சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனனை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பிரசாரத்தை நேற்று தொடங்கினார். நாகூரான் தோட்டத்தில் மீனவர் காலனி பகுதியில் வீதி, வீதியாக சென்று மது சூதனனுக்கு ஆதரவாக அவர் வாக்குகள் சேகரித்தார்.
தொகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும் பூரண கும்ப மரியாதை அளித்தும் அவர்களை வரவேற்றனர். மொட்டை மாடிகளில் இருந்து பூக்களை தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்கள் உற்சாகத்தில் வாகனத்தின் மூலமும், நடந்து சென்றும் ‘இரட்டை மின்விளக்கு’ சின்னத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு திரட்டினார்.
அவருடன் டாக்டர் மைத்ரேயன் எம்.பி., முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், பொன்னையன், கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.சி.டி. பிரபாகர், ஓய்வு பெற்ற டி.ஜி.பி.திலகவதி, ஆர்.எஸ்.ராஜேஷ், ஆர்.வி.ரஞ்சித்குமார் உள்பட நிர்வாகிகளும் வாக்கு சேகரித்தனர்.
பிரசாரத்தின்போது ஓ.பன்னீர்செல்வம், பேசியதாவது:-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனன் ஜெயலலிதாவின் அன்பை பெற்றவர். எம்.ஜி.ஆரால் தளபதி என்று பாராட்டப்பட்டவர். அப்படிப்பட்ட பெருமைகளை கொண்ட அவர் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி வேட்பாளராக களத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்கு மாற்று வேட்பாளராக மதுசூதனனைத் தான் அறிவித்தார்.
அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். மக்கள் இயக்கமாக உருவாக்கி தந்தார். அதனை எந்த கொம்பாதி, கொம்பனாலும் அசைக்க முடியாத இரும்பு கோட்டையாக மாற்றியவர் ஜெயலலிதா. 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று 5 ஆண்டுகாலம் சாதனை ஆட்சி புரிந்தவர் ஜெயலலிதா. தொடர்ந்து 2014-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றிப்பெற்று சரித்திர சாதனையை உருவாக்கியவர். அந்த மகத்தான தலைவரின் இழப்பு உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனதில் தீராத வடுவாக இருக்கிறது.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சு அவிழும் வரை எங்களுடைய தர்மயுத்தம் தொடரும். ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற மதுசூதனனுக்கு எதிராக டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். டி.டி.வி.தினரகன் 2007-ம் ஆண்டு ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டவர். அரசியலில் ஈடுபடக்கூடாது, பாராளுமன்றம் செல்லக்கூடாது என்று ஜெயலலிதா அவருக்கு உத்தரவிட்டார்.
நான் உயிரோடு இருக்கும் வரை அவருக்கு எந்த பொறுப்பும் வழங்கமாட்டேன் என்று ஜெயலலிதா கூறினார். அப்படிப்பட்டவர் இன்று மதுசூதனனை எதிர்த்து போட்டியிடுகிறார். சசிகலா குடும்பம் கட்சியையும், ஆட்சியையும் கபளகரம் செய்யும் சூழ்ச்சியை தமிழக மக்கள் அறிந்திருக்கிறார்கள்.
எங்களுக்கு ஆர்.கே.நகரில் மக்கள் எழுச்சி மிகு ஆதரவு தருகிறார்கள். எனவே ஆர்.கே.நகரில் எங்கள் வேட்பாளர் மதுசூதனனை எதிர்த்து போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள். வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வாக் காளர்கள் பெற்றுத்தரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.