யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த கொலையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களில் ஒருவர் அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளார்.
இதன்படி குறித்த 12 சந்தேகநபர்களில் 11ஆம் இலக்க சந்தேகநபரே அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.ரியால் இன்று அறிவித்துள்ளார்.
அரச தரப்பு சாட்சியாளராக மாறும் பட்சத்தில் பொது மன்னிப்பு வழங்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக அறிவுறுத்தல்வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமையவே குறித்த 11ஆவது இலக்க சந்தேகநபர் அரச தரப்பு சாட்சியாளராவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் முடியும் தருவாயில் உள்ள வித்தியா கொலை வழக்கிற்கு மேலும் ஒரு அனுகூலமான சாட்சி கிடைத்துள்ளது.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இழுபட்டுக்கொண்டிருக்கும் வித்தியா கொலை வழக்கிற்கு ஒரு விடிவு கிடைக்கும், அந்த சகோதரியின் மரணத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.