வெள்ளை மாளிகையின் உள்ளே செய்தி சேகரிக்க அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனங்களுக்கு தடை


கடந்த மாதம் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி உத்தரவுகளை நாள்தோறும் பிறப்பித்து வருகிறார். அந்தவகையில் தற்போது வெள்ளை மாளிகையின் உள்ளே செய்தி சேகரிக்க அமெரிக்காவின் முக்கிய செய்தி நிறுவனங்களான சிஎன்என், தி நியூயார்க் டைம்ஸ், பொலிடிகோ, தி லாஸ் ஏஞ்செல்ஸ் டைம்ஸ் மற்றும் பஸ்பீட் ஆகியவற்றுக்கு தடை விதித்து அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த தடை குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் கூறுகையில் ” ஊடகங்கள் அனைத்துக்கும் பதிலளிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஆனால், வெள்ளை மாளிகையில் நடப்பதை ஒவ்வொரு நாளும் கேமராவில் பதிவு செய்ய வேண்டும் என்பது தேவையில்லை” என்றார்.

இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் டீன் பாக்யுட் கூறுகையில் “வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது அதன் வரலாற்றில் இதுவே முதன்முறை. வெளிப்படையாக ஆட்சி நடத்தும் ஒரு அரசை ஊடகங்கள் தங்கு தடையின்றி அணுகுவது தேச நலனுக்கு முக்கியமானது” என தெரிவித்துள்ளார்.

டிரம்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள செய்தி நிறுவனங்கள், இதுதொடர்பாக தற்போது விவாதங்களை நடத்தி வருகின்றன.