நபிகளார் “உங்களுடைய இந்த வாழ்த்தைவிட மிகச் சிறந்தது ‘சலாம்’தான். ’உங்களின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் – அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற வாழ்த்தே இறைவனுக்கு விருப்பமானது”.
பத்ருப் போருக்குப் பிறகு, தங்களது எல்லாப் பொருட் சேதங்களுக்கும், அவமானங்களுக்கும் காரணமான முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்ய வேண்டுமென்று சிலர் எண்ணினர். மக்காவைச் சேர்ந்த உமைர் இப்னு வஹப் மற்றும் ஸஃப்வான் இப்னு உமைய்யா இதற்கான திட்டத்தைத் தீட்டினார். உமைரின் கடன்களை நிறைவேற்றுவதாகவும், அவருடைய குடும்பத்தைத் தனது குடும்பம்போல் பார்த்துக் கொள்வதாகவும் ஸஃப்வான் உறுதியளித்து உமைரை நபிகளாரை கொலை செய்யத் தூண்டினான். உமைர் தனது மகன் வஹப், பத்ர் போரில் சிறைப்பிடிக்கப்பட்டதால் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மீது மிகுந்த கோபத்தில் இருந்தான். அதன் காரணமாக ஸஃப்வான் சொன்னதும், அவ்விருவரும் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்ட பின், மதீனாவிற்கு உமைர் தனது கூரிய வாளுடன் புறப்பட்டார்.
மதீனாவில் நுழைந்த உமைரை, நபித் தோழர் உமர்(ரலி) அவர்கள் கவனித்துவிட்டார்கள். கடும் கோபத்துடன் அவன் வந்ததைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். நபிகளார் உமைரைத் தம்மிடம் அழைத்து வரும்படி கேட்டுக் கொண்டார்கள். உமைரை நம்பாத உமர்(ரலி) அவர்கள், நபிகளாரின் அருகில் சிலரை காவலுக்கு நிறுத்திவிட்டு உமைரை இழுத்து வந்தார்கள்.
உமர்(ரலி) அவர்களிடம் நபி முஹம்மது (ஸல்) உமைரை விட்டுவிடும்படி கேட்டார்கள். உடனே உமைரும் தம் குரலை தாழ்த்தி நல்லவிதமாக “உங்களின் காலைப் பொழுது பாக்கியமாகட்டும்” என்று நபிகளாருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதற்கு நபிகளார் “உங்களுடைய இந்த வாழ்த்தைவிட மிகச் சிறந்தது ‘சலாம்’தான். ’உங்களின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் – அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற வாழ்த்தே இறைவனுக்கு விருப்பமானது” என்றார்கள். அத்தோடு உமைர் வந்த காரணத்தையும் வினவினார்கள். அதற்கவன் தன் மகன் அங்குக் கைதியாக இருப்பதைப் பற்றிச் சொன்னான். தன் மகனிடம் நல்லமுறையில் நடந்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டான்.
அதற்கு நபி முஹம்மது (ஸல்), “உன் மகனுக்காக வந்த நீ, ஏன் கூரிய வாளுடன் வந்தாய்?” என்று கேட்க, அதற்கவன் “இந்த வாள்தான் எங்களுக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லையே” என்று அதிருப்தியுடன் கூறினான்.
புன்முறுவலுடன் நபிகளார் “நீ வந்த நோக்கத்தையும் ஸஃப்வானுடன் நீ செய்து கொண்ட ஒப்பந்தத்தைக் குறித்தும் நான் அறிவேன். ஆனால், இப்போது உன் நோக்கத்திற்குத் தடையாக அல்லாஹ் இருக்கிறான்” என்றார்கள்.
இதைக் கேட்ட உமைர் “நீங்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன். இறை அறிவுப்புகளை நீங்கள் எங்களுக்குக் கூறியபோது நாங்கள் உங்களைப் பொய்யர் என்றோம். நானும் ஸஃப்வானும் செய்து கொண்ட ஒப்பந்தம் இரகசியமானது. நாங்கள் பேசும்போதும் அங்கு யாருமே இருக்கவில்லை.
இறைவன்தான் உங்களுக்கு இச்செய்தியை அறிவித்தான் என்று நான் நம்புகிறேன். நான் நல்வழியில் செல்ல வேண்டும் இஸ்லாமின் பக்கம் சரியான பாதைக்கு வர வேண்டும் என்பதற்காகவே என்னை அல்லாஹ் இங்கு அனுப்பியுள்ளான். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே” என்று கூறி இஸ்லாத்தை ஏற்கிறேன் என்று உறுதிமொழியெடுத்து மனமார இஸ்லாத்தை ஏற்றார்.
நபி முஹம்மது (ஸல்) அவர்கள், தம் தோழர்களிடம் “உங்களின் சகோதரருக்கு மார்க்கச் சட்டங்களையும் குர்ஆனையும் கற்றுக் கொடுங்கள். அவரது கைதியை விடுதலை செய்யுங்கள்” என்று கூறினார்கள்.
பழி தீர்க்கச் சென்ற உமைர் நபிகளாரைக் கொன்ற செய்தியைத் தருவான் என்று மக்காவில் ஸஃப்வான் காத்திருந்தான். விரைவில் நல்ல செய்தி வரவிருக்கிறது என்று மக்காவாசிகளிடமும் கூறி வந்தான். அவனிடம் வந்த நற்செய்தியானது ’உமைர் முஸ்லிமாகிவிட்டார், இஸ்லாத்தைத் தழுவிவிட்டார்’ என்பதே. இச்செய்தியைக் கேட்ட ஸஃப்வான் அதிர்ச்சியில் உறைந்தான்.
இஸ்லாமியக் கல்வியை உமைர் மதீனாவில் கற்று சில நாட்களுக்குப் பிறகு மக்கா திரும்பினார். மக்காவில் மக்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தார். அவரால் பலர் இஸ்லாமைத் தழுவினர் என்பது வரலாறு.
இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்
– ஜெஸிலா பானு.