வடகொரியா நாடு தனது அண்டைய நாடான தென் கொரியாவை தொடர்ந்து மிரட்டி வருகிறது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கிறது. வட கொரியாவின் அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் அமெரிக்க படைகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதலை நடத்த போவதாக அறிவித்துள்ளார்.
அவருடைய மிரட்டல் காரணமாக அமெரிக்கா ஏராளமான போர் கப்பல்களையும், நீர் மூழ்கி கப்பல்களையும் தென் கொரியாவுக்கு அனுப்பி உள்ளது.
இதில் விமானம் தாங்கி கப்பல்களும் சென்றுள்ளன. இந்த கப்பல்களை குண்டு வீசி அழிப்பேன் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறி இருக்கிறார்.
அவர் எந்த நேரத்திலும் தென் கொரியா மீது தாக்குதல் நடத்த தனது ராணுவத்தை ஏவலாம் என எதிர்பாக்கப்படுகிறது. குறிப்பாக தென் கொரியா மீது அணுகுண்டுகளை வீசுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே, எதிரி நாட்டு ஏவுகணைகள் வந்தால் அதை நடுவானிலேயே தாக்கி அழிக்கும் வகையிலான தொழில்நுட்ப கவச ஆயுதங்களை அமெரிக்கா தென் கொரியாவில் நிறுவி வருகிறது. தாட் என அழைக்கப்படும் இந்த ஆயுதங்கள் தென் கொரியாவின் வட எல்லை பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதனால் போர் பதட்டம் அதிகரித்துள்ளது. இதற்கு உள்ளூர் மக்களே எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அமெரிக்கா போர் பதட்டத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்த நிலையில் அமெரிக்கா தென் கொரியாவில் கவச ஆயுதங்களை நிறுவியதற்கு சீனாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவு மந்திரி யாங் இ கூறும்போது அமெரிக்கா தற்போது தென் கொரியாவில் நடந்து கொள்ளும் செயல் இந்த பகுதியை போரில் தள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்கா கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும். தேவையற்ற விஷயங்களை அந்த நாடு செய்து கொண்டு இருக்கிறது.
அதே நேரத்தில் வட கொரியாவும் அணு ஆயுத மேம்பாடு போன்ற விஷயங்களை கைவிட்டு இந்த பகுதியில் அமைதி ஏற்பட உதவ வேண்டும் என்று கூறி உள்ளார்.
வடகொரியாவுடன் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு குறித்து அமெரிக்காவில் செனட் சபை உறுப்பினர்களுடன் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். அதில், நடந்து கொண்டு இருக்கும் சம்பவங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அபோது வட கொரியாவை கட்டுப்படுத்தும் வகையில் பொருளாதார தடை உள்ளிட்ட தடைகளை மேலும் அதிகப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.