சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமல் இழுபறி காட்டியதால் ஏற்பட்ட விளைவே இந்த அனர்த்தம்.

அஷ்ரப் .ஏ. சமத்

மீத்தொட்டைமுல்லை குப்பை மேடு சரிந்ததால் ஏற்பட்டுள்ள எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் மூன்று மாத காலத்துக்குள் சரியான முடிவொன்றை காணுமாறு அரசாங்கத்தை மிகவும் வினயமுடன் கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு செய்தால் அதுதான் இந்த அனர்த்தம் மூலம் உயிர் இழந்தவர்களுக்கு நாம் செலுத்தும் மிகப் பெரிய கௌரவமாகும் என்று கூறினார் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்.

இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது கொலன்னாவை டெரன்ஸ் டி சில்வா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு விஜயம் செய்து அந்த மக்களின் நலன்களில் கவனம் செலுத்திய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது இயற்கையாகவோ அல்லது தவறாகவோ ஏற்பட்ட ஒரு விபரீதம் அல்ல. சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமல் இழுபறி காட்டியதால் ஏற்பட்ட விளைவே இந்த அனர்த்தம். இதனோடு தொடர்புடைய பொறுப்பான அதிகாரிகள் பலருக்கு நாம் பல கடிதங்களை எழுதியுள்ளோம். இவற்றுக்கான சான்றுகள் ஒரு கோவையாக இன்று என்னிடம் உள்ளன. கடந்த ஆண்டு ஜுலை 20ல் கொழும்பு மாநகர சபைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அதில் குப்பை மேடு 180 அடி உயரத்துக்கு சென்று விட்டது. இனிமேல் அங்கு குப்பைகளை கொட்ட வேண்டாம். அவ்வாறு கொட்டினால் அது சரிவடையும் என்றும் குறிப்பிட்டுள்ளேன். பின்னர் அதே கடிதத்தை நான் ஜனாதிபதி, பிரதமர், மாகாண அமைச்சர். மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர், மேல் மாகாண முதலமைச்சர் ஆகியோருக்கும் அனுப்பி வைத்தேன். பின்னர் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் வவ்வேறாக பேச்சுவார்த்தையும் நடத்தினேன். வேறு இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கான மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியையும் பெற்றுக் கொடுத்துள்ளேன். ஆனால் அரசாங்கம் வவ்வேறு ஆர்ப்பாட்டங்களுக்கு அஞ்சி அதில் கவனம் செலுத்த தவறிவிட்டது. அதுதான் இன்றைய நிலைக்கு காரணம். எனவே இன்று உயிர் நீத்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய ஒரு கௌரவமாக கருதி நாம் இந்த விடயத்தில் உடன் கவனம் செலுத்த வேண்டும்.

இனிமேல் இந்த நாட்டில் இப்படி ஒரு குப்பை பிரச்சினை ஏற்படாத வகையில் துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இன்று ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினைக்கு சிறந்ததோர் தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும். இந்த மக்களை தொடர்ந்தும் இந்த இடைத்தங்கல் முகாம்களில் வைத்திருக்க முடியாது. சிலருக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் வீடுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. சிலர் இந்த வீடுகளைப் பெற விரும்பவில்லை. அவர்களுக்கு வேறு வகையில் நட்டஈடு வழங்கப்பட வேண்டும். மக்கள் விருப்பப்படியே அவை வழங்கப்பட வேண்டும். இந்த நட்டஈடுகள் வழங்கப்படும் வரை வாடகை வீடுகளில் வசிக்க விரும்புகின்றவர்களுக்கு மாதாந்தம் வாடகை 50000 ரூபா வழங்கப்பட வேண்டும். தளபாடங்கள் மற்றும் பொருள்களை கொள்வனவு செய்ய 250000 ரூபாவும் அவற்றுக்கான போக்குவரத்துச் செலவாக பத்தாயிரம் ரூபாவும் வழங்கப்பட வேண்டும். இதற்கான சுற்று நிருபங்கள் வெளிவரும் வரை காத்திருக்காமல் உடனடியாக இவற்றை அமுல் செய்யுமாறு அரசாங்கத்தை நாம் கேட்டுக் கொள்கிறோம். மீறியபெத்த அரணாயக்க மற்றும் சாலாவை பிரச்சினைகளைப் போல் இழுத்தடிக்காமல் இந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்து துரித தீர்வு காணலாம் என்பதை அரசாங்கம் நிரூபிக்க முடியும்.