கேப்பாபிலவு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த றிசாட்

 

சுஐப் எம் காசிம்

 

 முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் காணிப்பிரச்சினையையும் புதுக்குடியிருப்பு மக்களின் காணிப்பிரச்சினையும் அவசரமாக தீர்த்து வைக்குமாறு ஜனாதிபதியிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.

நேற்று முன்தினம் (06.02.2016) மாலை ஜனாதிபதி தலைமையில் பிரதமரின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்ற அரசாங்க பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் இந்த வேண்டுகோளை விடுத்தார். 

சுதந்திர தினத்தன்று அந்தப் பிரதேசத்துக்கு தான் சென்றபோது கேப்பாபிலவு மக்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராது கேப்பாபிலவு விமானப்படை முகாமுக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். படையினர் வசமிருக்கும் தமது காணிகளை விடுவித்துத்தறுமாறு கோரியே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.  தமக்குரித்தான காணிகளை கையளிப்பதாக படையினர் பல தடவைகள் உறுதிமொழிகள் வழங்கியும் இன்னும் அது நடைபெறவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

 

 பொதுமக்களின் 500 ஏக்கர் காணிகளை படையினர் கையகப்படுத்தியுள்ளதாக அவர்கள் கூறுகின்ற போதும் படையினரும், அதிகாரிகளும் வேறுவிதமான புள்ளிவிபரங்களை தெரிவிக்கினறனர். எனவே இந்தப் பிரச்சினைக்கு முடிவு காணும் வகையில் சுதந்திரமான ஆணைக்குழுவொன்றை அமைத்து அதனைத் தீர விசாரித்து நியாயமான தீர்வை மேற்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அத்துடன் 2012 ஆம் ஆண்டில் வனபரிபாலன திணைக்களம் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் மக்களின் காணிகளை சுவீகரித்ததாக இவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே 2012 ஆம் ஆண்டு வனபரிபாலனத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பிலும் ஒரு நடுநிலையான விசாரணையை நடாத்தி பாதிக்கப்பட்டவர்களக்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்ட போது ஜனாதிபதி இந்த விடயங்களை தனக்கு எழுத்து மூலம் தருமாறும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அங்கு உறுதியளித்தார்.