தியாகத் தலைவனின் வழியில் செல்வோம் புறப்படுங்கள், கட்சியின் விடுதலைக்கு கன தூரமில்லை.

தலைவர் அஷ்ரஃப் கேட்ட ஒரேயொரு கேள்விக்கு முஸ்லிம் மக்கள் தந்த உறுதியான பதிலில் முஸ்லிம்களின் தனித்துவமான அடையாள அரசியல் குழந்தை பிறந்தது. சிங்களவர்களுக்கு பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன, தமிழர்களுக்கு என்றும் கட்சிகள் உண்டு. முஸ்லிம்களுக்கு ஒரு கட்சி இருக்கக் கூடாதா? என்பது தலைவர் கேட்ட கேள்வியாகும். இக்கேள்விக்கு மக்கள் மனமுவந்து தந்த பதிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கமாகும்.

இக்கட்சியின் பிறப்பை அன்று தேசியக் கட்சிகளில் இருந்த எந்த முஸ்லிம் தலைவர்களும் விரும்பாதது மட்டுமன்றி கருவிலேயே கள்ளிப்பால் ஊற்றவும் முனைந்தனர். முஸ்லிம்களில் மெத்தப் படித்தோரோ, முதலாளிகளோ, நிலப் பிரபுக்களோ ஆரம்ப காலங்களில் ஆதரவு தரவில்லை.அன்றைய காலகட்டத்தில் வன்முறையாக வடிவெடுத்திருந்த தமிழ் தேசிய அரசியலின் முன்னணித் தலைவர்கள் பலரும் தமது பாணியில் முஸ்லிம் தனித்துவ அரசியலை ஆணியில் அறையவே முயன்றனர். இவர்கள் முஸ்லிம்கள் சிங்களக் கட்சிகளில் இருப்பதை அங்கீகரிக்கத் தயாராய் இருந்த போதும் தனித்து அரசியல் பயணம் செய்வதை எதிர்த்தனர்.
1950 களில் தனித்துவமான தமிழ்த் தேசிய அரசியல் முளைத்ததைப் பொறுக்காத சிங்களப் பேரினவாதிகள் 1956 இல் கலவரங்களை உண்டு பண்ணித் தமிழ்க் குழந்தைகளையும் கொதிக்கும் தார் பீப்பாய்க்குள் தூக்கி வீசி மனிதர்கள் எவரும் அதுவரை செய்திராத கொடுமையை இழைத்தனர். இவ்வாறே 1980 களில் தனித்துவமான முஸ்லிம் தேசிய அரசியல் முளைத்ததைப் பொறுக்காத தமிழர் போராட்டம் 1985 இல் தமிழ் முஸ்லிம் கலவரத்தை மூட்டிவிட்டு, தமிழ் பேசும் ஒற்றுமையை சிங்களப் பேரினவாதிகள் குளிர் காயும் விறகாக உபயோகிக்க வழி சமைத்தது.

 
எவ்வாறு சிங்களப் பேரினவாதிகளின் தொடர் கொடுமைகளினால் தமிழ்த்தேசிய விடுதலை உணர்வு கொழுந்து விட்டெரிந்து உச்சம் தொட்டதோ, அவ்வாறே முஸ்லிம்களின் மீதான ஆயுத வன்முறை, முஸ்லிம் தேசிய விடுதலை வேலைத் திட்டத்தை விருட்சமாக வியாபிக்கச் செய்தது.

