ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக, இன்று காலை, 11 மணிக்கு முதல்வராக
பதவியேற்கிறார்; அவருடன், 28 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். வனத்துறை அமைச்சர் ஆனந்தன், இலாகா இல்லாத அமைச்சர் செந்துார்பாண்டியன் ஆகியோர், புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. சென்னை பல்கலைக்கழக நுாற்றாண்டு விழா மண்டபத்தில் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது; ஜெயலலிதா முதல்வரானார். கடந்த செப்., 27ம் தேதி, சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்றதால், ஜெயலலிதா தான் வகித்து வந்த, முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார்; அவரது அமைச்சரவையில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இருந்த, அதே அமைச்சர்கள் அனைவரும் இடம்பெற்றனர்.உடல்நிலை சரியில்லாமல், இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் செந்துார்பாண்டியன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடமிருந்த இந்துசமய அறநிலையத் துறை, உணவுத் துறை அமைச்சர் காமராஜிடம், கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.செந்துார்பாண்டியன், இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் சிக்கியதால், ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி அமைச்சர் பதவியில்
இருந்து நீக்கப்பட்டார்; அவர் கவனித்து வந்த, வேளாண் துறை, கூடுதல் பொறுப்பாக, வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 11ம் தேதி, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து, ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை
தொடர்ந்து, அவர் முதல்வராக பதவியேற்பதற்காக, பன்னீர்செல்வம், நேற்று, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் போது, அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும்; மூத்த அமைச்சர்கள் கூட, நீக்கப்படலாம் என, தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், நேற்று காலை, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், சட்டசபைஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.அந்த தீர்மானத்தை, கவர்னரை நேரில் சந்தித்து, ஓ.பி.எஸ்., வழங்கினார். அதை தொடர்ந்து, ஜெயலலிதாவை ஆட்சி அமைக்க வரும்படி, கவர்னர் அழைப்பு விடுத்தார்.மதியம் கவர்னரை சந்தித்த ஜெயலலிதா, தன்னுடன் பதவியேற்க உள்ள, அமைச்சர் பட்டியலை, அவரிடம் வழங்கினார்; அதில், புதிய அமைச்சர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த அமைச்சர்களில், அமைச்சர்கள் செந்துார்பாண்டியன், ஆனந்தன், ஆகியோர் மட்டும் இடம்பெறவில்லை.
ஆனந்தன் கவனித்து வந்த வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம், கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது.பன்னீர்செல்வம் அமைச்சரவையில், அவரையும் சேர்த்து, 30 அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர்; தற்போது, ஜெயலலிதா அமைச்சரவையில், அவர் உட்பட, 29 பேர் இடம்பெற்று உள்ளனர்.ஜெயலலிதா முதல்வராகவும், 28 பேர் அமைச்சர்களாகவும், இன்று காலை 11:00 மணிக்கு பதவியேற்கின்றனர். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள, நுாற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், கவர்னர் ரோசையா, பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
புதிய அமைச்சர்கள் பட்டியல்:
1. ஜெயலலிதா -உள்துறை மற்றும் காவல் துறை
2. பன்னீர்செல்வம்- நிதித் துறை, பொதுப்பணித் துறை
3. நத்தம் விஸ்வநாதன்- மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை
4. வைத்திலிங்கம் – வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் வேளாண் துறை
5. எடப்பாடி பழனிச்சாமி- நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை மற்றும் வனத்துறை
6. மோகன் – ஊரகத் தொழில் துறை மற்றும் தொழிலாளர் நலத் துறை
8. பழனியப்பன் – உயர்கல்வித் துறை
9. செல்லுார் ராஜூ – கூட்டுறவுத் துறை
10. காமராஜ் – உணவு மற்றும் அறநிலையத் துறை
11. தங்கமணி – தொழில் துறை
12. செந்தில் பாலாஜி – போக்குவரத்துத் துறை
13. எம்.சி.சம்பத்- வணிகவரி மற்றும் பதிவுத் துறை
14. வேலுமணி- நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி
15. சின்னையா- கால்நடை பராமரிப்பு துறை
16. கோகுலஇந்திரா- கைத்தறி மற்றும் துணி நுால் துறை
17. சுந்தர்ராஜ்- விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்
18. சண்முகநாதன்- சுற்றுலாத் துறை
19. சுப்ரமணியன்- ஆதிதிராவிட நலத் துறை
20. ஜெயபால்- மீன்வளத் துறை
21. முக்கூர் சுப்ரமணியன்- தகவல் தொழில்நுட்பத் துறை
22. உதயகுமார்- வருவாய் துறை
23. ராஜேந்திர பாலாஜி- செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை
24. பி.வி.ரமணா- பால்வளத் துறை
25. கே.சி.வீரமணி- பள்ளிக்கல்வித் துறை
26. தோப்பு வெங்கடாசலம்- சுற்றுச்சூழல் துறை
27. பூனாட்சி- கதர் மற்றும் கிராம தொழில் வாரியத் துறை
28. அப்துல்ரஹீம்- பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை
29. விஜயபாஸ்கர்- மக்கள் நல்வாழ்வுத் துறை