பணம் ,பதவிகளுக்காக மீண்டும் ஹக்கீமையே இந்த உயர் பீட உறுப்பினர்கள் தெரிவு செய்யப்போகிறார்கள் ?

நாம் இஸ்லாம் எனும் ஒரு உன்னதமான மார்க்கத்தைப் பின்பற்றுகிறோம். அது ஒரு பூரண வாழ்க்கைத் திட்டமாகும். அதன் கற்பித்தல்களை ஏற்று நடப்போமாக இருந்தால் எமது வாழ்வும், எமது சமூகமும் மிகவும் சிறப்பான நிலையில் இருக்கும் என்பது திண்ணம். வரலாற்றில், இவ்வாறு இஸ்லாமிய வாழ்க்கை முறையை அனுசரித்து வாழ்ந்த பல உன்னதமான சமுதாயங்களைப் பற்றி அறிந்திருக்கின்றோம்.
 
 
இன்றைய எமது சமூகம் இவ்வாறுதான் உன்னதமான நிலையில் இருக்கின்றதா? மனச்சாட்சியைத் தொட்டு நாம் அனைவரும் சந்தோஷமாக, ஆம் என்று பதில் சொல்ல முடியுமா?
 
பிற சமூகத்தை சேர்ந்தவர்கள் நம்மைப் பிரமிப்புடன் பார்க்க, வாழ வேண்டிய வாழ்க்கை முறையை கொண்ட நாம், இன்று அவர்கள் நம்மை எள்ளி நகையாடும் நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 
 
இதற்கு மார்க்க வழிமுறைகள் நம் அன்றாட வாழ்க்கையை விட்டும் அந்நியப்படுத்தப்பட்டதுதான் முழு முதல் காரணமாகும்.
 
வட்டி ஒரு கொடுமை என்றும், வட்டி வாங்குவதும், கொடுப்பதும் இறைவனுடன் நேரடியாக போர் தொடுப்பதற்கு ஒப்பானது என்றும் கூறப்பட்டிருக்க, எமது பிரதேசம் முழுவதும் வட்டிக் கடைகளால் நிறைந்திருக்கும் காரணம் என்ன? எமது ஊர்களில் உள்ள அனேகமானவர்களின் வீடு/காணி உறுதிகள், இவ்வட்டிக் கடைகளிலேயே அடகு வைக்கப்பட்டிருக்கின்றது என்பது துயரமான உண்மை. இஸ்லாம் காட்டித்தந்த அழகிய கடன் முறை எங்கே? 
 
இது நம் பிரதேசங்களில் உள்ள மார்க்க அறிஞர்களுக்கும், மௌலவிமார்களுக்கும், கல்விமான்களுக்கும், பள்ளி நிர்வாக சபையினருக்கும் தெரியாத விடயமா? வெள்ளிக்கிழமைகளில் பேருக்காக குத்பா பிரசங்கம் செய்பவர்களும், கேட்பவர்களும், பிரசங்கங்களில் கூறப்படுபவை பற்றி தம் வாழ்வில் ஏற்று நடக்குமாற் போன்ற சமூக அமைப்பையா நாம் கொண்டிருக்கின்றோம். 
 
நமது ஸக்காத்துக்கள் சதக்காக்கள் எந்தளவு வறுமையை போக்க உதவுகின்றன என்றாவது நாம் கவலைப்படுகின்றோமா? இந்த முறை ஸக்காத் வாங்கியவர் அடுத்த முறையும் வந்து நிற்கிறார். இப்படியே அவரது ஆயுள் முழுவதும் இரந்து கேட்பவராகவே இருந்து மரித்துப் போகிறார். என்ன பிரயோசனம்? அடுத்த முறை, அவர் ஸக்காத் கொடுக்கும் நிலைமையை உருவாக்குவதில்தானே அவருக்குக் கொடுக்கப்பட்ட ஸக்காத் பிரயோசனமானதாகும்.
 
ஒவ்வொரு ஊர்களிலும் தத்தமது தேவைக்கும், வசதிக்கும், வளங்களுக்கும் ஏற்றாற்போல் முடியுமானவாறு சில ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்கிறார்கள். 
 
இது போதாது. இது முழுமையானதல்ல. இது மேலும் செம்மைப்படுத்தப்பட்டு, சமூகத்தின் தேவைப்பாடுள்ள அனைத்து தரப்பினரும் நன்மையடைந்து, மீண்டும் இரந்து வாழும் நிலையில் இருந்து மீட்சி பெறும் வகையில் சீரமைக்கப்பட வேண்டும்.
 
சமூக அநீதிகளையும், சமூகத் தீங்குகளையும், பாவங்களையும் சகஜமாகப் பார்க்கும் நிலைக்கு, நம்மை கொண்டு வந்திருப்பது எது? இதில், நமது அபிலாஷைகளை வென்று தருவதாகக்கூறி, நம் சமூக ஒற்றுமையை சிதறடித்த அரசியலின் பங்கு எவ்வளவு என்று யோசித்திருக்கின்றோமா? 
 
