மக்களுக்கான அரசியல் என்பது நிகழ்தகவுளால் தீர்மானிக்கப்பட்டாலும் அது ஒரு ‘லூடோ’ விளையாட்டல்ல !

தாயக்கட்டையை உருட்டுவதன் மூலம் இலக்கங்களை சம்பாதித்துக் கொள்கின்ற ஒரு விளையாட்டு இப்போதும் சில பகுதிகளில் பிரபலமாக இருக்கின்றது. இதனை ‘லூடோ என்றும் வேறு பெயர்களிலும் அழைப்பர். ஒரு சிறிய கோப்பையினுள் தாயக்கட்டையை போட்டு உருட்டிவிடுகின்ற போது கிடைக்கின்ற இலக்கங்களுக்கு ஏற்ப, ‘லூடோ’ பலகையில் இருக்கின்ற பொத்தான் போன்ற காயின் நகர்வு தீர்மானிக்கப்படும். சிலவேளைகளில் ஏணியின் ஊடாக மேல் அடுக்குக்கு ஏறுவதற்கும், சிலபோதுகளில் பாம்பின் வாயில் சிக்கிக் கொண்டால் திடீரென கீழே விழுவதற்கும் இதில் வாய்ப்புக்கள் உள்ளன. நமது காய் தற்போதிருக்கின்ற நிலையையும் பாம்பு அல்லது ஏணிக்கு இடையிலான தூரத்தையும் அடிப்படையாகக் கொண்டு, தாயக்கட்டையில் என்ன இலக்கம் கிடைக்கும் என்ற நிகழ்தகவே இதனை தீர்மானிக்கின்றது.

அரசியல் நகர்வுகளில், காய் நகர்;த்தல்களில் ஏணியில் ஏறி மேலே செல்வதா எதிர்பாராத தருணம் ஒன்றில் கீழே விழுவதா என்பதை நூறு வீதம் முன்கூட்டியே கணித்துக் கூற முடியாத விடயங்களான நிகழ்தகவுகளே தீர்மானிக்கின்றன. இலங்கையில் கணிசமான முஸ்லிம்களால் ஆத்மார்த்தமாக நேசிக்கப்படுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளும் அதன் தொடராக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற பரஸ்பர பதில் தாக்குதல்களும் சில பல நிகழ்தகவுகளின் அடிப்படையிலேயே நகர்ந்து கொண்டிருக்கின்றன.

கடைசிக்கட்ட உடைவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் ஆகப் பிந்தியதாக ஏற்பட்ட உடைவு கட்சியை கிட்டத்தட்ட மூன்று துண்டங்களாக ஆக்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இதில் மிகப் பெரிய துண்டான மு.கா.கட்சி அதன் தலைவர் றவூப் ஹக்கீமோடு இருக்கின்றது. அடுத்த துண்டமாக கணிசமானோர் அக்கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன்அலியோடு இருக்கின்றனர். இன்னும் ஒரு துண்டமாக முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தோடு இருக்கின்ற நபர்களை குறிப்பிடலாம். ஆக, மு.கா.வின் தலைவருக்கு எதிராக இருமுனை நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், ஹக்கீம் அணியினர் தனித்து நின்று அதனை எதிர்கொள்வதற்கான தந்திரோபாயங்களை வகுத்து செயற்பட்டு வருகின்றனர்.

