பிஸ்மில்லா-ஹிர்-ரஹ்மானிர்-ரஹீம்
அன்பு சோதரா,
எழுத்தாளனே! வாசகனே! அறிஞனே! கவிஞனே!
அங்குமிங்கும் சாயாது பூஜ்ஜியத்தை ஊடறுத்து நேராக நிற்கும் ஒரு தராசின் முள்ளைப்போன்ற ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் அறிஞர் பெருமக்கள் போன்றோர் வெறும் சொற்கோர்ப்புகளை பதிவிடுகின்றவர்களாகவோ, உதட்டளவிலே மாத்திரம் உரைப்பவர்களாகவோ இருக்க முடியாது. அளந்து, நிறுத்து நிறுவுவதில் அவர்கள் தர்மவான்கள், சத்தியவான்கள். ஒரு சமூகத்தை சீர்திருத்தக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள். ஒரு சமூகம் விழும்போது தட்டி எழுப்புவதற்கும், எழும்போதுதட்டிக்கொடுப்பதற்கும் வல்லமை உள்ளவர்களாகவே இறைவன் இவர்களைப் படைத்திருக்கிறான்.
இவர்கள் கலைக்காதலர்களும் கூட. தர்மமான அளவை நிறுவையில் எப்போதுமே சம்மந்தப்பட்டவர்களாய் இருப்பதனால்தான் ஆண்டவனின் அனுக்கிரஹமும் இவர்களோடு அண்டியும் இருக்கிறது. இப்படி அண்மித்து இருப்பவர்களைத்தான் ஆண்டவன் அப்பப்போ சோதித்துப் பார்க்கிறான். அதனாலேதான் அவர்களின் பாதையில் பல சோதனைகளும் கஷ்டங்களும் குறுக்கிடுகின்றன. இதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் இது தற்காலிகமான சோதனைகளே என்பதை உணர்ந்து என்றுமே எதிலுமே சத்தியத்தில் நின்றும் சறுக்கிவிடாமல் அவர்களை ஒன்றிணைப்பது – அவர்களுக்கு ஈருலகிலும் ஈடேற்றத்தைக் கொடுக்கும்
ஈடேற்றம் பெற்ற ஒரு இதயம்தான் சோதனையிலும் சுகம் அனுபவிக்கும்.
பேனாவின் உறவுகளே!
சமூகத்தின் அரசியல் தலைமைகளோ அல்லது தலைமை கொடுக்கும் பொறுப்புக்களைச் சுமந்தவர்களோ சுயநலன்களுக்காகச் சோரம்போனால் – சமூகம் சேதாரமாகி அடிமைத்தனத்திற்குள் படிப்படியாக நகர்த்தப்பட்டுவிடுமே – அதனால் சமூகத்திற்கு ஏற்படும் பாரதூரமான விளைவுகளை உணர்ந்தவர்களாக அத்தலைவர்களையும் அவர்கள் சார்ந்த மக்களையும் சுட்டிக்காட்டும் பொறுப்பு ஆண்டவனால் உங்களுக்கு சுமத்தப்பட்டிருக்கின்றது. அதைவிடவும் நீங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு சத்தியத்தை விட்டும் சற்றேனும் சாயாமல் இருப்பதென்பது ஒரு தார்மீகப் பொறுப்பு என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நான் வாழும் சமகாலத்தில் வாழுகின்ற என் உடப்பிறப்புகளே… உங்களில் ஒருவரைத்தானும் சுயநலத்திற்காய் மாத்திரம் சோரம் போனவனாக – உங்களை என்னால் பார்க்கவும் முடியாது. நம்பவும் முடியாது.
இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் நம் சமூகப் பொறுப்பு என்பது அரசியல்வாதிகளுக்கு மாத்திரமானதல்ல. உனக்கும் உணர்வோடு எழுதுவதற்குக் கடமை இருக்கிறது. ஆனால் உனது படைப்புக்கள் வெறுமனே சொற்கூட்டங்களாக மட்டும் இருந்தால் மனங்களில் மத்திகள் வரைக்கும் அவை போய்ச்சேர்வதில்லை விழித்திரைகள் முட்டியதும் முறிந்து விழுகின்றன. உன் படைப்பில் எடை இருக்காது. உயிரின் உஷ்ணம் உணரப்படாது. அதனால் உன் படைப்புகளுக்கு உயிரூட்ட இறைவனைப் பிரார்த்திக்கிறேன். உன்னை அறியாமலே – சதிகாரர்கள் சமூகத்திற்கு எதிராக உன்னைப் பாவிப்பதில் நின்றும் தடுக்க இறைவனை என்றும் வேண்டுகிறேன்.
இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் வரலாற்றுத்தேவைக்காய்ஒன்றுகூடுவோம் என்ற தலைப்பில் முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகளை விழிப்படையச் செய்து அவர்களின் மூலம் ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளை முதன்மைப்படுத்துவதற்காய் ஊடகங்களினூடாக ஒரு வேண்டுதலை விடுத்திருந்தேன். நீங்கள் எல்லோரும் அதனை வாசித்து தெளிவுபெற்றிருப்பீர்கள் என்று நம்புகின்றேன். இதுவரைக்கும் அதனை வாசிக்க முடியாமல் போனவர்களை வாசிக்குமாறு வினயமாய் வேண்டுகிறேன்.
ஏய்ப்பவன் எய்கிறான் – அம்பாய் பிரதி அமைச்சர் :
இதற்கிடையில் வரலாற்றுத்தேவைக்காய் ஒன்று கூடுவோம் என்ற என்னுடைய அழைப்பை நிராகரிக்குமாறு ஒரு ஊடக அறிக்கையினை பிரதி அமைச்சர் ஹரீஸ் விட்டிருக்கின்றார். எய்தவன் இருக்க அம்மை நோவானேன்? ஹரீஸ் நொந்து போவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. இவருக்குப் புரியவைக்க என் பதில் ஒரு புத்தக வடிவில் வந்தாலும் சாத்தியப்படுமா? என்பதும் எனக்கு சந்தேகம்தான். நேரமும் பொன்னானது. ஆதலால் அவருக்குப் பதிலளிப்பதை விட தொடங்கிய யாத்திரையைத் தொடர்வேன். அவருக்கும் அவரைப்போன்ற இன்னும் சிலருக்கும் அவகாசம் தருகிறேன். அவர்களும் நம்மவரே. இருட்டறையில் இருந்து வெளிவரட்டும்! வெளிச்சம் அவருக்கும் படட்டும்!
சோதரனே!
நம் சமூகத்தின் விழிகளைத் திறந்திடு! நம் வரலாற்றுத் தேவைக்காய் நம் புத்திஜீவிகளும் சமூகம் தொடர்பான அரசியல் ஆர்வலர்களும், நிஜப் போராளிகளும் ஒன்று கூடுவது இக்காலத்தின் இன்றியமைதாத தேவை என்பதனை நீ ஏற்றுக்கொண்டால் நம் மக்களுக்கும் சொல்லிவிடு. உன் பேனாவால் சொல்லிவிடு. இறைவனிடத்தில் பெரும்கூலி உனக்குண்டு. ஏலவே சொல்லியிருந்தால் – சொல்லாமல் செய்வார் பெரியார் – என்ற பொன் மொழியில் உள்ள உயர்ந்தவனே நீயாவாய்!
நன்றி
ஏ.எல்.எம்.அதாஉல்லா