பெங்களூரு அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னை !

எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு சென்னை அணி முன்னேறியது. நேற்று நடந்த தகுதிச் சுற்று-2ல் மைக்கேல் ஹசியின் அரைசதம் கைகொடுக்க, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி வெளியேறியது.
ராஞ்சியில் நேற்று நடந்த 8வது ஐ.பி.எல்., தொடருக்கான தகுதிச் சுற்று-2ல் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.  

213913.3
நெஹ்ரா மிரட்டல்:  
பெங்களூரு அணிக்கு கிறிஸ் கெய்ல், கேப்டன் விராத் கோஹ்லி இணைந்து துவக்கம் தந்தனர். நெஹ்ரா வீசிய 3வது ஓவரில் அதிரடி காட்டிய கோஹ்லி தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். இந்நிலையில் 5வது ஓவரை வீசிய நெஹ்ரா இரட்டை ‘அடி’ கொடுத்தார். இந்த ஓவரின் முதல் பந்தில் கோஹ்லியை (12) அவுட்டாக்கிய இவர், கடைசி பந்தில் டிவிலியர்சை (1) பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்து வந்த மன்தீப் சிங் (4), அஷ்வின் ‘சுழலில்’ சிக்கினார்.  
கெய்ல் ஆறுதல்:
விக்கெட் ஒருபுறம் சரிந்ததால், நிதானமாக ஆடிய கெய்ல், அஷ்வின், மோகித் சர்மா பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த தினேஷ் கார்த்திக், ரெய்னாவின் 12வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாசினார். ரெய்னா பந்தில் தொடர்ச்சியாக இரண்டு சிக்சர் அடித்த கெய்ல் (41) ஆறுதல் தந்தார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த தினேஷ் கார்த்திக் (28) நெஹ்ரா ‘வேகத்தில்’ வெளியேறினார். டுவைன் பிராவோ பந்தை சிக்சருக்கு அனுப்பிய டேவிட் வைஸ் (12) நிலைக்கவில்லை. ஹர்சால் படேல் (2) ‘ரன்-அவுட்’ ஆனார். பொறுப்பாக ஆடிய சர்பராஸ் கான் (31) ஓரளவு கைகொடுத்தார்.
பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 மட்டும் ரன்கள் எடுத்தது. ஸ்டார்க் (1) அவுட்டாகாமல் இருந்தார்.
சென்னை அணி சார்பில் நெஹ்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.
ஸ்மித் ஏமாற்றம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித், மைக்கேல் ஹசி ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. ஸ்மித் (17), அரவிந்த் பந்தில் அவுட்டானார். பெங்களூரு அணியின் சொதப்பலான பீல்டிங்கை பயன்படுத்திக் கொண்ட ஹசி, டுபிளசி ஜோடி நிதானமாக ரன் சேர்த்தது. 10வது ஓவரை வீசிய சாகல், டுபிளசி (21), ரெய்னாவை (0) அவுட்டாக்கி திருப்பம் தந்தார்.
ஹசி அரைசதம்:
தனது அனுபவ ஆட்டத்தை தொடர்ந்த ஹசி, சாகல் பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதத்தை பதிவு செய்தார். வைஸ் பந்தில் ஹசி (56) வெளியேறினார். ஹர்சால் பந்தில் சிக்சர் அடித்த நேகி (12) ‘ரன்-அவுட்’ ஆனார். ஸ்டார்க் ‘வேகத்தில்’ டுவைன் பிராவோ (0) போல்டானார்.