யார் என்னசொன்னாலும் ஹசன்அலி மற்றும் பசீர் ஆகியோர் தலைவர் ஹக்கீமோடு முரண்பட்டது தலைவரில் மட்டுமல்ல மு.கா. அரசியலிலும் ஒரு குறிப்பிடத்தக்க அதிர்வை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த அதிர்வு தொடர்ந்து நீடிக்குமா, அவ்வாறாயின் அதன் உருவம் என்னவாக இருக்கும் என்பதுதான் இப்போதிருக்கின்ற கேள்வியாகும்.
ஹசன்அலி அணியினர் முரண்பட்ட பின்னர் பகிரங்கமாக மக்கள் மன்றத்தில் களமிறங்கியுள்ளனர். அவர்கள் நடாத்திய கூட்டங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை ஹக்கீம் அணியினரும் உணர்ந்து கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இவ்வாறான கூட்டங்களில் ஹசனலியுடன் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்ஸில், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தாஹிர், பொத்துவில் பிரதேச சபையின் உதவித் தவிசாளர் தாஜூதீன் உள்ளடங்கலாக மு.கா.வின் மூத்த போராளிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளனர். மேலும் சிலர் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஹசனலி அணியினர் நடாத்திய பொதுக் கூட்டங்களில் அவர்கள் ஒரு விடயத்தை தெளிவாகச் சொல்லிவந்தனர். ‘நாம் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகப் போவதில்லை. நாம் கட்சியின் அடிவேர்கள். அதேபோல் தலைவர் றவூப் ஹக்கீமை மாற்ற வேண்டும் என்பது எங்களுடைய அடிப்படை நோக்கமும் அல்ல. மாறாக, அவரை திருத்த வேண்டியுள்ளது’ என்பதை வலியுறுத்தி வந்தனர். தலைவரின் தனிப்பட்ட விடயங்களை இத்தரப்பினர் மேடையில் விமர்சிக்கவில்லை. மாறாக, அரசியல் ரீதியாக ஒரு கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் அவர் மேற்கொண்ட பொருத்தமற்ற நடவடிக்கைகள் தொடர்பாகவே மக்கள் முன் பிரஸ்தாபித்து வந்ததை காணக்கூடியதாக இருந்தது.

தொய்வான நடவடிக்கை
இவ்வாறு ஒருசில கூட்டங்களை நடாத்திவந்த ஹசனலி தரப்பினர் கடந்த இரு வாரங்களாக மக்கள் சந்திப்புக்களையன்றி பொதுக் கூட்டங்களை நடாத்தவில்லை. இது மக்கள் மத்தியில் பல்வேறு மனக் குழப்பங்களை ஏற்படுத்தியது. ஹக்கீமோடு ஹசனலி இணங்கிப் போய்விட்டாரா? அல்லது ஹக்கீம் ஏதோ ஒரு சாணக்கியத்தை பயன்படுத்தி ஹசனலி தரப்பை அடக்கிவிட்டாரா என்ற சந்தேகங்கள் பாமர மக்களின் மனங்களில் தோன்றியுள்ளன.

இந்நிலையில், ‘அம்பாறை மாவட்ட உலமாக்கள் சிலர் பேசுவதற்கு முன்வந்ததாகவும் சில விடயங்களில் மார்க்கத் தீர்ப்பை எதிர்பார்ப்பதாக தமது தரப்பில் அவர்களுக்கு சொல்லப்பட்டு, பேசுவதற்கான சம்மதம் தெரிவிக்கப்பட்டபோதும் இன்னும் அப்பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை’ என்றும் ஹசனலி கூறியுள்ளார். அதேவேளை, ‘தலைவருடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுவிட்டது’ என்று வெளியான தகவலையும் அவர் முற்றாக மறுத்துரைத்துள்ளார்.

எவ்வாறாயினும், ஹசனலி தரப்பினரின் கூட்டங்கள் இடம்பெறவில்லை என்பது ஏன் என்று மக்கள் அங்கலாய்க்கத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக விசாரித்துப் பார்த்ததில் சில விடயங்கள் புலனாகின்றது. அதாவது அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மு.கா. தலைவர் தரப்பின் பதவிசார் ஆதிக்கம் இருக்கின்றது. இதனால் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. அதேபோன்று கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் ஹசனலிக்கு ஆதரவு தெரிவிக்கின்றபோதும் பகிரங்க மேடைகளில் ஏறுவதற்கு அவர்கள் நல்லநாள் பார்ப்பதாக தெரிகின்றது. அதேவேளை, வேறுகட்சிகளின் ஊடாக அல்லாமல் மு.கா. முக்கியஸ்தர்கள் ஊடாகவே பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு ஹசனலி அணியினர் விரும்புவதாக அறிய முடிகின்றது.

இந்தக் காரணத்தினாலேயே கூட்டங்கள் தாமதமாகியுள்ளன. அது மட்டுமன்றி புதிய அணியாக உருவெடுத்துள்ள ஹசனலி தரப்பினர் தமது தந்திரோபாய நகர்வுகள் குறித்து மந்திராலோசனைகளை நடாத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நிலைமைகளைச் நாடிபிடித்துப் பார்த்து சமப்படுத்தும் முயற்சியாக இவ்வார பிற்பகுதியில் அம்பாறை மாவட்டத்தில் மு.கா. தலைவர் பங்கேற்கும் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவர் அதில் முக்கிய கருத்துக்களை தெரிவிப்பார் என எதிர்பார்;க்கப்பப்பட்டது. இக்கூட்டங்களில் தலைவர் ஹக்கீமின் எதிர்வினைகள் எவ்வாறு அமைகின்றன என்பதைப் பொறுத்து ஹசனலி தரப்பின் அடுத்த கூட்டம் அமையக் கூடும்.

