அந்தப் பெண்ணின் பெயர் குமாரி கூரே, அவர் ஹக்கீமிற்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூற வந்திருந்தார்

 (இந்தக் கட்டுரையின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் எந்த அரசியல் வாதியும் இதில் சொல்லப்பட்டிருப்பவை பொய் என்றால் எனக்கெதிராக மான நஷ்ட வழக்குப்போடலாம்)

ஆரம்பம்-1

மு.கா தவிசாளரின் பேட்டியும் அதனைத் தொடர்ந்த அவரின் முகப்புத்தகப் பதிவும் ஏற்படுத்திய அதிர்வு இன்னும் ஆறவில்லை.

இதுவரை காலமும் காங்கிறசின் சில அரசியல் நகர்வுகளுக்குப் பின்னால் உள்ள வியாக்கியாங்கள் ‘’அரசியல் சதுரங்கத்தில்’’ சரியாகப் பொருந்தி வராமலும்,தொடர்பறுந்துதாகவும் இருந்தது எனக்கு.அதற்கான சில விடைகள் தவிசாளர் கொடுத்த தகவல்களில் கிடைத்தது.நிரப்ப முடியாமல் கிடந்த சில இடைவெளிகளுக்கு எனக்கு விடைகள் கிடைத்தன.

அந்த இடைவெளி நிரப்பப்பட்ட தகவல்களோடு நான் தேட ஆரம்பித்தேன். கணிசமான அளவு நான் தேடிவிட்டேன்.ஆனால் ஒரு முடிச்சு அவுழும்போது பயங்கரமானதும்,அசிங்கமானதும்,ஆபத்தானதுமான உண்மைகள் சில தெரியவருகின்றன.அது இன்னும் பல முடிச்சுகளுக்கு இட்டுச் செல்கின்றன். இதுவரை காலும் நமக்குச் சொல்லப்பட்ட சில விடயங்களை மீள்பரிசீலனை செய்வதும் எனக்கு அவசியமாயிற்று. ஒரு மர்ம நாவலை வாசிக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது.

இதனை ஒரு பொதுத் தளத்தில் நான் ஏன் எழுத விரும்புகிறேன். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை நான் ஏன் தோண்டிப்பார்க்கிறேன் என்பதை நான் மீண்டும் மீண்டும் எனக்குள் கேட்டுக்கொள்கிறேன்.எனது இறைவன் கொடுத்த ஒரே உதிப்பு இதுதான்.ஒரு அரசியல் தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கையால் இலங்கை முஸ்லீம்களின் அரசியல் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து அந்த மக்களை விடுவிப்பதற்காக ஒரு முயற்சி மாத்திரமே இது என நான் ஆறுதல்பட்டுக்கொள்கிறேன்.

மக்களுக்கு ஒரு கண்கட்டு வித்தையைக் காட்டி,அவர்களுக்கு அரசியல் பூச்சாண்டி காட்டி,முழு முஸ்லிம்களின் உரிமையையும் தனது அந்தப்புரத்துக் கட்டிலுக்குக்கீழ் கட்டிவைத்தவரின் மீது எல்லோரையும் போல் எனக்குக் கோபம் வருகிறது.இந்தக் கட்சிக்காக உயிரை,சொத்தை இழந்தவர்களின் முயற்சிகள் அனைத்தும் வீணாய்ப்போய்விட்டதே என்று நினைத்துக் கண்ணீரும் வருகிறது.ஓ போராளிகளே இதுதான் உங்கள் தலைவன். இப்படிப்பட்டவரைத்தான் இத்தனை காலமும் தோளில் சுமந்தீர்கள் என்று அவர்களின் சட்டைகளைப் பிடித்து கத்த வேண்டும் போல் தோன்றுகிறது.

எனது தேடல் இன்னும் முடியவில்லை.இதுவரை தேடியவைகளைச் சொல்கிறேன்.இன்னும் பல தகவல்கள் தேவைப்படுகின்றன.அவற்றிற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். எனக்குப் பலர் தகவல் தருகிறார்கள்.பாரபட்சமின்றி இந்த சமூகத்தின் நலனைப் பற்றிச் சிந்திக்கும் நல்லவர்கள் அவர்கள்.அவர்களை நான் எந்த சந்தர்ப்பத்திலும் வெளியிடமாட்டேன்.அவர்களின் அனுமதியின்றி தகவல்களைப் பகிரவும் மாட்டேன். சில சட்டச்சிக்கல்களுக்காக எல்லாத் தகவல்களையும் என்னால் பொதுத்தளத்தில் பகிரவும் முடியாது.
நேரம் கிடைக்கும்போது மாத்திரம்தான் என்னால் எழுத முடியும்.

நான் கொண்டு வரும் முடிவுகளுக்கு முடியுமானவரை விஞ்ஞானத்தன்மை கொடுக்க நினைக்கிறேன்.எனக்கு கிடைக்கும் அனைத்து தகவல்களையும் முடியுமானவரை Social research methodology மற்றும் investigative journalism அடிப்படைகளைக் கொண்டு தரம்பிரித்து,பெற்ற தகவல்களைப் பயன்படுத்தி எது நடந்திருக்கலாம் என்று பல அனுமானங்களை (Hypothesis) உருவாக்கி,அந்த அனுமானங்களிலிருந்து ‘’ Analyzing competing Hypothesis (ACH)’’ முறையைப் பயன்படுத்தி முடிவுகளுக்கு வருகிறேன்.

இறுதியாக ஒரு சிலரை எச்சரிக்க விரும்புகிறேன். நான் எந்தக் கட்சிக்கும் சார்பானவன் அல்ல. இன்னும் சொல்லப்போனால் ஜனநாயக அரசியலின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.அந்த அரசியலை இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு ஜனநாயக அரசியலில் ஏமாற்றுவது சகஜம் இனி ஏமாறாமல் இருக்க முயற்சி செய்யுங்கள் என்று சொல்வதற்காகவே இதனை எழுதுகிறேன்.சில காங்கிறசின் ஒட்டுண்ணிகளும்,மரங்கொத்திகளும் என் மீது வழைமை போல் வசை பாட ஆரம்பிக்கலாம். அவர்கள் தலைவரைக் காப்பதற்கு சில கவனக்கலைப்பான்களையும் செய்யலாம். தனது அரசியல் தலைவருக்கு குஞ்சம் கட்டி,மஞ்சம் பிடிக்கும் சிலர் எனது தூய எண்ணத்தில் புழுதி வாரி இறைக்க நினைத்து.ஏடாகூடாமாக நடந்து கொண்டால் எனது பிரார்த்தனையும்,எனது எழுத்தும் அவர்களை எரித்துவிடட்டும். 

 

 நிழலான நிஜங்கள்- நடந்தது என்ன? (பகுதி 2)

 

எமது கதை 2004ல் நடக்கிறது.அன்று திகதி 2004 ஏப்ரல் 13.ரவூப் ஹக்கீமின் பிறந்த நாள்.

ரவூப் ஹக்கீம் அவர்களின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் அப்போதைய முஸ்லிம் காங்கிறசின் நான்கு பாரளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தலைவரோடு காரசாரமாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.அவர்கள் ரிஷாட் பதுர்தீன்,நஜீம் ஏ மஜீத்,பைஸல் காசிம் மற்றும் அமீர் அலி ஆகியோர்.

அப்போது சந்திரிக்கா அவர்கள் இரண்டாம் முறையாக ஜனாதிபதியாகி ஐந்து வருடங்கள் கடந்திருந்தன.ஏழு நாட்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்திருந்தார்.சந்திரிகாவின் அரசாங்கம் தள்ளாடிக்கொண்டிருந்தது.

2000ம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலின் பின்னர் ஆட்சி அமைத்திருந்த சுதந்திரக் கூட்டணியில் இருந்து காங்கிறஸும் ஏனைய சில சுதந்திரக் கூட்டணி உறுப்புனர்களும் விலகியதை அடுத்து சுதந்திரக் கூட்டணி பெரும்பான்மை இழந்தது.அதனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் 2001ல் தேர்தல் நடாத்தப்பட்டது.அந்தத் தேர்தலில் ரணில் வெற்றிபெற்று பிரதமரானார்.முஸ்லிம் காங்கிறஸ் உறுப்பினர்கள் ரணிலின் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தார்கள்.ஜனாதிபதி ஒரு கட்சியும் பாராளுமன்றப் பெரும்பான்மை ஒரு கட்சியுமாக இருந்த இக்காலப்பகுதியில் சந்திரிகாவிற்கும் ரணிலுக்கும் இடையில் அடிக்கடி பூசல்கள் உருவாகின.இதனால் இரண்டரை வருடங்களின் பின்னர் பாராளுமன்றம் மீண்டும் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் 2004ல்நடாத்தப்பட்டது. இக்காலப்பகுதியில்தான் நமது கதை நடைபெறுகிறது. 2004 ஏப்ரல் 2ம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிக்காவின் சுதந்திரக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்திருந்தது.ரணிலின் ஐக்கிய தேசிய முன்னணி தோல்வியைத் தழுவி இருந்தது.முஸ்லிம் காங்கிறஸ் ரணிலின் எதிர்க்கட்சியில் அங்கத்துவராக இருந்தது.

