கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக செயற்பட்டு நாடாளுமன்றத்தை முடக்க முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நாடாளுமன்றத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நடந்து கொண்டு நாடாளுமன்றத்தை நடத்திச் செல்ல முடியாத நிலைமைக்கு கொண்டு சென்று பணிகளை முடக்குவதற்கு கூட்டு எதிர்க்கட்சி திட்டமிட்ட வகையில் செயற்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத்தில் சபாநாயகர் வழங்கும் உத்தரவுகளுக்கு கட்டுப்பட வேண்டும். அவர் தவறான தீர்மானம் ஒன்றை வழங்கினால் அதற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதே சரியான நடைமுறை.
இதனை விடுத்து ஒழுக்க விரோதமாக நடந்து கொள்வது பொருத்தமற்றது எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.