மறுபுறத்தில், பசீர் சேகுதாவூத் மௌனம் காப்பது ஒரு மர்மமான விடயமாக நோக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் ‘அந்த ஆதாரத்தை வெளியிடுவேன் இந்த ஆதாரத்தை வெளியிடுவேன்’ என்று சொன்னவர் இப்போது சத்தமின்றி இருக்கின்றார். அப்படியென்றால், அவரையும் ஹக்கீம் அடக்கிவிட்டாரா அல்லது அவரிடம் எந்த ஆதாரமும் கைவசம் இல்லையா என்று சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இது தொடர்பாக பசீருக்கு நெருக்கமானவர்களுடன் வினவியபோது, ‘பசீரின் நடவடிக்கைகளை நாடிபிடித்துப் பார்ப்பது மிகக் கடினம் என்றும், அவர் மிகவும் பலமான நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றார் என்றும் உரியநேரத்தில் எல்லாம் நடக்கும்’ என்றும் சொல்கின்றனர்.

தலைவரின் அதிரடி
மு.கா.தலைவர் றவூப் ஹக்கீமுடன் முரண்பட்டிருக்கின்ற அணியினரின் செயற்பாடுகள் இவ்விதம் இருக்கத் தக்கதாக, களத்தில் என்ன நடக்கின்றது, சவால்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதை உய்த்தறிந்து அதற்கான பதிலடிகளையும் வியூகங்களையும் ஹக்கீம் மேற்கொள்வதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. அந்த வகையில், கட்சியின் உயர்பீடத்தில் இருந்தும் மேலும் பதவிகளில் இருந்தும் சிலர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர் அல்லது நீக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்திற்கு 50 இற்கு மேற்பட்டோரை தெரிவு செய்கின்ற அதிகாரம் கட்சியின் தலைவர் என்ற வகையில் றவூப் ஹக்கீமுக்கு உள்ளது. தனக்கு விருப்பமில்லாத யாரையும் தெரிவு செய்யாமல் விடுவதற்கும் தனக்கு விருப்பமான ஒருவரை உயர்பீடத்திற்கு நியமிப்பதற்கும் அவருக்கு அதிகாரமிருக்கின்றது. அந்த வகையில், கட்சியின் உயர்பீடத்தில் இருந்து பலர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்தவாரம் இடம்பெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் வைத்து எம்.ஏ. அன்ஸில் நீக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் வகித்துவந்த கட்சியின் அரசியல் விவகார செயலாளர் பதவி மற்றும் பாலமுனை பிரதேச அமைப்பாளர் பதவி ஆகியவற்றில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவருக்கு உத்தியோகபூர்வமாக இது அறிவிக்கப்படவில்லை என தெரியவருகின்றது.

அன்ஸிலுக்கு முன்னதாகவே மேலும் பலரை கட்சியின் தலைவர் உயர்பீடத்தில் இருந்து யாரும் அறியா விதத்தில் நீக்கியிருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகின்றது. குறிப்பாக ஹசன்அலி, பசீர் சேகுதாவூத், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர், நற்பிட்டிமுனையைச் சேர்ந்த தௌபீக் உள்ளடங்கலாக ஐந்து அல்லது ஆறுபேர் நீக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இவர்களுக்கு கடந்த உயர்பீடக் கூட்டத்திற்கு அழைப்பு கிடைக்கவும் இல்லை, நீக்கப்பட்டதாக அறிவிக்கப்படவும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அப்படிப் பார்த்தால், எதிரணியினரின் உயர்பீட அந்தஸ்தை அதிரடியாக நீக்கியுள்ளார் ஹக்கீம். ஆனால் கட்சி இது தொடர்பாக உத்தியோகபூர்மவாக அறிவிக்கவில்லை. அதுமட்டுமன்றி, மு.கா.வின் உயர்பீடத்திற்கு மொத்தம் 90 பேரை நியமிக்க முடியும் என்றிருக்கையில் இதுவரை சுமார் 80 பேரையே தலைவர் நியமித்துள்ளதாகவும் மீதமுள்ள இடங்களை இன்னும் நிரப்பாமல் வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

