ஹக்கீம் அரசியலில் ஒரு கைக்குழந்தை என்பது கடந்த பேராளர் மாநாட்டில் நன்றாகவே புலப்பட்டிருக்கிறது.ஹஸன் அலிக்கு ஒரு இடம் கொடுக்காமை,பஷீர் சேகு தாவூதை இடை நிறுத்தியமை போன்ற ராஜ தந்திர தவறுகளால் ஹக்கீமின் அழிவு ஆரம்பமாகிறது.எப்படி என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.
ஹஸனலியை இல்லாமல் செய்தது அநியாயம்,பாவம்,அவர் ஏமாற்றப்பட்டார் போன்ற அரசியல் நடுநிலை நியாய தர்மங்களை ஒரு புறம் வைத்துவிட்டு அரசியல் ராஜதந்திரம் பேசுவோம்.ஹசனலியை ஏமாற்றியது ஒரு துரோகம் என்பதற்கு அப்பால் அது ஹக்கீமின் அரசியலை எவ்வாறு பாதிக்கும் என்று பார்ப்போம்.
ஹக்கீமை பலர் சாணக்கியன் என்கிறார்கள்.சொல்பவர்களுக்கும் சாணக்கியன் யார் என்று தெரியாது.சொல்லப்படுகின்ற ஹக்கீமுக்கும் சாணக்கியன் யார் என்று தெரியாது.ஹக்கீமின் நல்ல காலம்.சாணக்கியன் முதலிலே செத்துவிட்டான். உயிரோடிருந்தால் ஹக்கீமை ஓட ஓட விரட்டியிருப்பான்.
சாணக்கியருக்கும இன்னொரு பெயர் இருக்கிறது.கௌடில்யர்.கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் சந்திர குப்த மௌரியரின் அரசவை அரசியல் ஆலோசகர்தான் சாணக்கியர் என்று அழைக்கப்படும் கௌடில்யர்.அவர் எழுதிய மிகவும் பிரபலமான நூல்தான் அர்த்த சாஸ்திரம்.அது ஒரு அரசியல்,யுத்த ராஜதந்திர நூல்.ஒரு அரசனுக்கு அரசியல் ராஜதந்திரமும்,போர்க்கலையும் சொல்லிக்கொடுக்கும் புத்தகம்.பிற்காலத்தில் நிக்கலோ மாக்கியவல்லி எழுதிய ‘Prince”,சங் சூ எழுதிய ‘ Art of War’,கிளோடிவிச் எழுதிய ‘ on war’ என்பவையெல்லாம் போர்க்கலை,அரசியல் ராஜ தந்திரம் பற்றிப் பேசும் நூல்கள்.
இப்படி ஒரு அரசியல் ராஜ தந்திரி சாணக்கியரின் பெயரை வைத்துக்கொண்டு ஹக்கீமின் அரசியல் நகர்வுகளைப் பார்த்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது.
சாணக்கியர் அர்த்த சாஸ்திரத்தில் பின்வருமாறு கூறுவார்.
“ஒரு எதிரியின் எச்ச சொச்சங்களை மிச்சம் வைத்தால் ஒரு நோயைப் போல அல்லது நெருப்பைப் போல அது மீள எழுந்துவிடும்.அவை மொத்தமாக அழிக்கப்படவேண்டும்.தனது எதிரி பலவீனமானவன் என்று தெரிந்தாலும் அவனை விட்டுவிடக்கூடாது.வைக்கற்போரில் விழுந்த நெருப்புப் பொறியைப் போல் அவன் மிகவும் ஆபத்தாக உருவெடுத்து விடுவான்.’’ இது சாணக்கியர் சொன்ன அறிவுரை.
பஷீர் சேகு தாவூத் ஹக்கீமுக்கு தலையிடியாக உருவெடுத்தது இன்று நேற்றல்ல.பல வருடங்களுக்கு முன்னர்.தன்னை அழிக்கவல்ல ரகசியங்களை வைத்திருக்கும் ஒருவரை ஒன்று உற்ற நண்பனாக்கி அழித்து விடவேண்டும் அல்லது பரம எதிரியாக்கி அழித்துவிடவேண்டும்.அப்படி அழித்திருந்தால் இன்று கட்சியை சீலங்களாகச் சிதறடிக்கும் அளவிற்கு பஷீர் உருவெடுத்திருக்கமாட்டார்.இப்போது வெள்ளம் தலைக்குமேல் போய்விட்டது.
இதைத்தான் சாணக்கியர் சொன்னார்.எதிரியை மிச்சம் வைக்காமல் அழித்துவிடு.இப்போது ஹக்கீமின் எதிரி அவரை முழுசாக முழுங்கிவிடும் நிலைக்கு வந்துவிட்டது.
பஷீரின் விவகாரத்தில் அவரை எதிரியாக்கி அழிப்பதை விட நண்பனாக்கி அழிப்பதுதான் ராஜதந்திரம்.ஹக்கீம் பஷீருக்கு தவிசாளர் பதவியைக் கொடுத்து ‘லொக்’பண்ணியிருக்க வேண்டும்.அதன் பின்னர் பஷீரால் பேச முடியாது.தலைவர் மீது இவ்வளவு அவதூறு சொல்லியும் தலைவர் இவரை மீண்டும் தவிசாளர் ஆக்கியிருக்கிறாரே என்று மக்களை ஹக்கீம் மீது அனுதாபப்பட வைத்திருக்கலாம்.கட்சியில் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்ட புதிதிலேயே பஷீர் வீடியோவை வெளியிடத் தாமதித்திருப்பார்.அந்த இடைவெளியில் அவருக்கு பெரிய ஆப்பைத் தயாரித்திருக்கலாம்.இப்பொழுது ஒரு கேள்வி வரும்.பஷீர் தவிசாளர் பதவி தேவையில்லை என்றால் என்ன செய்வது? அது ஹக்கீமுக்கு பெரிய வெற்றியாகிவிடும்.நாங்கள் கொடுக்க இருந்தோம்.அவர் வேண்டாமென்றுவிட்டார் என்ற பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபட்டிருக்கும்.ஆனால் பஷீர் கட்சிக்குள்ளிருந்தால் ஹக்கீமுக்கு ஆபத்தாகிவிடுமே என்று சிலர் யோசிக்கலாம்.எதிரியை அருகில் வைத்துக்கொண்டு என்ன செய்கிறான் என்று அவதானிப்பது இலகா தூரத்தில் வீசிவிட்டு என்ன செய்கிறானோ என்று பயந்து கொண்டிருப்பது இலகா?
ஹக்கீம் சாணக்கியம் அல்ல. ஞான சூனியம்.
ஆனால் பஷீர் ஒரு புத்திசாலி.எப்போதாவது தலைவர் நமக்கு ஆப்படித்துவிடுவார் என்று தெரிந்தும் தலைவரை அனைத்து லீலைகளையும் செய்ய வைத்துவிட்டு வீடியோ எடுத்து வைத்திருக்கிறார்.அவை அனைத்தும் அவர் ஹக்கீமின் கூடவே இருக்கும் போது செய்தவை.இவை ஜனநாயக அரசியலின் அசிங்கம் பிடித்த பக்கங்கள் என்றாலும் பஷீருக்கு பயன்பட்ட ராஜதந்திரம்.இஸ்லாம் விபச்சாரத்தையும் அனுமனிக்கவில்லை.வீடியோ எடுப்பதையும் அனுமதிக்கவில்லை.
ஹக்கீம் இழைத்த அடுத்த பாரிய தவறு ஹசனலிக்கு எதுவும் கொடுக்காமல் விட்டது.காங்கிறசை கிழக்கு மாகாணத்தில் வைத்திருப்பதற்கு ஹஸனலி மிகவும் அவசியமானவர்.இன்று அம்பாரை மக்களுக்கு அஷ்ரபை ஞாபகம் ஊட்டுவது ஹஸனலி மாத்திரம்தான். ஹஸனலிக்கு எதுவும் இல்லை என்பதைவிட அஷ்ரபின் செயலாளருக்கு எதையும் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார் என்றுதான் அம்பாரையில் அது பார்க்கப்படும்.அவ்வாறே அது பிரச்சாரம் செய்யப்படும்.அது காங்கிறஸ் வாக்கு வங்கிகளில் வீழ்ச்சியை கொடுக்கும்.அந்த இடைவெளியில் ரிஷாட் உள்ளே புகுந்துவிடுவார்.
அடுத்தது,பஷீர் ஷேகு தாவூதைத் தனிமைப்படுத்துவதற்கு ஹஸனலி அவசியம். ஹஸனலியைத் தன்னோடு வைத்துக்கொள்வது பஷீரால் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் சூட்டைத் தணிக்க உதவும்.அதே நேரம் ஹஸனலியை வெளியே விட்டால் அவர் மறைமுகமாக பஷீரிடம் கூட்டுச்சேர்வார். இதனால் இரண்டு எதிரிகளை ஒரே நேரத்தில் சமாளிப்பது கடினமாகிவிடும்.ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் மக்களுக்கு எண்ணெய் ஊற்றுவதுதான் ஹஸனலியை ஓரங்கட்டுவது.ஹக்கீம் விரும்பியோ விரும்பாமலோ ஹஸனலியை தன்னோடு வைத்திருக்கவேண்டும்.
ஹஸனலி செயலாளர் பதவியில் இருப்பதால் தனது தலைக்கு ஆபத்து என்று ஹக்கீம் எண்ணுவது தவறு. அவ்வாறிருந்தால் ஹசனலி அதனை எப்போதோ செய்திருப்பார்.இரண்டு ரக் அத்துகள் தொழுதுவிட்டு வந்திருக்கிறேன் இனி மரணம்தான் எம்மைப் பிரிக்கும் என்று ஹக்கீம் கூறியதற்காக செயலாளர் பதவியை இழந்துவிட்டிருக்கும் ஒரு மனிதர்,அஷ்ரப் உருவாக்கிய கட்சியை நான் நீதிமன்றத்தில் நிறுத்தமாட்டேன் என்ற மனிதர் ஹக்கீமை அழித்துவிடுவார் என்று நினைப்பது அறியாமை.இந்த இரண்டு ராஜ தந்திரப்பிழைகளால் ஹக்கீம் அழியப்போகிறார்.
என்ன நடக்கும்?எல்லோரும் ஒரு கூட்டாகச் சேர்வார்கள்.ரிஷாட் பதியுதீன்,பேரியல் அஷ்ரப்,அமான் அஷ்ரப்,பஷீர் சேகுதாவூத்,ஹஸன் அலி,சேகு இஸ்ஸதீன்,சில நேரம் அதாவுல்லாஹ்.ஹக்கீம் தோற்றுவிடுவார் மஹிந்த தோற்றது போல.அப்படியான ஒரு தேர்தலில் ஹக்கீமின் சீடியை எதிர்பார்க்கலாம்.
தனக்கு அரசியல் ஞானம் இல்லாவிட்டாலும் ஆகக்குறைந்தது சில புத்திசாலிகளை ஆலோசகர்களாக வைத்திருக்க வேண்டும்.பதவிக்காக கட்சிமாறும் மரங்கொத்திகளைப் பக்கத்தில் வைத்துக்கொண்டிருந்தால் இதுதான் நடக்கும்.
அதனால் ஹக்கீம் ஒரு அரசியல் சாணக்கியர் அல்ல.அரசியல் தெனாலிராமன்.ஆனால் தெனாலிராமன் புத்திசாலியாயிற்றே.24ம் அரசியல் புலிகேசி என்று சொல்லலாம்.
RAASI MUHAMMEDH JAABIR