பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டது எனக் கூறுவது போன்றது தான் ஹரீஸின் அறிக்கை

வரலாற்றுத் தேவைக்காய் ஒன்று கூடுவோம் என்ற முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் அழைப்புதொடர்பில் பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்களின் அறிக்கை பார்க்கக்கிடைத்தது.
அரசியலில் ஒரு தலைவரின் கொள்கை என்பது அவரது உருவப்படமும், அவரது சின்னமும், அவரது பெயரும் கட்சியின் பெயரும் அல்ல. அது கொள்கை சார்ந்ததாகும்.

தலைவர் அஸ்ரப் அவர்கள் அரசியலில் தேசிய கட்சிகளுடன் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் சங்கமித்திருந்த முஸ்லிம் சமூகத்தை தனித்துவமான அரசியல் பாதைக்கு அழைப்பதற்கான பிரதான காரணி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட வரலாற்றுத் துரோகங்களாகும்.

ஐக்கியதேசியக் கட்சியை விட்டும் முஸ்லிம்களை வெளியேற்றி ஐக்கியதேசியக் கட்சிக்கு எதிராக சந்திரிகா அம்மையார் தலைமையிலான கட்சியை ஆட்சிக்கு கொண்டுவந்து முஸ்லிம் சமூகத்திற்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காக பாடுபட்டார்.
ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருக்கும் வரை அக் கட்சியோடு தனது சமூகத்திற்கு எதுவித தொடர்பும் கிடையாது என ஆணித்தரமாக கூறியிருந்தார். இந்தக் கொள்கையை தலைவர் அஸ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் தொடர்ந்தும் பின்பற்றிவருபவர் யார் என்பது பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தும் அரசியலுக்காக பொய் கூறுகிறார். 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் அதற்கு முன்னரும் ஹக்கீமுக்கு எதிராக 37 குற்றச்சாட்டுக்களை முன்வைத்தபோதும் பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் எங்கிருந்தார் என்பதனை இந்த நாடு அறியும்.

தலைவர் அஸ்ரப் அவர்களுக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் இளைஞர்களுக்கு நூற்றுக்கணக்கான தொழில் வாய்ப்புக்களை வழங்கியவர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் மாத்திரமே.
தனக்கு கிடைத்த அமைச்சுக்களை திறம்படக் கையாண்டு கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மூலையையும் அபிவிருத்தி செய்தவரும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் மாத்திரமே. முதன் முதலாக அமைக்கப்பட்ட அக்கரைப்பற்று அஸ்-ஸிராஜ் மகாவித்தியாலய பாடசாலை கட்டிடத்திற்கு அஸ்ரப் மண்டபம் எனப் பெயர் வைத்ததும் பொத்துவிலில் இன்று தொழுகைக்காக பயன்படுத்தப்படுகின்ற கலாசார மண்டபத்திற்கு அஸ்ரப் கலாசார மண்டபம் எனப் பெயரிட்டதும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்களே.

கிழக்குப் பிரிய வேண்டும் என குரல் எழுப்பி பிரபாகரனுக்கு எதிராக தனது உயிரையும் மதியாமல் போர்ப் பிரகடனம் செய்தவரும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவே. தலைவர் அஸ்ரப் அவர்கள் புனித ஹஜ்ஜின் போது குர்பான் கொடுக்கும் சந்தர்ப்பத்தில் பிரபாகரனை அறுப்பதாக நினைத்து அறுத்ததாக சொல்லிய விடயத்தை உன்மைப் படுத்துவதற்காக 2005ம் ஆண்டு இந்தநாட்டில் அரசியல்மாற்றம் ஒன்றை செய்தவரும் தலைவர் அதாஉல்லா அவர்களே.

நாட்டுக்கு விசுவாசமாக இருந்து தேசத் தலைவருக்கு மிகநெருக்கமாக செயற்பட்டு அரச கொள்கை வகுப்பில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை கவனமாக வென்றெடுக்க வேண்டும் என்ற தலைவர் அஸ்ரப் அவர்களின் அரசியல் செல் நெறியை மிகத் திருப்திகரமாக கையாண்டவரும் தலைவர் அதாஉவுல்லாஅவர்கள் மாத்திரமே.
தேசிய கட்சிகளோடு கூட்டமைத்து வெற்றி பெறும் அரசாங்கத்தின் பங்காளியாகி அதிக பிரதிநிதித்துவங்களைக் கொண்டு ஆட்சியைத் தீர்மானிக்க வேணடும்; என்ற பாடத்தை இரண்டு தடவைகள் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நிதர்சனமாக நிரூபித்துக் காட்டியவரும் தாலைவர்அதாஉல்லா அவர்களே.

