பாறுக் ஷிஹான்
புங்குடுதீவு மாணவியின் கொலையை அடுத்து யாழ். நகர் அதனை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட பதட்ட சூழல் இன்னமும் வழமைக்கு திரும்பவில்லை.
புங்குடுதீவு மாணவி வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டதையடுத்து பல்வேறு போராட்டங்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்று வந்தன.
அதன் ஒருஅங்கமாக கடந்த 20 ஆம் திகதியும் பல்வேறு அமைப்புக்கள் போராட்டத்தை நடாத்தியதுடன் மகஜர்களையும் அதிகாரிகளிடம் வழங்கி வைத்தனர். அத்துடன் அன்றைய தினம் யாழில் பூரண கடையடைப்பும் அனுஸ்டிக்கப்பட்டது.
அன்றைய தினம் அமைதிப் போராட்டம் ஒருபகுதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நீதிமன்ற வளாகத்திற்குள் கூடிய ஆர்ப்பாட்டகாரர்களால் நீதிமன்றம் தாக்கப்பட்டதுடன் சிறைச்சாலை , சட்டத்தரணியின் வாகனமும் அடித்து நொருக்கப்பட்டது.
இதனால் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன் கல்வீச்சு தாக்குதல்கள் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீச்சு போன்றன இடம்பெற்றன.
நீதிமன்றம் தாக்கப்பட்டமை தொடர்பாக சுமார் 129 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் யாழில் பதட்டமான சூழ் நிலை உருவாகியிருந்ததுடன் தொடர்ந்தும் அந்த நிலமையே காணப்பட்டு வருகின்றது.
கடந்த 20 ஆம் திகதி முதல் யாழ். மாவட்ட செயலகம், சிறைச்சாலை , நீதிமன்ற வளாகம் , பொலிஸ் நிலையம் மற்றும் யாழ். நகர் ஆகிய பகுதிகளில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடைப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் இருந்தும் விசேட கடமைக்காக பொலிஸாரும் அதிரடிப்படையினரும் அழைக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நீதிமன்றம் தாக்கப்பட்டதன் எதிரொலியாக யாழ். மாவட்டத்திலுள்ள முக்கிய பொலிஸ் அதிகாரிகள் நேற்றையதினம் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பலப்படுத்தாமையே அன்றைய வன்முறைக்கு காரணம் என பல தரப்புக்களாலும் குற்றம்சாட்டப்படும் நிலையில் பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவ்வாறு இருக்க புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து இன்று யாழ் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடாத்துவதற்கு ஏற்பாடாயிருந்தது. எனினும் போராட்டங்கள் நடாத்துவதற்கு யாழ் நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனால் குறித்த போராட்டமும் நிறுத்தப்பட்டது. எனினும் போராட்டங்கள் இடம்பெற கூடும் என்ற எதிர்பார்ப்புடன் குறிப்பிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கவசவாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கலகம் அடக்கும் பொலிஸாரும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் யாழ்ப்பாணம் வழமைக்கு திரும்பாது ஒரு அச்ச நிலையினையே தோற்றுவித்துள்ளது