190 பேருக்கு எதிரான தேசத்துரோக பிரகடனத்தை நீக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி

ஆர்.ஹஸன்
1804 ஜுன் 07ஆம் திகதி பிரித்தானிய அரசால் தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்ட 190 பேருக்கு எதிரான வரத்தமானி அறிவித்தலை நீக்கி அவர்களை நாட்டுக்காக போராடிய தேசிய வீரர்கள் என பிரகடனம் செய்யுமாறு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், இது சம்மந்தமாக தான் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜாங்க அமைச்சருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். 
பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்த மூவினத்தைச் சேர்ந்த 190 பேர் தேசத்துரோகிகளாக 1804 ஜுன் 07ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனம் செய்யப்பட்டது. இந்த பிரகடனத்தை ரத்து செய்து அவர்களை நாட்டுக்காக போராடிய தேசிய வீரர்கள் என பிரகடனம் செய்யுமாறு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் 1804 ஜுன் 07ஆம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலும் இணைக்கபட்டிருந்தது. 
இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்ட 190 பேர் குறித்து நீங்கள் அனுப்பி வைத்திருந்த கடிதம் சம்மந்தமாக தான் கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.