வடக்கு கிழக்கு இனப்பிரச்சினைத் தீர்வு போன்ற விடயங்களில் தமிழர் தரப்பு முஸ்லிம்களுடன் பேசியாகவேணடும் என்ற அரசியல் நிலைப்பாட்டினை இன்று சாத்தியப்படுத்தியிருப்பவரும் தலைவர் அதாஉல்லா அவர்கள் மாத்திரமே. கடந்த சகல ஆட்சிகளிலும் முஸ்லிம் காங்கிரஸூம் அரசின் பங்காளிகளாக இருந்துவிட்டு அந்த அரசாங்க காலங்களில் நடைபெற்ற தவறுகளுக்கு தலைவர் அதாஉல்லாவை மாத்திரம் குற்றம் சுமத்துவது எவ்வகையிலும் நியாயமானதல்ல.

சகோதரர் ஹரீஸ் அவர்களின் தலைவர் றவுப் ஹக்கீம் அவர்கள் நீதியமைச்சராக இருந்தபோது இந்நாட்டு முஸ்லீம்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டிருந்தால் அதற்கெதிராக அவர்கள் செய்றபடாமல் இருந்தது ஏன் என்பதற்கு சகோதரர் ஹரீஸ் அவர்களிடம் விடையில்லை. தம்புள்ள பள்ளிவாசல் காணி விவகாரம் தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் இடையிலான பிரச்சினையை நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்த றவுப் ஹக்கீமினால் ஏன் தீர்க்கமுடியவில்லை என்பதற்கு சகோதரர் ஹரீஸ் அவர்களிடம் பதில் இல்லை. இறக்காமம் மாயக்கல்லி மலை சிலை அகற்றப்படாமல் இருப்பதற்கும், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை வழங்கப்படாமல் இருப்பதற்கும், கல்முனையில் அடிக்கல் நாட்டப்பட்ட துரித அபிவிருத்தி திட்டம் இன்னும் ஏன் தொடங்கப்படவில்லை என்பதற்கும் சகோதரர் ஹரீஸ் அவர்களிடம் பதில் இல்லை.

இந்நிலையில் கிழக்கு முஸ்லீம்கள் வட கிழக்குக்கு வெளியில் வாழ்கின்ற முஸ்லீம்களின் பாதுகாப்பு போன்ற விடயங்களில் மிக அவதானமாக இருந்து குறுகிய அரசியல் தேர்தல் நோக்கங்களுக்காகவும் வாக்குகளுக்காகவும் மக்களை சூடாக்கும் கீழ் தரமான அரசியல் செய்யாமல் பக்குவமாக அரசியல் நகர்வுகளை மேற்கொண்ட தலைவர் அதாஉல்லாவை கேள்வி கேட்பதற்கு அதேஅரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்து கதிரைகளையும், மக்களையும் சூடாக்கியதைத் தவிர வேறெதையும் செய்யாத சகோதரர் ஹரீஸ் அவர்களுக்கு எதுவித தார்மீக உரிமையும் கிடையாது.

முஸ்லீம் சமூகத்திற்கு, பதவிக்காய் சோரம் போய் வரலாற்றுத் துரோகமிழைத்தவர் பிரதியமைச்சர் ஹரீஸ் தான் என்பதற்கு வரலாறு சாட்சி. முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய வங்குரோத்து அரசியல் நிலையில் தலைவர் அஸ்ரப் அவர்களின் கொள்கை கோட்பாடு என்ன என்பது பற்றி ஹசன் அலியும் அன்சிலும் நடாத்திவரும் வகுப்புகளுக்கு பின் வரிசையில் போய் உட்கார்ந்து சகோதரர் ஹரீஸ் அவர்கள் படித்துக் கொள்ளவேண்டும்.

வரலாற்றுத் தேவைக்காய் அரசியல் உள்நோக்கங்கள் இன்றி புத்தீஜீவிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் உலமாக்களை தலைவர் அதாஉல்லா அவர்கள் அழைத்துள்ள நிலையில் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் பலமடைந்துவிடும் என்ற அச்சத்தினால் ஈனக் குரல் எழுப்பியிருக்கும் சகோதரர் ஹரீஸ் அவர்கள் உடனடியாக தனது அறிக்கையினை வாபஸ் வாங்கிவிட்டு அவரும் கிழக்கு மண்ணின் அரசியல் பிரதிநிதி என்ற வகையிலும் தலைவர் அஸ்ரப் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய கல்முனை தொகுதியின் பிரதிநிதி என்ற வகையிலும் தலைவர் அதாஉல்லாவின் அழைப்பை ஏற்று அவருடன் கைகோர்த்து கிழக்கு மக்களின் விடிவுக்காகவும் முஸ்லீம் மக்களின் நிம்மதிக்காகவும் உழைக்க முன்வரவேண்டும்.

தேர்தல் என்று வரும் போது அவர் ஹக்கீம் காங்கிரஸிலும், அதாஉல்லா தேசிய காங்கிரஸிலும் தேர்தலில் போட்டியிடமுடியும். உன்மையினை விளங்கிய மக்கள் குறிப்பாக இளைஞர்கள் விழித்துக் கொண்டுள்ள இத்தருணத்தில் பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டது எனக் கூறுவது போன்றுதான் பிரதியமைச்சர் ஹரீஸின் அறிக்கை உள்ளது.

சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ்
தேசிய கொள்கை பரப்புச் செயலாளர்
தேசிய காங்கிரஸ்