MUFARIS M HANIFFA
19-02-2017 திகதிய அதிர்வு நிகழ்ச்சியில் கடந்த பேராளர் மாநாட்டில் எடுக்கப்பட்ட பத்து மாநாட்டு தீர்மானங்கள் தொடர்பாக நிகழ்ச்சி தொகுப்பாளரால் பிரதியமைச்சர் HMM. ஹரீஸ் அவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதன் போது தொடர்ந்து பல வருடங்களாக மாநாட்டு தீர்மானமாக முன்வைக்கப்பட்டு வலியுறுத்தி வந்த கரையோர மாவட்ட கோரிக்கையானது இந்த மாநாட்டு பத்து தீர்மானங்களிலும் இல்லாமல் போனது தொடர்பாக தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பிரதியமைச்சர் வழங்கிய பதில்களின் பின்ணனியில் பல விடயங்களை உற்று நோக்க வேண்டியுள்ளது. அவர் கூறியதாவது;
மாநாட்டு பிரகடனம் கட்சியின் உயர்பீடத்திடம் கலந்தாலோசிக்காமல் முன்வைக்கப்பட்டது, அதனால் தனக்கு இது குறித்து தெரியாதெனவும் மாநாட்டின் போதே மாநாட்டு பிரகடனங்கள் பத்தும் முன்மொழியப்பட்டு வாசிக்கப்பட்டது எனவும் முன்மொழியப்பட்ட மாநாட்டு பிரகடனங்கள் தொடர்பாக தலைவருக்கு தெரிந்திருக்காது; குறித்த குழுவே தயாரித்து வாசித்துள்ளது எனவும் அவருடைய பதிலிலே குறிப்பிட்டிருந்தார்.
பல வருடங்களாக தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்த கரையோர மாவட்ட கோரிக்கை இந்த ஆண்டு முஸ்லிம் காங்கிரஸால் புறக்கணிக்கப்பட்டுவிட்டது என்ற அதிர்ச்சி தரும் செய்திக்கு அப்பாலும் பிரதியமைச்சரின் பதில்களில் இருந்து நாம் நோக்க வேண்டியது இன்னமும் உள்ளது.
தற்போதைய அரசியல் சூழ்நிலை முஸ்லிம் சமூகத்திற்கு முக்கிய காலகட்டமாக இருந்துகொண்டிருக்கின்றன. இந்தக் கட்டத்திலே முஸ்லிம்களின் பெரும் ஆதரவை பெற்ற கட்சியாகிய மு. கா எதிர்வரும் ஆண்டிற்கான தனது பயண இலக்கை திட்டமிட்டு வகுத்து, தீர்மானங்களை பேராளர் மாநாட்டிலே பிரகடனப்படுத்தி எதிர்வரும் ஆண்டில் அதனை அடையவே முயற்சித்திருக்க வேண்டும். அவ்வாறே மறைந்த தலைவரும் மாநாட்டு தீர்மானங்களை ஒவ்வொரு பேராளர் மாநாட்டிலும் பிரகடனப்படுத்தினார், அதை அடைந்து கொள்ள கட்சியும் முயற்சித்தது.
ஆனால் தற்பொழுது நடந்திருப்பதோ எந்த வித முன் கலந்துரையாடல்களும், திட்டமிடலும் இல்லாமல் தீர்மானங்கள் மாநாட்டின் போதே முன்மொழியப்பட்டு வாசிக்கப்பட்டிருக்கிறது. மேலும் உயர்பீட உறுப்பினர்களிடம் கூட கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவுகள் எனவும் கூறியிருந்தார் பிரதியமைச்சர்.
மேலும் அவர் கூறியதில் ஜீரணிக்கு முடியாததாக இருந்தது முன்மொழியப்பட்ட குறித்த தீர்மானங்கள் தலைவருக்கு தெரிந்திருக்காது அதற்கு பொறுப்பான குழுவே தயாரித்து வாசித்திருக்கும் எனவும் வேற குறிப்பிட்டிருந்தார்.
ஆக மாநாட்டில் மொழியப்பட்ட தீர்மானங்கள் கட்சியின் பிரதித் தலைவருக்கும் தெரிந்திருக்கவில்லை, தலைவருக்கும் தெரிந்திருக்கவில்லை என அவருடைய பதில்கள் உணர்த்துகின்றன.
இந்த உண்மையாகக் கூட இருக்கலாம் அல்லது கேள்வியிலிரிந்து தன்னையும், தன்னுடைய தலைவரையும் காப்பற்றி கொள்வதற்காகவும் இவ்வாறு கூறியிருக்கலாம்.
எது எப்படியாயினும் முஸ்லிம் சமூகத்தின் குரலாக இருக்க வேண்டிய ஒரு கட்சியின் வருடாந்த பிரகடனம் எந்தவித திட்டமிடல் இல்லாமல் பொறுப்பற்ற தனமாகவே முன்மொழியப்பட்டுள்ளது என்பதை மு.கா கட்சியின் பிரதித் தலைவருடைய பதில்களே புடம்போட்டுவிட்டது.
இலக்கில்லாமல் பயணிப்பது கண்ணை மூடிக் கொண்டு குறி பார்க்காமல் சுடுவதைப் போலாகும். இவர்களின் இலக்கில்லா பயணத்தை நம்பியிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் கதி என்னவாகும் என்பதே கவலையளிக்கின்றது.