மாரடைப்பு ஏற்பட்ட 50 சதவீத நோயாளிகள் நெஞ்சுவலி என்று கூற மறுக்கிறார்கள். வாய்வு கோளாறு, எரிச்சல், வாந்தி, நெஞ்சு அழுத்தம், வியர்த்து கொட்டுதல் போன்றவை மாரடைப்பு நோயின் அறிகுறிகள் என்று உணராமல் செரிமான கோளாறு என நினைத்துக்கொண்டு காலம் தாழ்த்தி டாக்டரை அணுகி வருகின்றனர். மாரடைப்பு வந்த பின்னர் அதற்கான சிகிச்சையை உடனடியாக மேற்கொள்வது மிக அவசியம். மாரடைப்பை இ.சி.ஜி., எக்கோ ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கலாம்.
மாரடைப்புக்கு இரு சிகிச்சை முறைகள் உள்ளன. முதல் சிகிச்சை முறையில், மாரடைப்பிற்கு காரணமான ரத்தக்குழாய் அடைப்பு சக்தி வாய்ந்த மருந்து மூலம் கரைக்கப்படும். சில நேரங்களில் மருந்து கொடுத்த பின்னரும் மாரடைப்பு குறையவில்லை என்றால், 2-வது சிகிச்சையாக ஆஞ்சியோ மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
இதில் இரண்டாவது சிகிச்சை முறை, முதல் சிகிச்சை முறையை விட சிறந்தது. இந்த சிகிச்சை 24 மணி நேர கேத் லேப் வசதி மற்றும் நுண்துளை இதய மருத்துவர் இருக்கும் ஆஸ்பத்திரியில் தான் ஆஞ்சியோ மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை செய்ய முடியும்.
வயதானவர்களின் நோயாக கருதிய மாரடைப்பு, தற்போது வயது வரம்பின்றி அனைவரையும் பாதிக்கக்கூடிய நோயாக விளங்குகிறது. உணவுமுறை மாற்றம், உடற்பயிற்சியின்மை, உடல் பருமன், வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தம் ஆகியவை மாரடைப்பு நோய் ஏற்பட வழிவகுக்கிறது. மாரடைப்பு ஏற்படாமல் தவிர்க்க வாழ்க்கை முறையில் சீர்திருத்தம், உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றை குழந்தை பருவத்தில் இருந்தே கடைப்பிடிக்க வேண்டும்.
நம் பாரம்பரிய உணவு முறையை கடைப்பிடித்தல், பசித்த பின் உண்ணுதல், துரித வகை உணவுகளை தவிர்த்தல், உடற்பயிற்சிக்கு முன்னுரிமை, 8 மணி நேர தூக்கம், புகை பிடித்தல் மற்றும் மது பழக்கங்களை தவிர்த்தல் மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்வதின் மூலம் மாரடைப்பு நோயை தவிர்க்கலாம்.