முப்பது வருட காலமாக மரத்தின் அடியிலிருந்து அதன் வளர்ச்சிக்கு நீர் வார்த்துக் கொண்டிருந்த ஹசன் அலிக்கு விடை கொடுத்து விட்டார்கள். மரமே தனது வாழ்க்கையாக எண்ணியிருந்த அவரை ‘நீங்கள் மரத்தின் நிழலில் இருந்தது போதும்’ என்று தள்ளி வைத்து ஓரம் கட்டி விட்டார்கள்.
ஹசன் அலியின் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுவிட்டது என்ற தகவல் கிடைத்ததும் பலர் அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டனர். கடந்த 11 ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டாய உயர்பீட கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக மன்சூர் ஏ.காதர் நியமிக்கப்பட்டதனையடுத்து ஹசன் அலி பதவி இழந்தார். மறுதினம் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹசன் அலியைத் தொடர்புகொள்ள பல தடவைகள் முயன்ற போதும் முடியாமற்போனது. அவர் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பதிலிருந்தும் தவிர்த்திருந்தார்.
கடந்த 13 ஆம் திகதி திங்கட்கிழமை அவருடன் தொடர்பினை ஏற்படுத்த முடிந்தது.
என்ன நடந்தது சேர்? கூறுவீர்களா? என்று கேட்டோம்.அவர் அமைதியாக, நிதானமாக பதிலளித்தார்.” 2015 ஆம் ஆண்டு கண்டி – பொல்கொல்லையில் நடைபெற்ற கட்சியின் பேராளர் மாநாட்டில் பொதுச் செயலாளருக்குரிய எனது அதிகாரங்கள் சில பறிக்கப்பட்டு வேறொருவர் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவ்வாறு நியமிக்கப்பட்டவர் மன்சூர் ஏ.காதராவார். அவருக்கு பாராளுமன்ற விவகாரம், உயர்பீட விவகாரம் என்பன பொறுப்புக் கொடுக்கப்பட்டன.
இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஒரு கட்சியில் இரு செயலாளர்கள் செயற்பட முடியாது. இருவரில் ஒருவரே செயலாளராக கடமையாற்ற முடியும். அதனால் ஒருவரை தெரிவு செய்து அறிவிக்குமாறு அறிவித்திருந்தார். இந்தப் பிரச்சினை தீர்க்கப்படா விட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 16 ஆம் திகதிக்கு முன்பு இப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் காலக்கெடு விதித்திருந்தார். கடிதத்தின் பிரதியொன்று எனக்கும் கிடைத்தது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் கட்சியின் உயர்பீடக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு நான் தேசியப் பட்டியல் எம்.பி.பதவி கேட்டு களத்தில் இறங்கியிருப்பதாக பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால் நான் தேசிய பட்டியில் எம்.பி.பதவி கேட்டு தலைவரை வற்புறுத்தவில்லை. எனது பொதுச் செயலாளர் பதவியிலிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்கள் திரும்பத் தர வேண்டுமென்றே போராடினேன்.
டிசம்பர் 14 ஆம் திகதி நடைபெற்ற உச்ச பீட கூட்டத்தில் பொதுச் செயலாளர் பதவி விவகாரத்தில் நானும் தலைவரும் முரண்பட்டு பிரிந்திருக்கக் கூடாது. கட்சி பிளவுபடக்கூடாது. கட்சியை காப்பாற்ற வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. தலைவரும், நானும் கதைத்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பாக கமிட்டியொன்றும் நியமிக்கப்பட்டது.அடுத்த தினம் டிசம்பர் 15 ஆம் திகதி உயர்பீட உறுப்பினர் அன்வரின் தெமட்டகொடையிலுள்ள காரியாலயத்தில் நானும் தலைவரும் சந்தித்தோம். அங்கு வந்த தலைவர் முதலில் வுழூ செய்து கொண்டார். பின்பு இரண்டு ரக்அத் சுன்னத் தொழுகையை நிறைவேற்றினார். என்னை கட்டியணைத்து முஸாபஹா செய்து கொண்டார். பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வோம் என்றார்.
நான் தலைவரிடம் தெரிவிக்க வேண்டியதையெல்லாம் தெரிவித்தேன். நான் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தபோது தேசியப் பட்டியலில் எம்.பி.பதவி தருவதாகக் கூறி அதனைத் தடுத்ததையும் விளக்கினேன். அனைத்தையும் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
நான் வுழூவுடன் கதைக்கிறேன். அது நான் தந்த உறுதி. அதனை நான் நிறைவேற்றுவேன் என்றார். தேர்தலொன்று விரைவில் வரப்போகிறது. கட்சியை முடக்க முடியாது. தேர்தல் ஆணையாளரைச் சந்தித்து விட்டுக் கொடுப்புகளைச் செய்ய வேண்டுமெனவும் கூறினார்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்ன செய்யப்போகிறீர்கள் என்றும் என்னிடம் வினவினார்.