213975.3
‘திரில்’ வெற்றி:
சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டன. ஹர்சால் படேல் பந்துவீசினார். முதல் பந்தில் தோனி 2 ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் ரன் இல்லை. 3வது பந்தில் 2 ரன் கிடைத்தது. நான்காவது பந்தில் தோனி (26) அவுட்டாக, 2 பந்தில் ஒரு ரன் தேவை என ‘டென்ஷன்’ ஏற்பட்டது. ஐந்தாவது பந்தில் அஷ்வின் ஒரு ரன் எடுக்க, சென்னை அணியின் வெற்றி உறுதியானது.
சென்னை அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அஷ்வின் (1), அவுட்டாகாமல் இருந்தார். பெங்களூரு அணி சார்பில் சாகல் 2 விக்கெட் வீழ்த்தினார். 
மும்பை அணியுடன் மோதல்
கோல்கட்டாவில் நாளை நடக்கவுள்ள பைனலில் சென்னை, மும்பை அணிகள் மோத உள்ளன. இம்முறை தகுதிச் சுற்று-1ல் மும்பை அணியிடம் சந்தித்த தோல்விக்கு பைனலில் சென்னை அணி பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
500
நெஹ்ரா பந்தை சிக்சருக்கு அனுப்பிய பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி, இம்முறை 500 ரன்களை கடந்த 4வது வீரர் என்ற பெருமை பெற்றார். இவர், 16 போட்டியில் 3 அரைசதம் உட்பட 505 ரனகள் எடுத்துள்ளார். ஏற்கனவே ஐதராபாத்தின் டேவிட் வார்னர் (562 ரன், 14 போட்டி), ராஜஸ்தானின் அஜின்கியா ரகானே (540 ரன், 14 போட்டி), பெங்களூருவின் டிவிலியர்ஸ் (513 ரன், 16 போட்டி) ஆகியோர் இம்மைல்கல்லை எட்டினர்.
* தவிர இவர், ஐ.பி.எல்., அரங்கில் 3வது முறையாக ஒரு தொடரில் 500 அல்லது அதற்கு மேல் ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன் 2013 (634 ரன்), 2011 (557 ரன்) தொடரில் இந்த இலக்கை அடைந்தார்.
மாறிய வரலாறு
ஐ.பி.எல்., அரங்கில் மே 22ல் நடந்த போட்டியில் இரண்டு முறை (எதிர்- 2011ல் பெங்களூரு, 2014ல் ஐதராபாத்) சென்னை அணி தோல்வியை தழுவியது. ஆனால் இந்த சோகமான வரலாறு நேற்றைய போட்டியில் தலைகீழானது. சென்னை அணி வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.
5…6…7…
சென்னை அணி, பேட்டிங்கின் போது 5வது ஓவரில் 5 ரன், 6வது ஓவரில் 6 ரன், 7வது ஓவரில் 7 ரன் எடுத்தது சற்று வித்தியாசமாக இருந்தது.
சொதப்பல் பீல்டிங்
நேற்று பெங்களூரு அணியின் ‘பீல்டிங்’ படுமோசமாக இருந்தது. அரவிந்த் வீசிய 4வது ஓவரின் 2வது பந்தில் ஒரு ரன் கூட எடுக்காத நிலையில் டுபிளசி கொடுத்த ‘கேட்ச்’ வாய்ப்பை கெய்ல் நழுவவிட்டார். பின், இந்த ஓவரின் 3வது பந்தில் 3 ரன்கள் எடுத்திருந்த மைக்கேல் ஹசி துாக்கி அடித்த பந்தை ஹர்சால் படேல் கோட்டைவிட்டார். டேவிட் வைஸ் வீசிய 7வது ஓவரின் 2வது பந்தில் 11 ரன்கள் எடுத்திருந்த ஹசி கொடுத்த ‘கேட்ச்’ வாய்ப்பை தினேஷ் கார்த்திக் நழுவவிட்டார். ஒரு சில ‘ரன்-அவுட்’ வாய்ப்புகளும் வீணடிக்கப்பட்டன. இதனை பயன்படுத்திக் கொண்ட ஹசி அரைசதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டார்.
6வது முறை
தகுதிச் சுற்று-2ல் பெங்களூரு அணியை வீழ்த்திய சென்னை அணி, ஐ.பி.எல்., அரங்கில் 6வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. முன்னதாக விளையாடிய 5 பைனலில் 2ல் (2010, 2011) வெற்றி பெற்று கோப்பை வென்றது. மூன்றில் (2008, 2012, 2013) தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தது. கடந்த 2009ல் அரையிறுதி வரை முன்னேறிய சென்னை அணி, கடந்த ஆண்டு ‘பிளே-ஆப்’ சுற்றோடு திரும்பியது.
* ஐ.பி.எல்., தொடரின் பைனலில் சென்னை, மும்பை அணிகள் மூன்றாவது முறையாக (2010, 2013, 2015) மோத உள்ளன. முன்னதாக மோதிய 2 பைனலில் இரு அணிகளும் தலா ஒரு முறை (2010ல் சென்னை, 2013ல் மும்பை) வெற்றி பெற்று கோப்பை வென்றன.
கோல்கட்டாவில் பைனல்
கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை இரவு 8 மணிக்கு துவங்கவுள்ள பைனலில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் சென்னை அணி வெல்லும் பட்சத்தில் 3வது முறையாக கோப்பையை கைப்பற்றலாம். மும்பை அணி வென்றால் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லலாம்.