சைட்டம் வேண்டாம், வைத்தியராகுவதற்கு குறைந்த தகுதி 120 இலட்சமா ? -அட்டனில் ஆர்ப்பாட்டம்

க.கிஷாந்தன்

 

சைட்டம் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிராக அட்டன் – டிக்கோயா வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் ஒன்றிணைந்து  21.02.2017 அன்று மதியம் 12 மணியளவில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

 

இலவச சுகாதார சேவை மற்றும் இலவசக் கல்வியை பாதுகாக்கக் கோரியும் சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரியை அரசுடமையாக்கக் கோரியும் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் டிக்கோயா பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிலிருந்து பேரணியாக அட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வைத்தியசாலை சந்தியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

 

21.02.2017 அன்றைய கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னிட்டு டிக்கோயா பொது வைத்தியசாலைக்கு முன்பாக கறுப்பு கொடி அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியர்கள் தமது உடையில் கறுப்புப்பட்டி அணிந்திருந்து தமது கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சைட்டத்தினை சட்டமாக்குவது வைத்திய மாணவர்களை கொலை செய்தா ?, மருமகளுக்கு பட்டம் நோயாளிக்கு மரணம், வைத்திய சபை மரணம், நேர்மையில்லாடி சட்டம் எதற்கு, சைட்டம் வேண்டாம், வைத்தியராகுவதற்கு குறைந்த தகுதி 120 இலட்சமா ? போன்ற வாசகங்களை தாங்கியவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது.