எல்லை நிர்ணய அறிக்கை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் பின்பு தேர்தலை நடத்துவதற்கு 90 நாட்கள் தேவைப்படும். அநேகமாக ஜூன் மாதத்தில் தேர்தலை நடத்த முடியும்.
2016 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின்படியே தேர்தல் நடைபெறும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் பணிகளுக்கு அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும், தலைவர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல்கள் திணைக்களத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்ததேசப்பிரியவுக்கும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
எல்லை நிர்ணய முறைப்பாட்டு விசாரணைக்குழுவின் அறிக்கையின் ஒரு பகுதி இன்று வியாழக்கிழமை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும். எஞ்சிய பகுதிகள் அனைத்தும் பிரசுரத்துக்காக எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்பு அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது
எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகரிக்கப்பட்டுள்ள வட்டாரங்கள் தொடர்பிலான விபரங்களை வர்த்தமானியில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மேற்கொண்டுள்ளார்.
தேர்தல் என்பது ஒரு விளையாட்டாகும். விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருக்கிறது. ஆனால் விளையாட்டு மைதானத்தை தயார்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
மைதானத்தை எம்மிடம் கையளிக்கும் வரை தேர்தல் எனும் விளையாட்டுப் போட்டியை நடத்த முடியாது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாகாண சபைத்தேர்தலுக்காகவும் அரசாங்கம் பணம் ஒதுக்கத் தயாராகவுள்ளது.
தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என்று சிலர் குற்றம் சுமத்துவது தவறானதாகும் என்றார்.