைமுறையில் உள்ளது. இதுவே அதியுயர் சட்டமாகப் பேணப்படுகிறது என்று தெரிவித்தார். அதேநேரம், இக் கருத்தரங்கில், குற்றவியல் சட்டம், தனிநபர் சட்டங்கள், காணி உரிமைச் சட்டங்கள், மனித உரிமைச்சட்டங்கள், குற்றவியல் சட்டங்கள், இலங்கை அரசியல், அடிப்படை உரிமைகள், உயிர் வாழ்தல் உரிமை, கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த நேரத்தின் போது கலந்துரையாடப்பட்டன. 

அத்துடன், ஊடகவியலாளர் சங்கங்களின் முக்கியத்துவம் மற்றும் தேவைகுறித்தும் எதிர்காலத்தில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் சம்மேளனம், இலங்கை இணைய ஊடகவியலாளர் சங்கம், ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு இயக்கம் ஆகியன இணைந்து செயற்பட வேண்டியதன் தேவை கட்டாயம் குறித்தும் இணையங்களில் பணியாற்றும் புதிய செய்தியாளர்களை வளப்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்தும் கலந்துரையாடினார்.