ஆளுநரை 5 மணிக்கு சந்திக்கிறார் பன்னீர் செல்வம்: இரவு 7.30 மணிக்கு சசிகலா சந்திக்கிறார்

தலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பான பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அதிரடியாக அவர் முதலமைச்சர் பதவிக்கு வரும் வகையில் சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.


அவரது பதவியேற்பு விழாவிற்கான நடைமுறைகள் தொடங்கிய நிலையில் நிலையில், ராஜினாமா செய்த முதலமைச்சர் பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். எனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டேன் என்று அவர் கூறினார்.

இதேவேளையில் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வருவதில் கால தாமதம் ஆனது. இதற்கு சசிகலா தலைமையிலான குழு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சட்டசபையில் தனது பலத்தை நிரூபிப்பேன் என்று பன்னீர் செல்வம் கூறி வந்தார்.

இந்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மும்பையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். இன்று மாலை 5 மணியளவில் சசிகலா ஆளுநரை சந்தித்து எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ள கடிதத்தை கொடுத்து ஆட்சி அழைக்க கோருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் முதல்வர் பன்னீர் செல்வம் மாலை 5 மணிக்கு ஆளுநரை சந்திப்பார், சசிகலா மாலை 7.30 மணிக்கு ஆளுநரை சந்திப்பார் என்று ஆளுநர் மாளிகை கூறியதாக தந்தி டி.வி. செய்தி தெரிவித்துள்ளது.

பன்னீர்செல்வம் தான் எந்த சூழலில் ராஜினாமா முடிவை எடுத்தேன் என்பது குறித்து ஆளுநரிடம் விளக்கமாக கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.