சுஐப் எம். காசிம்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைத் திருத்தச்சட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சிறுபான்மை மக்களுக்கு, குறிப்பாக முஸ்லிம், மலையக சமூகத்தவருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் அதற்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
இது தொடர்பில் வெகு விரைவில் மக்கள் காங்கிரசின் அரசியல் அதியுயர் பீடம் கூடி அடுத்தகட்ட நடவடிக்கையை ஆராய்ந்து தீர்க்கமான முடிவை மேற்கொண்ட பின்னர் வழக்குத் தாக்கல் செய்யப்படுமென அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.
புதிய தேர்தல் முறை மாற்றங்களால் சிறுபான்மை மக்கள் பாதிப்படையக் கூடிய ஆபத்து வெகுவாக இருப்பதாக ஏற்கனவே நாம் ஜனாதிபதி, பிரதமர், அரசியலமைப்புச் சபைக் கூட்டங்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சர் ஆகியோரிடம் பலதடவை சுட்டிக் காட்டினோம். பழைய முறையே உகந்தது எனவும் புதிய முறையினால் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப் படக் கூடாது எனவும் வலியுருத்தியிருக்கிறோம்.
அரசியலமைப்புச் சபைக் கூட்டங்களில் ஜனாதிபதி முறைமை, பாராளுமன்ற தேர்தல் முறைமை, மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் விரிலாக ஆராயப்பட்டு வருகின்றது. இந்தக்கூட்டங்களில் முஸ்லிம் சமூகத்தின் நிலைப் பாடு தொடர்பிலும் அந்தச் சமூகத்தின் பிரதிநிதித்துவம் புதிய தேர்தல் முறையினால் குறைவடையக்கூடிய எந்த நிலையும் ஏற்படக் கூடாது எனவும் அழுத்தமாக சுட்டிக் காட்டி வருகின்றோம். அனைத்துத் தேர்தல் முறைகளும் ஒருமித்து முழுமையா திருத்தத்தில் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப் பாடாக இருந்து வருகிறது.
சிறுபான்மைக் கட்சிகளும் சிறு கட்சிகளும் இந்த விடயம் சம்மந்தமாக ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்கின்றன. பல தடவை எங்களுக்குள் நாங்கள் பேசி ஒரு பொதுவான நிலைப்பாட்டையும் எடுத்துள்ளோம்.
இந்த நிலையில் புதிய எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தல் எமக்கு அதிர்ச்சியைத் தருகின்றது. உள்ளூராட்சியமைச்சராக ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் இருந்த வேளை இது தொடர்பான ஆரம்ப முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டபோது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம் சமூகம் பாதிப்படையக் கூடாதென சுட்டிக் காட்டியதை நாம் இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
அரசியலமைப்புச்சபை ஏனைய தேர்தல் முறை தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு வரும்போது உள்ளூராட்சித் தேர்தல் முறைமை தொடர்பில் அவசர அவசரமான அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டதன் நோக்கம் தான் என்ன? இது எமக்குப்புரியவில்லை. எனவேதான் சட்டத்தின் உதவியை நாடுகின்றோம்.