கேவலம், அரசியலுக்காக நம் சகோதரர்கள் ஒருவரையொருவர் எதிரிகளாகப் பார்ப்பதற்கும், கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதற்கும், எதிராளியின் குடும்ப விவகாரங்களை எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பகிரங்கமாக விமர்சிப்பதற்கும் முன்னிற்கும் அவலத்தைப் பார்த்து, படித்த நாகரீகமான இளைஞர்கள் மனதுக்குள் மாத்திரம் அழுதால் போதுமா?
 
போதைவஸ்து பாவனை முன்னெற்போதும் இல்லாத அளவு நம் இளைஞர்களிடையே பரவியுள்ளது. பெரியோரையும், வயோதிபர்களையும், ஆசிரியர்களையும், கல்விமான்களையும் மதிக்கக் கற்றுக் கொடுக்கப்பட்டவர்கள் நாம். இன்றுள்ள இளைஞர்களிடையே இது அருகி வருவது மிகவும் கவலை கொள்ள வைக்கிறது.
 
வீட்டு வேலைக்காக, எமது பெண்கள் வளைகுடா நாடுகளுக்கு செல்வதற்காக விமான நிலையத்தில் வரிசையில் நிற்பதை காணும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும,் ஒரு கையறு நிலையில் மனது வலிப்பதும், இச்சமூக அவலங்களை நீக்குவதற்காக என்று நாம் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ், எதுவுமே செய்யாது சுயநல அரசியலில் உழன்று கொண்டிருப்பதை எண்ணி வேதனைப்படுவதும் போதும் இனி.
 
முஸ்லிம் காங்கிரஸ், இத்தனை அதிகாரங்களுடன், முஸ்லிம் நாடுகளின் தூதரகங்கள் மூலமாகவும் ஏனைய NGO கள் மூலமாகவும், உதவிகளைப் பெற்று ஆடைத் தொழிற்சாலைகள் போன்றவை மூலம் இவ் ஏழைப் பெண்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்கி, 
ஒரு முறையான சமூக கட்டமைப்பை ஏற்படுத்தியிருக்க முடியும். இதன் மூலம் எமது ஒரு சகோதரி கூட வெளிநாடு சென்று சீரழியும் அவலத்தைத் தடுத்திருக்க முடியும். அவர்கள் செய்யவில்லை. பல ரிஸானாக்களின் உயிர்களும், மானங்களும் பாதுகாக்கப்பட்டிருக்கும். அவர்கள் செய்யவில்லை. தமது உட்கட்சிப் பூசல்களில் காலத்தைக் கழித்தார்கள். மக்களை முட்டாள்கள் ஆக்கினார்கள்.
கேள்வி கேட்டவர்களை துரோகிப்பட்டம் கட்டி ஒதுக்கினார்கள். இனியும் இவர்களை நம்பி பிரயோசனம் இல்லை. 
 
முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று, கிழக்கு முஸ்லிம்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் செய்த அத்தனை துரோகங்களையும் தோலுரித்துக் காட்டிய பின்பும், பணத்துக்காகவும், பதவிகளுக்காகவும் மீண்டும் ரவூப் ஹக்கீமையே இந்த உயர் பீட உறுப்பினர்கள் தெரிவு செய்யப்போகிறார்கள். இதன் மூலம் தலைமை கிழக்கிற்கு வேண்டும் என்ற மக்கள் விருப்பத்தைக் காட்டிக்கொடுத்த ”கிழக்கின் துரோகிகளாகவே” ஊர் திரும்பப் போகிறார்கள். இவர்களை இனியும் நம்பிப் பிரயோசனம் இல்லை.
 
 
நமக்கு முன்பு வாழ்ந்த நம் சொந்த சமூகம் எவ்வளவு தூரம் சொரணை கெட்ட சமூகமாக இருந்திருக்கின்றது என்பதை விருப்பு வெறுப்புகளுக்கப்பால் சிந்திக்க முடிந்தால், எந்த மாற்றத்தையும் கொண்டு வர முயலாமல், அதேயளவு சொரணை கெட்ட சமூகமாக நாமும் வாழ்ந்து கொண்டிருப்பதை உணரலாம்.
 
நமது சகோதர முஸ்லிமை ஒரு காபீரை விடவும் மோசமான முறையில் விமர்சிக்க வைத்து, ஒரு எதிரியைப்போல் வெறுக்க வைத்துள்ள இந்த அசிங்கமான அரசியல் நமக்கு வேண்டாம். அவ்வாறென்றால் நாம் என்ன செய்வது?
 
நாம் இளைஞர்கள் சேர்ந்து ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதா? இஸ்லாமிய விரோத தலைமைகளையும் புறக்கணிப்பதா? 
 
நமக்கான கனவை நிறைவேற்றும் தகுதியும், திறமையும் இறைவன் அருளால் நம்மிடம் உண்டு. முதலில் இளைஞர்கள் நாம் ஒன்று படுவோம். இன்ஷா அல்லாஹ் பின்பு அனைவரையும் ஒற்றுமைப்படுத்துவோம். என்று புது யுகம் படைக்கப் புறப்படுவதா?
 
மாற்றம் ஒன்றே ஒரே வழி. யோசியுங்கள். இதை பகிருங்கள். உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள்.
 
தலைமைத்துவ சபை
கிழக்கின் எழுச்சி