இதேவேளை, இன்னுமொரு முக்கிய நியமனமும் கடந்த உயர்பீடக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, கட்சியில் வெற்றிடமாகியிருந்த செயலாளர் பதவிக்கு முழக்கம் மஜீத் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டமை நல்ல விடயமே. ஆனால், ஒரு கட்டாய உயர்பீடக் கூட்டத்திலேயே பதவிவழி நியமனங்களை மேற்கொள்ள முடியும் என்று ஹசனலி விடயத்தில் கூறப்பட்டுவந்த நிலையில், ஒரு கட்டாய உயர்பீடத்தில் தீர்மானிக்கப்பட்டு வெற்றிடமான ஒரு பதவி எனக் கருத முடியாத தவிசாளர் பதவிக்கு, ஒரு சாதாரண உயர்பீடத்தில் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை பல்வேறு கோணங்களில் நோக்கப்படுகின்றது.

முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தமட்டில் உயர்பீட அங்கத்துவம் என்பது மிக முக்கிய ஒரு பதவியாகும். கட்சியின் உயர்பீடத்தில் கிராமப்புற மக்களின் பிரதிநிதிகளாக அவர்கள் நோக்கப்படுகின்றனர். அந்தவகையில், பலரின் உயர்பீட உறுப்புரிமையையையும் அன்ஸிலின் இரு பதவிகளும் நீக்கப்பட்டமை சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு இழப்பு என்பதை மறுப்பதற்கில்லை. மு.கா. தலைவர் இவ்வாறான பதிலடியைக் கொடுப்பதன் மூலம் கட்சிக்குள் தளம்பல் நிலையில் இருக்கின்ற ஏனையோருக்கும் ஒரு செய்தியைச் சொல்லியிருக்கின்றார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், ஹசனலியும் பசீரும் அன்ஸிலும் தாஹிரும் இதுவெல்லாம் நடக்கும் என்று எதிர்பாராமல் தமது போராட்டத்தில் களமிறங்கியிருக்க மாட்டார்கள். அதுமட்டுமன்றி, இன்று கட்சியிருக்கின்ற நிலையில் மு.கா.வின் உயர்பீட அந்தஸ்தை வைத்துக் கொண்டு மக்களுக்கு எதையும் சாதிக்க முடியாது என்றும், ஒரு பார்வையாளராக கலந்து கொள்வதை தவிர வேறு எதுவும் உயர்பீட உறுப்பினருக்கு கிடைப்பதில்லை என்றும் அவர்கள் சொல்கின்றனர்.
எது எப்படியோ, பல கூறுகளாக பிரிந்திருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதிகளுக்கு இடையிலான இந்த பனிப்போரும், எதிர்த்தாக்குதலும், ஏற்கனவே இருந்த நிகழ்தகவுகளில் எவ்விதமான மாற்றத்தை உண்டுபண்ணக்கூடும் என்பது பற்றி இச்சந்தர்ப்பத்தில் சிந்திக்க வேண்டியுள்ளது.

பலமும் பலவீனமும்
மு.கா. தலைவருக்கு எதிரான பிரசாரத்தில் எதிரணியினருக்கு சவாலாக இருக்கின்ற விடயங்கள் பல இருக்கின்றன. இது மு.கா.வின் அல்லது ஹக்கீம் தரப்பின் பலம் எனக் கூறமுடியும். இதில் முக்கியமானது ‘கட்சியைக் காப்பாற்றுதல்’ என்ற தாரக மந்திரமாகும். இந்நிலையில், எதிர்த்தரப்பினரின் நடவடிக்கை கட்சியை அழிக்கும் முயற்சியாக சித்திரிக்கப்படும் போது ஹக்கீமுக்கு அது பலமாக அமையும்.

மு.கா. தலைவர் கட்சிக்குள் வழங்கியுள்ள பதவிகள், இணைப்பதிகாரி பதவிகள், தொழில்களும் அதிலிருந்து கிடைக்கின்ற வருமானங்களும் கட்சித் தலைவருக்கான ஆதரவுத் தளத்தை பலப்படுத்துவதாகவே காணப்படும். அதேவேளை, கட்சிக்குள் இருந்து ஹசனலியும் பசீரும் போனால் தமது செல்வாக்கு அதிகரிக்கும் என நினைப்போர் ஹக்கீமுக்கு இன்னும் அதிகம் பலம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