 
தமிழ்த் தேசிய அரசியல் வழிமுறை அழிந்த போதும் ஜனநாயகப் போராட்டச் சுடர் இன்று வரை அணையாமல் தொடர்வதைத் தமிழ்த் தலைமைகள் உத்தரவாதப்படுத்திச் செயற்படுவதைக் காணமுடிகிறது. ஆனால் விருட்சமாக வியாபித்திருந்த முஸ்லிம் தேசிய விடுதலை வேட்கையை ஒரு சில முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் முடமாக்கி தமது காலடியின் கீழ் “நக்கரைக்க” விட்டுள்ளனர்.முஸ்லிம் காங்கிரசுக்கு கொள்கை, கோட்பாடு, இலட்சியம், இலக்கு என்பனவும்- மூலோபாயமும், தந்திரோபாயங்களும் இருந்தன. இவற்றையும் வணிக அரசியல் விற்பன்னர்கள் விற்றுத் தொலைத்து விட்டனர். கொள்கையற்ற வெற்று டப்பாவாக ஆக்கப்பட்டுள்ள முஸ்லிம் தனித்துவ விடுதலை அரசியலில் இப்போது எஞ்சியிருப்பது “முஸ்லிம் காங்கிரஸ் எனும் பெயர்ப் பலகை மாத்திரமே ஆகும். இப்பலகையையும் தேவை ஏற்படின் கழற்றி வீசி விட்டு தலைவருக்குப் பாதுகாப்பான ஒரு தேர்தல் தொகுதியை ‘தேசியக்’ கட்சி ஒன்றிடம் பெற்றுக் கொள்ளத் தயாராகவே இருக்கின்றனர். நிறுவுனர் தலைவர் அஷ்ரஃப் அவர்களுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரசைப் பிறப்பிக்கவும், பிரமிக்கும்படி வளரவைக்கவும் தமது உணர்வுகளையும், உதிரத்தையும் உரமாக இட்டவர்கள் வேறெந்த அரசியல் தலைவர்களோ, கற்றோரோ, முதலாளிகளோ, போடிமாரோ அல்ல அரசியல் வார்த்தையில் “லும்பன்கள்” எனக் குறிக்கப்படும் நிறுவன ரீதியாக ஒன்றிணைக்கப்படாத தொழிலாளர்களே ஆகும். அதாவது மீனவத் தொழிலாளர்களும், விவசாய,
மற்றும் சுமை தூக்கும் கூலிகளுமே இன்று வரை கட்சியின் காவலர்களாகும். பெருந்தலைகள் எல்லாம் கட்சி வளர்ந்து உற்பத்தியைத் தொடங்கிய பின் ஒட்டிக் கொண்டவர்களேயாகும்.

 
அஷ்ரஃப் அவர்கள் சொல்லிக் கொடுத்த “நாரே” தக்பீர் என்பதை “நாளைய” தக்பீர் என்றும், கட்சியைக் “கச்சி” என்றும், அஷ்ரஃபின் பெயரை அச “றப்பு” என்றும் உச்சரிக்கும் பாமர மக்கள்தான் மாற்றத்தைக் கொண்டுவரும் சக்தி என்பதையும் இவர்கள்தான் தேசியக் கட்சிகளின் காலடியில் அக்கட்சிகளின் முஸ்லிம் முகவர்களால் அடிமைகளாகக் கிடந்தப்பட்டிருந்த கிழக்கு முஸ்லிம்களில் மாற்றத்தைக் கொண்டு வந்தவர்கள் என்பதையும் “மாற்றத்தைத் தவிர அனைத்தும் மாறும்” என்ற தத்துவத்தையும் நம்பும் இளைஞர்களே!
நமது கட்சி என்று சொல்ல நமக்கொரு கட்சி வேண்டும், அது நமது அஷ்ரஃப் சேர் தந்த நமது காங்கிரஸ் கட்சிதான் என்று முஸ்லிம் காங்கிரசை அகத்தில் வைத்து நேசிக்கும் அந்த மக்களிடம் போய் நமது கட்சியின் இன்றைய இலட்சணத்தை சொல்லுங்கள்.அர்ப்பணிப்போடு இயங்குவோம் எழுந்து வாருங்கள். மக்கள் நம்மிடம் வர வேண்டும் என எதிர்பார்க்க வேண்டாம், நாம் மக்களிடம் செல்ல வேண்டும். மக்களைத் தம்முள் ஈர்க்க விரும்புவோர் சர்வாதிகாரத் தலைவர்கள்.

 

 மக்களுக்காகத் தம்மை தத்தம் செய்ய முன் வருவோர் தியாகத் தலைவர்கள். தலைவர் அஷ்ரஃப் அவர்கள் பட்டினி நோன்பு நோற்றும், தங்குவதற்கு வீடுகளில் இடம் மறுக்கப்பட்ட போது மஸ்ஜித்களில் கவுழுக்களின் அருகில் அமர்ந்து வுழூச் செய்ய வசதியாகப் போடப்பட்டிருந்த ஈரமான மரக்கட்டைகளில் தலையை வைத்து மிகக் குறைந்த நேரமே தூங்கி எழுந்தும் மக்களுக்குள் சென்றிருக்கவில்லை என்றால் இன்று இந்தக் கட்சி நமக்குக் கிடைத்திருக்குமா? தியாகத் தலைவனின் வழியில் செல்வோம் புறப்படுங்கள். கட்சியின் விடுதலைக்கு கன தூரமில்லை.

 

பஷீர் சேகு தாவூத் 

முன்னாள் அமைச்சர்