இலங்கை முஸ்லிம்களும் மக்கள் போராட்ட வழிமுறைகளும்
“””””””””””””””””””””””””” ”””””””‘”””””‘””””””
BASHEER CEGU DHAWOOD
முஸ்லிம்கள் தாங்கள் அரசியல் ரீதியாகவோ அல்லது சமூக, மத ரீதியிலோ பெரும்பான்மைப் பலமுள்ள சக்திகளின் செயல்களால் திட்டமிட்ட அடிப்படையில் பாதிப்படையும் போதோ அல்லாது வேறெந்த உள்நாட்டு சதிகளுக்கு எதிராகவோ பாரிய அளவில் மக்கள் போராட்டங்களைச் செய்து தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை உலக அரங்குக்கோ, இலங்கையின் முற்போக்கு சக்திகளின் முன்னிலைக்கோ கொண்டு சென்ற வரலாற்றுப் பதிவுகள் மிகக்குறைவாகவே காணப்படுகின்றன.
வெளிநாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான செய்கைகளுக்கு எதிராகப் பல ஆர்ப்பாட்டங்களை நாம் இலங்கையில் செய்திருக்கிறோம் ஆனால், இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான பெரும் சக்திகளின் கொடுமை இழைப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களை வெளி நாடுகளில், முக்கியமாக முஸ்லிம் நாடுகளிலேதானும் எவரும் முன்னெடுக்கவில்லை.
1985 இல் இருந்து 1999 வரை வடகிழக்கில் முஸ்லிம்கள் வரலாற்றில் முன்னொரு போதும் எதிர் கொண்டிராத உயிரிழப்பையும், உடமை இழப்பையும் சந்தித்த போதும், 1993 ஆம் ஆண்டு தலைவர் அஷ்ரஃபால் அழுஞ்சிப் பொத்தானை கிராமத்தில் நடந்தேறிய முஸ்லிம்களின் படுகொலையைக் கண்டித்து கொழும்பில் பிரகடனப்படுத்தப்பட்ட கறுப்பு வெள்ளி ஆர்ப்பாட்டத்தைத் தவிர, தெற்கிலே வாழும் முஸ்லிம்களால் மேற்குறிப்பிடும் காலகட்டத்துக்குள் பெரிய அளவிலான மக்கள் போராட்டங்கள் எதுவும் செய்யப்படவில்லை.
இதனால், முஸ்லிம்களின் பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்பட முடியாமல் போனது மட்டுமன்றி இலங்கைக்குள்ளும் ஆத்திரப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை அன்றைய அரசுகள் யுத்தத்துக்கான ஆளணியாகப் பயன்படுத்தியதைத் தவிர வேறெதுவும் நடக்கவில்லை.தேசிய அரங்குக்கும் நமது பிரச்சினைகள் சரியாகச் சென்றடையவில்லை.சிங்கள, தமிழ் முற்போக்கு சக்திகளும் அன்றைய முஸ்லிம் சமூகத் தலைமைகளால் கையாளப்படவில்லை.
வடகிழக்கு முஸ்லிம்கள் இன வன்முறைக்குள் அகப்பட்டுத் தத்தளித்த போது அவர்களுக்கு அல்லாஹ்வின் “லஹனத்” இறங்குகிறது என்று கொழும்பை மையமிட்டிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறித் தங்கள் சமூகக் கடமையில் இருந்து நழுவினர்.இவ்வாறுதான் 1978 இல் சூறாவளியின் போதும், 2004 இல் சுனாமியின் போதும் சாதாரண முஸ்லிம் மக்கள் நிவாரணப் பொருட்களைச் சுமந்து கொண்டு ஓடோடி வர, இதே அரசியல்வாதிகள் இறை தண்டனை என்றே கூறினர்.
மும்மொழி ஊடகங்களும் வடகிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் போதுமான அளவு வெளிக் கொணரவில்லை. இவ்விடத்தில் அன்று வெளிவந்த “எழுச்சிக் குரல்” சிறு பத்திரிகையையும் நண்பர்கள் மர்ஹூம் எம்.பீ.எம் அஸ்ஹர், தாஹா முஸம்மில் ஆகியோரையும் இன்னும் சில ஊடகவியலாளர்களையும் மறக்க முடியாது. ஆயினும் இவ்வாறான பத்திரிகைகளாலும் வெளி உலகுக்கோ, சிங்களம் பேசும் சமூகத்துக்குள்ளோ நமது முஸ்லிம் களின் வேதனைகளை எடுத்துச் செல்ல முடியவில்லை. முஸ்லிம்களுக்குள்ளே கொண்டு சென்ற போதும் வடகிழக்குக்கு வெளியில் தேவையான எழுச்சி ஏற்படவில்லை.
அன்று முஸ்லிம்கள் எதிர் நோக்கிய பாதுகாப்புப் பிச்சினைகளை எதிர் கொள்வதற்கு முன்வந்த ஏழை இளைஞர்கள் வேறு வழியின்றி கிழக்கில் ஊர்காவல் படை வீரர்களாகவும், வெறும் 5 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்ட இராணுவ வீரர்களாகவும் அரசிடம் ஆயுதங்களைப் பெற்று தத்தமது ஊர்களைப் பாதுகாக்க களமிறங்கினர்.இவர்களை அரசு களப்பலி கொடுத்த அதே நேரம், நமது சமூகத்தின் மேட்டுக்குடிகள் இவர்களை தீண்டத் தகாதவர்களைப் போல் நடாத்தினர்.
திறந்த வெளிச் சிறை போன்று முஸ்லிம் ஊர்கள் காணப்பட்டன. ஆயுதமேந்திய இராணுவ, ஊர்காவல் படை வீரர்களால் சுற்றி வேலியிடப்பட்ட ஊர்களில் இருந்து வெளி ஊர் செல்ல வேண்டுமானால் பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்ட வாகனங்களிலேதான் செல்ல வேண்டி இருந்தது.இவ்வாறான காலகட்டத்தில்தான் சமூகம் காத்த இளைஞர்கள் நமது சமூக அங்கத்தவர்கள் பலரால் தூற்றவும் பட்டனர்.
( தொடரும்)