கட்சியில் நான் இல்லாத வெறுமையை இன்று உணர்கிறேன்,அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும் : ஹசன் அலி

கடந்த 11ஆம் திகதி இரவு நடை­பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் கட்டாய உயர்பீட கூட்டத்திலிருந்து நான் வெளி­யே­றி­யதும் கட்­சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் என்னைப் பின்­தொ­டர்ந்து என் வீட்­டுக்கு வந்து ‘ என்னை மன்­னித்து விடுங்கள்.

பல சந்­தர்ப்­பங்­களில் நான் உங்கள் மனதைப் புண்­ப­டுத்தி விட்டேன் என்றார். அரை மணித்­தி­யாலம் அவ­ரது முகத்தைப் பார்க்­கா­மலே இருந்தேன்.

பின்பு லீடர் நீங்கள் திரும்­புங்கள். நான் ஓய்வாக இருக்க விரும்­பு­கிறேன் என அவரை அனுப்பி வைத்தேன்’ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் பொதுச் செய­லா­ளரும் முன்னாள் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான எம்.ரி.ஹசன் அலி தெரி­வித்தார்.

கடந்த 11ஆம் திகதி தாருஸ்­ஸ­லாமில் நடை­பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் அவ­சர கட்­டாய உயர்­பீடக் கூட்­டத்தின் போது கட்­சியின் செய­லா­ள­ராக மன்சூர் ஏ.காதர் நிய­மிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து இது­வரை காலம் செய­லாளர் நாய­க­மாகக் கட­மை­யாற்­றிய எம்.ரி. ஹசன் அலி பத­வி­யி­ழந்தார்.

இது­தொ­டர்பில் ஹசன் அலியை ‘விடி­வெள்ளி’ தொடர்பு கொண்­ட­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், கண்டி பொல்­கொல்­லையில் நடை­பெற்ற பேராளர் மாநாட்டின் போது எனது செய­லாளர் பத­விக்­கு­ரிய அதி­கா­ரங்கள் பறிக்­கப்­பட்டு மற்­றுமோர் செய­லாளர் நிய­மிக்­கப்­பட்டார்.

இந்­நி­லையில் நான் சகல அதி­கா­ரங்­க­ளையும் கொண்ட செய­லாளர் பத­வியே வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருந்தேன். அதையே கேட்டேன். செய­லாளர் பத­வி­யுடன் தேசியப் பட்­டி­யலில் உறுப்­பினர் பத­வி­யையும் தரு­வ­தாக பல தட­வைகள் வாக்­கு­றுதி வழங்­கிய கட்­சியின் தலைவர் என்னை ஏமாற்­றி­விட்டார்.

கடந்த பேராளர் மாநாட்டின் நிய­ம­னங்­க­ளுடன் எனது 30 வருட அர­சியல் வாழ்க்­கைக்கு முடி­வு­கட்­டப்­பட்­டுள்­ளது. தவி­சாளர் பத­வியை ஏற்­றுக்­கொள்­ளு­மாறு தலைவர் மற்றும் உயர்­பீட உறுப்­பி­னர்­களால் என்­னிடம் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டது.

விந­ய­மாகக் கேட்­கப்­பட்­டது.  ஒரு­வ­ரி­ட­மி­ருந்து பறித்­தெ­டுத்து தரும் பத­வியை ஏற்­றுக்­கொள்ளும் வழி­கெட்ட ஆள் நான் இல்லை எனக்­கென்று தனித்­துவம் உள்­ளது. எனது தனித்­து­வத்தை எவ­ருக்கும் அடகு வைக்க மாட்டேன். தவி­சாளர் பத­வியை கடை­சி­வரை ஏற்­றுக்­கொள்ள மாட்டேன் என்றேன்.

செய­லாளர் பத­வியை வகிப்­பவர் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாது என யாப்­பிலும் மாற்றம் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. தலை­வரே உங்கள் பிரச்­சினை நான் தானே? எனக்­கா­கத்­தானே இதெல்லாம். நானே கூறு­கிறேன்.

செய­லாளர் பத­வியை ஒரு­வ­ருக்கே கொடுங்கள். ஒரு கட்­சியில் தலைவர் மற்றும் செய­லாளர் பத­வி­களே முக்­கி­ய­மா­னவை. இவற்றை மலி­னப்­ப­டுத்த வேண்டாம் என்று உச்சபீட கூட்­டத்தில் தலை­வ­ரிடம் தெரி­வித்தேன்.

12ஆம் திகதி நடை­பெற்ற பேராளர் மாநாட்­டுக்கு எனக்கு அழைப்­பிதழ் தர­வில்லை. தபாலில் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாகக் கூறி­னார்கள். ஆனால் எனக்குத் தபாலில் அழைப்­பிதழ் கிடைக்­க­வில்லை.

எனது செய­லாளர் பதவி விவ­காரம் 1 1/2 வருட கால­மாக தேசியப் பட்­டியல் விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­ப­டுத்தி இழுத்­த­டிக்­கப்­பட்டு வந்­தது. இப்­போது தலைவர் எனது விவ­கா­ரத்­திக்கு முடிவு கண்டு விட்டார்.

பேராளர் மாநாட்­டுக்­கான அழைப்­பி­தழ்கள் எழு­து­வது தொடர்­பான வேலைகள் கட்­சியின் தலைமைக் காரி­யா­ல­யத்­திலே நடை­பெ­று­வது வழக்கம். ஆனால் இம்­முறை அனைத்துப் பணி­களும் தலை­வரின் அமைச்சு காரி­யா­ல­யத்­திலே இடம்­பெற்­றுள்­ளன.

பேராளர் மாநாட்டில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­னங்கள் பற்றி எனக்கு அறி­யக்­கி­டைத்­தது. அந்தத் தீர்­மா­னங்­களில் 30 வருட கால­மாக இருந்து வந்த கரை­யோர மாவட்டக் கோரிக்கை இல்­லாமற் செய்­யப்­பட்­டுள்­ளது. மறைந்த தலைவரின் அபிலாஷையாக இது இருந்தது.

இந்தக் கோரிக்கையை நான் ஏனைய கட்சிகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வலியுறுத்தி வந்திருக்கிறேன். கட்சியில் நான் இல்லாத வெறுமையை இன்று உணர்கிறேன். 

சமூகத்தையும் கட்சியையும் அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும் என்று துஆ கேட்கிறேன் என்றார்.

நன்றி – vidivelli