ஜனவரி 9 ஆம் திகதியன்று பாராளுமன்ற அமர்வில் நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து கொள்ளலாம். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்படும். நாளைக்குப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். சகல அதிகாரங்களும் கொண்ட செயலாளர் பதவியை பேராளர் மாநாட்டில் உங்களுக்குத் தருவேன் என்று கூறி தலைவர் என்னை மீண்டும் முஸாபஹா செய்து கொண்டார்.
அப்போது என்றுமில்லாத நம்பிக்கை தலைவர் மீது ஏற்பட்டது. நானும் மஃரிப் தொழுது விட்டு வுழூவுடனே இருந்தேன். சுன்னத் தொழுது விட்டு ஒரு முஸ்லிம் தரும் உறுதி மொழியை நம்பாவிட்டால் நான் ஒரு முஸ்லிமாக இருக்க முடியாது. அதனால் நானும் நம்பினேன்.மறுநாள். அது டிசம்பர் 16 ஆம் திகதி. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவைச் சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது. எமக்கான சந்திப்பு நேரம் பிற்பகல் 3 மணிக்கே தரப்பட்டிருந்தது. நான் அங்கு பிற்பகல் 2.45 மணிக்கே சென்றுவிட்டேன். எமது நேரம் வரும் வரை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் அலுவலகத்தில் காத்திருந்தேன். அப்போது தலைவர் வந்தார். வந்ததும் எனது கையில் ஒரு பைலைத் தந்தார். அந்தப் பைலினுள் சல்மான் எம்.பியின் இராஜினாமா கடிதம் இருந்தது.
சல்மான் தனது இராஜினாமா கடி(16.12.2016) செயலாளரிடம் கையளிக்கவுள்ளார். இப்போது அதற்காக அவர் பாராளுமன்றத்துக்கு போய்க்கொண்டிருக்கிறார் என்றார். ஆனால் சல்மான் தனது இராஜினாமா கடிதத்தை கொடுக்கவில்லை.தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடனான சந்திப்பின் போதும் எனக்கு பொதுச் செயலாளர் பதவியும் தேசியப்பட்டியல் எம்.பி பதவியும் வழங்குவதாக உறுதியளித்தார். ஜனவரி 9 ஆம் திகதி நான் பாராளுமன்றத்தில் இருக்க முடியும் என்றும் உறுதியாகக் கூறினார்.
ஜனவரி 7 ஆம் திகதி அல்லது ஜனவரி 8 ஆம் திகதி என நினைக்கிறேன். என்னைத் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டார். 10 ஆம் திகதிக்கு தாருஸ்ஸலாமுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று தாருஸ்ஸலாமுக்குப் போனேன்.
நான் மூதூருக்குப் போகிறேன். என்னுடன் வாருங்கள் என்று தாருஸ்ஸலாமில் வைத்துக் கூறினார், 15 ஆம் திகதி புத்தளத்தில் ஒரு புரோகிராம் இருக்கிறது. நீங்கள் வரவேண்டும் என்றார். அன்று சல்மானின் இராஜினாமா பற்றியும் பேசினார். சல்மான் ஜனவரி 16 ஆம் திகதியே இராஜினாமா கடிதத்தை கையளிக்கவுள்ளளார். அதனால் உங்கள் பெயர் பாராளுமன்ற உறுப்பினராக 18 ஆம் திகதியே கசெட் பண்ணப்படும் என்றும் தெரிவித்தார்.
புத்தளத்துக்கு நானும் அவருடன் போனேன். இருவரும் இரவு சாப்பாட்டை முடித்தோம். உங்களுக்கு நாளை காலையில் கோல் பண்ணுறேன் என்று கூறிச்சென்றவர் அதன் பின்பு என்னை தொடர்பு கொள்ளவில்லை. பெப்ரவரி 4 ஆம் திகதி கட்சியின் அரசியல் உயர்பீட கூட்டம் கூட்டப்பட்டது. நானும் கூட்டத்துக்கு சென்றிருந்தேன். தவிசாளர் பஷீர் சேகுதாவூத் சமுகமளிக்கவில்லை. அக்கூட்டத்தில் பஷீர் சேகுதாவூத்தை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. செயலாளர் கூட்டறிக்கையை வாசித்து முடித்து வேறு ஏதாவது……. என்று வினவியபோதே நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருக்காத விடயத்தை பிர்தௌஸ் முன்னெடுத்தார். பஷீர் சேகுதாவூத்தை பதவிவியிலிருந்து விலக்க வேண்டும் என்றார்.
மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் கடுமையாக நின்று பஷீரை விலக்க வேண்டும் என்றார்கள். விருப்பமில்லாதவர்கள் கையை உயர்த்துங்கள் என்று கேட்கப்பட்டது. சிலர் கை உயர்த்தினார்கள். விரும்புகிறவர்கள் கை உயர்த்துங்கள் என்றார்கள். சிலர் உயர்த்தவில்லை. இச்சந்தர்ப்பத்தில் ஜவாட் எழுந்து நின்று இவ்வாறு சட்ட ரீதியாக தீர்மானம் எடுக்க முடியாது. ஏகமனதாக தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார். பஷீரை விலக்குவதென ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
அதன் பின்பு அடுத்த கூட்டத்தில் சந்திப்போம் என தலைவர் கூட்டத்தை நிறைவு செய்தார். கட்சி யாப்புத் திருத்தம் பற்றிப் பேசப்படவில்லை. அதற்காக இரு மாதங்களுக்கு முன்பு ஒரு குழு நியமிக்கப்பட்டிருந்தது. அதுபற்றி பேசப்படவில்லை. நான் யாப்புத் திருத்தம் பற்றிய சிபாரிசுகளை ஏற்கனவே கொடுத்திருந்தேன். கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே நான் நிந்த வூரின் அமைப்பாளராக இருந்துவருகிறேன். கட்சியின் முதலாவது பகிரங்கக் கூட்டம் எனது வீட்டு முற்றத்தில் மாமர நிழலிலே நடைபெற்றது. அந்த இடத்திலே முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற பேராளர் மாநாட்டுக்கு எனக்கு அழைப்பிதழ் தரப்படவில்லை. தபாலில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் தபாலிலும் எனக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படவில்லை. தொகுதி அமைப்பாளர் மூலமே அழைப்பிதழ்கள் பகிரப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை அது பின்பற்றப்படவில்லை. அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த அநேகருக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படவில்லை. தாருஸ்ஸலாமிலே பேராளர் மாநாடுகளுக்கான அழைப்பிதழ்கள் அனுப்பும் பணிகள் நடைபெறுவது வழக்கமாகும். ஆனால் இம்முறை வழமைக்கு மாறாக தலைவரது அமைச்சுக் காரியாலயத்திலே இவ்வேலைகள் நடைபெற்றுள்ளன.
கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற கட்டாய உயர்பீட கூட்டத்தில் நிர்வாகிகள் தெரிவு இடம் பெற்றது. தலைவராக ரவூப் ஹக்கீமும் செயலாளராக மன்சூர் ஏ.காதரும் நியமிக்கப்பட்டனர். எனக்கு தவிசாளர் பதவி வழங்கப்பட்டது. நான் மறுத்தேன். சகல அதிகாரங்களுடன் கூடிய செயலாளர் பதவியையே நான் வேண்டி நின்றேன்.நஸீர் அஹமட்டும் அன்வரும் என்னிடம் வந்து தவிசாளர் பதவியை எடுங்கள். பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பிறகு தருகிறோம் என்றார்கள். ஹரீஸ் எம்.பியே என்னை இந்தப் பதவிக்கு முன்மொழிந்தார். அவருக்கு நான் நன்றி கூறினேன். ஆனால் இந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றேன்.
ஒருவரிடம் இருந்து பறித்தெடுத்த பதவியை ஏற்றுக்கொள்ளும் வழிகெட்ட ஆள் நானல்ல. கடைசிவரை எனது தனித்துவத்தை அடகுவைக்க மாட்டேன். செயலாளர் பதவிக்கான நியமன நேரத்தில் கட்சியின் தலைவர், செயலாளர் நியமிக்கும் அதிகாரத்தை எனக்குத் தாருங்கள் என்று வேண்டிக் கொண்டார்.செயலாளர் பதவியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. மன்சூர் ஏ.காதரே செயலாளராக இருக்க வேண்டும். நான் நியமிப்பவரை விரும்பாவிட்டால் நீக்கிக் கொள்ளலாம் என்றார். நிஸாம் காரியப்பர் இதை நியாயப்படுத்தினார்.
