நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் சுற்றி வளைப்பில் மேலும் 135 வர்த்தகர்கள் அகப்பட்டனர்..

 

  • அமைச்சின் ஊடகப் பிரிவு

வியாபாரச் சந்தையில் ஏற்பட்டிருக்கும் அரிசிப்புரளிக்கு முடிவு கட்டும் வகையில் அமைச்சர் ரிஷாட்டின் பணிப்புரைக்கமைய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தேடுதல் நடவடிக்கையில் மேலும் பல வர்த்தகர்கள் அகப்பட்டுள்ளனர் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி 52 பேர் அரிசியை விலை கூட்டி விற்று அகப்பட்டிருந்தனர். நேற்று (21) ஆம் திகதி நுகர்வோர் பாதுகாப்பு சபை விசாரணை அதிகாரிகள் வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனைகளை நடத்தியதில் 135 வர்த்தகர்கள் மாட்டிக் கொண்டனர். 

கொழும்பு – 16, கம்பஹா – 6, கழுத்துறை – 5, பதுளை – 3, மொனராகலை – 2, குருநாகல் – 12, புத்தளம் – 6, காலி – 5, மாத்தறை – 5, அம்பாந்தோட்டை – 5, ,மாத்தளை – 5, நுவரெலிய – 6, கண்டி – 1, மட்டக்களப்பு – 7, திருகோணமலை – 6, அம்பாறை – 5, பொலநறுவை – 2, அநுராதபுரம் – 8, வவுனியா – 5, மன்னார் – 4, யாழ்ப்பாணம் – 8, இரத்தினபுரி – 5, கேகாலை – 8 என 135 வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது.

பெப்ரவரி முதலாம் தொடக்கம் இன்று வரை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளின் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1486 வர்த்தகர்கள் சிக்கியுள்ளனர். இவர்களில் 1025 பேர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தையில் அரிசியை நிர்ணய விலையிலும் பார்க்க கூடதலாக விற்போர் மற்றும் பாவனைக்குதவாத அரிசியை பாவனையாளர்களுக்கு விற்போர் அரிசி மற்றும் இறக்குமதி அரிசி, உள்நாட்டு அரிசியை வேறு படுத்தி காட்சிக்கு வைக்காதோர், அரிசி தொடர்பான விலைப்பட்டியலை பார்வைக்கு வைக்காதோர் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீண்டும் எச்சரித்துள்ளார்.