ஹசனலி அல்லது பசீர் போன்றோர் பதவிகளுக்காகவே இதைச் செய்ததாகவும் இவ்வளவு காலமும் ஏன் மௌனமாக இருந்தார்கள் என்ற கேள்வியும் தலைவரின் தரப்பால் முன்வைக்கப்படுகின்றது. இது உண்மையில் மறுதரப்பினருக்கு சவாலான ஒரு கருத்தியலாகும். இருபது வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த கணவனும் மனைவியும் பிரிவதில்லையா என்று இவர்கள் நியாயபூர்மவாக கேட்க முனைந்தாலும் சிலர் விதண்டாவாதமாக அதே கேள்வியை திரும்பத்திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

மிக, முக்கியமாக நன்றாக வளர்ந்து கட்டமைக்கப்பட்ட கட்சியும், அமைச்சுப் பதவியும் ஏனைய பல எம்.பிக்களின் ஆதரவும் தலைவருக்கு பலமாகும். இவ்வாறு இருந்து கொண்டு அரசியல் செய்வதைக் காட்டிலும் பதவிகள் இல்லாமல், பணத்தை வாரி இறைக்காமல் மக்கள் முன்னே ஹசனலி போன்றேர் அரசியல் செய்வது என்பது ஆரம்ப காலத்தில் மு.கா.வை வளர்த்த நிலைமைக்கு ஒப்பானதாகவே இருக்கும். இப்படி நிறைய பலங்கள் மு.கா. தலைவருக்கு சார்பாக இருக்கின்றன.
ஆனால், மாற்று அணியினருக்கு பலமான நிலைமைகளும் உள்ளன. மாற்று அணிகளை பசீர் மற்றும் ஹசனலி என இரு பிரிவுகளாகவே நோக் வேண்டியிருக்கின்றது.

குறிப்பாக, மறைக்கப்பட்;ட மர்மங்கள் என்ற புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டமை தொடர்பில் மு.கா. சார்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பசீர் சேகுதாவூத் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, மு.கா. தரப்பினரின் முறைப்பாட்டுக்கு அமைய இடம்பெற்ற வழக்கு விசாரணையில் மேற்படி புத்தகத்தின் உண்மைத் தன்மை குறித்து ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பசீர் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். இது உண்மையாயின், புத்தகத்தின் உண்மைத்தன்மை குறித்து பொலிசார் எடுக்கும் முடிவுகள் ஹக்கீம் தரப்பிற்கு பாதகமாக அமையவும் நிகழ்தகவுகள் உள்ளன.

இதுவரை மு.கா. தலைவர் தனது அரசியல் நடவடிக்கைகளின் ஊடாக மேற்கொண்ட தவறுகள், செய்யத் தவறிய நல்ல காரியங்கள் குறித்து எதிரணியினர் மேடைகளில் பேசி வருகின்றனர். இது எதிரணிக்கு பலமாக அமையும். சமகாலத்தில் பசீர் ஏதாவது ஆதாரங்களை வெளியிடுவார் என்றால் அதுவும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதுபோல இன்னும் பல பலங்களை குறிப்பிட முடியும்.
ஒரு தரப்பின் பலவீனம் இன்னுமொரு தரப்பிற்கு பலமாக அமையும் என்பது பொதுவான நியதி. ஆனால் தமது பலவீனங்களை சரி செய்யாமல் எதிர்தரப்பின் பலவீனங்களை நம்பி அரசியல் செய்வது வளர்ந்து பக்குவப்பட்ட ஒரு அரசியலுக்கு அழகல்ல. அந்தவகையில், மு.கா. எதிரணியினர் எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் வெறுமனே தலைவர் மீதே சுமத்திக் கொண்டிருக்காமல், தலைவர் செய்த தவறுகளை பொறுத்துக் கொண்டதன் மூலம் அதில் தமக்கிருந்த பங்கினையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல் மு.கா.தலைவர் எதிர்தரப்புக்கு எதிர்தாக்குதல் மேற்கொள்தல் என்ற கோதாவில், ‘கட்சியை விட்டுப் போகமாட்டோம்’ என்று சொல்கின்றவர்கள் வெளியேறிப் போகும் நிலையை ஏற்படுத்தி விடக் கூடாது.
மக்களுக்கான அரசியல் என்பது, நிகழ்தகவுளால் தீர்மானிக்கப்பட்டாலும், அது ஒரு ‘லூடோ’ விளையாட்டல்ல !

– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 02.04.2017)