புதிய பாராளுமன்றத்திற்கு சபாநாயகர் தெரியும் தேர்தல் சூடு பிடித்திருத்திருந்தது.சந்திரிகாவின் சுதந்திர கூட்டணி டி.ஈ.டபுள்யூ குனசேகரவை வேட்பாளராகவும்,ரணிலின் தேசிய ஐக்கிய முன்னணி டபுள்யூ.ஜே.எம்.லொகுபண்டாரவை வேட்பாளராகவும் நியமித்திருந்தது.எப்படியாவது சபாநாயகர் பதவியை தமது வேட்பாளர்தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் சந்திரிகா மிகவும் ஆர்வமாக இருந்தார்.தனது கட்சியின் சபாநாயகர் வேட்பாளருக்கு வாக்களிக்கக் கோரி எதிர்கட்சி உறுப்பினர்களிடம் பேரம் பேசும் நடவடிக்கை நடந்து கொண்டிருந்தது.பைசல் காஸில்,நஜீப் ஏ மஜீத்,ரிஷாத் பதியுதீன்,அமீர் அலி ஆகிய நால்வரிடமும் ஏற்கனவே சுதந்திரக் கூட்டணி பேரம் பேசியிருந்தது.

சபாநாயகரை தனது கட்சி பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது மாத்திரமல்லாமல் ஒரு யாப்பு சபையை உருவாக்கி ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற பேராவலுடன் சந்திரிக்கா இருந்தார்.ஜனாதிபதி முறையை ஒழிப்பது சிறுபான்மை முஸ்லீம்களுக்கு ஆபத்தாக முடியும் என்ற கருத்தில் ஹக்கீம் இருந்தார்.இதனால் முஸ்லிம் காங்கிறசின் சில உறுப்பினர்களை எப்படியாவது வாங்கிவிடவேண்டிய அவசியம் சந்திரிகாவிற்கு இருந்தது.அத்தோடு 2001ல் தனது ஆட்சி கலைந்தமைக்கான முக்கிய காரணம் ஹக்கீம் என்பதாலும், நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வதற்கான முயற்சியில் முட்டுக்கட்டையாக இருப்பதும் ஹக்கீம் என்பதாலும் சந்திரிக்கா அவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்தார்.இதனைத்தான் பஷீர் சேகு தாவூத் அவர்கள் கடந்த அதிர்வு நிகழ்ச்சியில் உறுதிப்படுத்தியிருந்தார். ஹக்கீமுக்கு சரியானதொரு பாடம் புகட்டவேண்டும் என்று ஒரு சந்தர்ப்பத்திற்காக சந்திரிக்கா காத்திருந்தார்.

ஏற்கனவே ஆசைகாட்டப்பட்டிருந்த நான்கு உறுப்பினர்களும் சந்திரிகாவின் அரசாங்கத்தில் சேரவேண்டிய அவசியத்தையும், ஆர்வத்தையும் கூறி ஹக்கீம் அவர்களை பணியவைப்பதற்காக 2004 ஏப்ரல் 13ம் திகதி ஹக்கீமின் உத்தியோக இல்லத்தில் வந்து ஹகீமோடு விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பேசிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஹக்கீம் அவர்களைச் சந்திப்பதற்காக ஒரு பெண் வந்திருப்பதாக ஹக்கீமுக்கு தகவல் வந்தது.

அந்தப் பெண்ணின் பெயர் குமாரி கூரே.அவர் ஹக்கீமிற்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூற வந்திருந்தார்.

—தொடரும்—

ராசி முஹம்மத் ஜாபீர்