அபு அலா –
இஸ்லாமிய நிதிச் சேவைகளில் ஒன்றான அமானா தகாபுல் நிறுவனத்தினரால் அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் தனியார் காப்புறுதி நிறுவனங்களினை ஒன்றிணைத்து அணிக்கு 06 பேர் கொண்ட 04 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிகெட் சுற்றுதொடர் நேற்று (24) சனிக்கிழமை நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
அமானா தகாபுலின் 2015 ஆம் ஆண்டுக்கான இந்த கிரிக்கெட் போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வுகளுக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அல் ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.
இந்த போட்டித்தொடரின் இறுதிப் போட்டிக்கு கல்முனை கொமேர்சியல் கிரடிட் அணியும், அம்பாறை எல்.ஓ.எல்.சி அணியும் தெரிவாகின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அம்பாறை எல்.ஓ.எல்.சி அணி முதலில் துருப்பெடுத்தாடி 04 ஓவர்கள் நிறைவடைவில் 02 விகட் இழப்பிற்கு 74 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அவ்வணி சார்பாக வஜிர 37 ஓட்டங்களையும், திலிப 28 ஓட்டங்களினையும் பெற்றனர்.
பதிலுக்கு துருப்பெடுத்தாடிய கல்முனை கொமேர்சியல் கிரடிட் அணி 04 பந்து வீச்சு ஓவர்கள் நிறைவில் 03 விக்கட் இழப்பிற்கு 59 ஒட்டங்களினைப் பெற்று மேலதிக 14 ஓட்டங்களினால் தோல்வியைத்தளுவினர்.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு 7,500 ரூபாவும், வெற்றிக்கோப்பையும், தோல்வியுற்ற அணிக்கு 5,000 ரூபாவும் வெற்றிக்கோப்பையும் வழங்கி வைக்கப்பட்டது.
இப்போட்டிக்கு அமானா தகாபுல் நிறுவனத்தின் தேசிய முகாமையாளர் உமர் முஸ்தபா, விற்பனை விநியோகப்பிரிவு முகாமையாளர் சாகுல் ஹமீட் பாறூக், பிராந்திய முகாமையாளர் ஜௌபர் சாதிக் உள்ளிட்ட அமானா தகாபுல் நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர் இந்த பணப் பரிசில் மற்றும் கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.
இதேவேளை இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கும் பரிசில் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.