சாய்ந்தமருது பிரதேச சபையை பிரதமர் ரணிலிடம் பேசி பெற்றுத்தருமாறு முஸ்லிம் காங்கிரசினர் ஐ தே க பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபிடம் கேட்டுள்ளமை மு. காவின் கையாலாகாத வங்குரோத்து அரசியலையும் காட்டுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை எப்படி இலகுவாக பெறலாம் என்பதை உலமா கட்சி 2010ம் ஆண்டு தெளிவாக அம்மக்களுக்கு சொன்னது.
சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை வழங்கப்பட வேண்டும் என்பதை முதலில் ஏற்றுக்கொண்ட முஸ்லிம் கட்சி உலமா கட்சியாகும். 2010 பொது தேர்தலின் போது சுயேட்சையாக நாம் போட்டியிட்ட போது இது விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது மக்களை ஏமாற்றுகிறது என்றும் சாய்ந்தமருது மக்கள் ஒருமித்து எமக்கு வாக்களிப்பதன் மூலம் சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை கோரிக்கையை ஆதரிக்கும் உலமா கட்சிக்கு ஆதரவளிப்பதன் மூலம் அரச மேல் மட்டம் இதனை மக்களின் ஜனநாயக தீர்ப்பாக பார்க்கும் என கூறினோம்.
ஆனால் சாய்ந்தமருது மக்கள் தொடர்ந்தும் ஏமாற்று கட்சிக்கு வாக்களித்து ஏமாந்தனர்.
அதன் பின் முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத்தேர்தலின் போது ரணில் விக்கிரமசிங்கவை கல்முனைக்கு அழைத்து வந்து சாய்ந்தமருதுக்கு பிரதேச சபையை தருவோம் எனக்கூறி அம்மக்களை ஏமாற்றினர். இதோ எமது தலைவர் ஏற்றுக்கொண்டார். வாக்களித்துள்ளார் என ஹக்கீமும் தனது பக்க சார்பில் அம்மக்களை ஏமாற்றினார். ஏமாற்றுவதை மட்டுமே மிகச்சரியாக செய்யும் முஸ்லிம் காங்கிரசை தெரிந்து கொண்டே சாய்ந்தமருது மக்கள் ஏமாந்து மு. காவுக்கு வாக்களித்தனர். தேர்தல் முடிந்து எதுவும் நடக்காததால் மீண்டும் ஒப்பாரி வைக்கின்றனர். ஒருவன் உலக மகா ஏமாற்றுக்காரன் என்று தெரிந்தும் அவன் பின்னால் போகின்றவன் உலக மகா முட்டாள் என்பதைக்கூட முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருப்பது ஏமாற்று கட்சிகளுக்கு வாய்ப்பாக போயுள்ளது.
ஆகக்குறைந்தது சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை வேண்டும் என முதலில் ஏற்றுக்கொண்ட உலமா கட்சிக்கு ஆதரவான கூட்டங்கள் சாய்ந்தமருதில் தொடராக நடத்தப்பட்டால் எங்கே தாம் ஓரம் கட்டப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் ஹக்கீமும் ரணிலும் இதற்காக உண்மையாக உழைக்க முன் வருவர். ஆனால் அடுத்த தேர்தல் வந்தாலும் சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை கொடுக்காமலேயே அம்மக்களை இலகுவாக ஏமாற்றி வாக்குப்பெறலாம் என்பதை ரணிலும் அவரின் புறோக்கரான ஹக்கீமும் நன்கு தெரிந்து வைத்துள்ளனர்.
தற்போது பாராளுமன்றத்தில் உள்ள இள வயது இம்ரான் மஹ்ரூபிடம் சொல்லி கொஞ்சம் ரணிலிடம் சொல்லி சாய்ந்தமருது பிரதேச சபையை பெற்றுத்தாருங்கள் என முஸ்லிம் காங்கிரசினர் சொல்லுமளவு கேவலம் கெட்டுப்போயுள்ளது. மத்தியிலும், மாகாணத்திலும், பிரதேசத்திலும் ஆளும் கட்சியாக உள்ள முஸ்லிம் காங்கிரசின் இன்றைய கையாலாகாத நிலைதான் இது.
ஆகவே சாய்ந்தமருது மக்கள் ஒற்றுமைப்பட்டு முஸ்லிம் காங்கிரசை முற்றாக ஒதுக்கி தமது பிரதேச சபைக்கு உண்மையாக குரல் கொடுக்கும் எதிர் கட்சிகளை பகிரங்கமாக ஆதரிக்கும் வரை சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை கிடைக்காது என்பதே யதார்த்தம்.
மௌலவி முபாரக் அப்துல் மஜீத் ,
உலமா கட்சி