‘தலைவரே நீங்கள் தலைவராகவும் செயலாளராகவும் இருங்கள்’ என்று ஜவாட் கூறினார்.‘நீங்கள் நியமிக்கும் ஒருவரை உயர் பீடம் விலக்காது. நீங்களே நியமியுங்கள். எல்லா அதிகாரங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள்’ என சம்மாந்துறை மன்சூர் கூறினார். செயலாளர் பதவி வகிப்பவர் தேர்தலில் போட்டியிட முடியாது. அவர் தேர்தலில் போட்டியிடுவதென்றால் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இச் சந்தர்ப்பத்தில் நான் குறுக்கிட்டேன். ‘தலைவரே உங்களுக்குப் பிரச்சினை நான் தானே. தேர்தலில் போட்டியிட முடியாது என்றெல்லாம் என்னைச் சுட்டிக்காட்டியே கூறுகிறீர்கள். எனக்கு செயலாளர் பதவி வேண்டாம். செயலாளர் பதவியை இரண்டாகப் பிரிக்காமல் முழுமையாக ஒருவருக்கே கொடுங்கள். ஒரு கட்சியில் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளே முக்கியமானவை. இந்தப் பதவியை மலினப்படுத்த வேண்டாம். எனது 32 வருட கால சேவையை முடித்து நான் போகிறேன் என்று எழுந்தேன்.
இவ்விடத்தில் ஜவாட் எழுந்தார். நாளைக்குப் பேராளர் மாநாடு. ஹசன் அலி தவிசாளர் பதவியை வேண்டாம் என்று கூறிவிட்டார். அதனால் அவர் பேராளர் மாநாட்டில் சாதாரண கதிரையில் தான் அமர வேண்டும். அந்தக் காட்சியை எம்மால் பார்க்க முடியாது. அவர்தான் கட்சி என்று கூறினார் ஜவாட். சேர்…. தவிசாளர் பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் மேடையில் இருக்க வேண்டும் என்றார்கள். கெஞ்சினார்கள்., கோஷம் எழுப்பினார்கள்.
இது என்ன நாடகம்! எனக்கென்று தனித்துவம் உள்ளது. இலட்சியம் உள்ளது. எழுந்து நின்றேன். எனது கண்கள் கலங்கின. உணர்ச்சி வசப்பட்டேன். டிபரன்ட் மூடுக்குள்ளானேன்.எனது 30 வருட அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துள்ளது என்று கவலையுற்றேன். எழுந்து சென்று லீடரைக் கட்டிப்பிடித்து முஸாபஹா செய்தேன். இது எனது கடைசி நாள் என்றேன்.நான் உயர்பீடக் கூட்டத்திலிருந்தும் வெளியேறினேன். நஸீர், ஜவாட் எல்லோரும் ஓடி வந்து என்னைத் தடுத்தார்கள். நான் எனது முடிவில் உறுதியாக வெளியேறினேன்.
உயர்பீடக் கூட்டம் முடிவுற்று என் பின்னாலேயே எனது வீட்டுக்கு ஹக்கீம் வந்தார். ‘என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். பல சந்தர்ப்பங்களில் உங்கள் மனதைப் புண்படுத்திவிட்டேன்’ என்றார். நான் அரை மணித்தியாலமாக அவரது முகத்தைப் பார்க்காமலேயே இருந்தேன்.என் முன்னே கட்சியும் கட்சியின் சின்னமும் சமூகமுமே நிழலாடியது. லீடருடன் அன்வர், கலீல் மௌலவி போன்றோரும் வந்திருந்தார்கள்.‘லீடர் நீங்கள் போய்விடுங்கள் நான் ஓய்வாக இருக்க விரும்புகிறேன்’ என்று அவரை அனுப்பி வைத்தேன்.
பேராளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மர்ஹூம் அஷ்ரபின் இலட்சியமான கரையோர மாவட்டக் கோரிக்கை உள்வாங்கப்படாமை என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 30 வருட காலத்தில் ஏனைய கட்சிகளுடன் முஸ்லிம் காங்கிரஸ் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கைகள் அனைத்திலும் கரையோர மாவட்டக் கோரிக்கை உள்வாங்கப்பட்டிருந்தமை எனது நினைவுக்கு வருகிறது. கட்சியில் நானில்லாத வெறுமையை இப்போது உணர்கிறேன்.
அல்லாஹ்தான் கட்சியையும் சமூகத்தையும் காப்பாற்ற வேண்டும் என துவா செய்கிறேன். சமூகம் நடந்து முடிந்த சம்பவங்களின் உண்மை நிலையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே விரும்புகிறேன்” என்று தனது மனக்கிடைகளை வெளிப்படுத்தினார்.
விரைவில் தான் ஊர் ஊராகச் சென்று மக்கள் மத்தியில் இந்த விடயங்களைத் தெளிவுபடுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.தற்சமயம் உம்ரா கடமைக்காக சவூதி அரேபியா சென்றுள்ள அவர் நாடு திரும்பியதும் எவ்வாறான அரசியல் நகர்வுகளை மேற்கொள்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ARA.Fareel