மு.கா யாப்பின் பிரகாரம் கட்சித் தலைவர் சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் எங்கும் இல்லை

மஷூறா அடிப்படையிலான கட்சித் தீர்மானங்கள்

மு.கா யாப்பின் 3.1 ஆனது “கட்சித் தீர்மானங்களை மேற்கொள்ளும் அதி உயர் அங்கம் கட்சியின் உயர்பீடமாகும்.அதன் தீர்மானங்கள் எல்லாம் கருத்தொருமைப்பாட்டின் (மஷூரா) அடிப்படையில் மஷூறா சபையின் ஆலோசனையுடனேயே மேற்கொள்ளப்படும்.அத்துடன் அத் தீர்மானங்கள் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரையும் பிணைப்பனவாகும்”

மு.காவின் யாப்பில் உள்ள மிகச் சிறந்த பாகமாக இதனை கூறுவதோடு இன்று நடைமுறையில் சிறிதுமில்லாது செத்த பாகமாகவும் இதனை குறிப்பிடலாம்.ஒரு விடயம் தொடர்பில் பிரச்சினை எழுகின்ற போது அனைவரும் சேர்ந்து விவாதித்து ஒரு முடிவிற்கு வருவதே மிகவும் ஆரோக்கியமானது.இன்று மு.கா அப்படி எந்த முடிவையும் எடுத்ததாக அறிய முடியவில்லை.இன்று மு.கா எதிர்நோக்கும் மிக முக்கியமானதொரு சவால் தேசியப்பட்டியல் சவாலாகும்.அமைச்சர் ஹக்கீம்,தான் சென்ற இடமெல்லாம் தனது சுய முடிவின் பிரகாரம் வாக்குறுதியை வழங்கினார்.தேர்தலுக்கு முன்பு மு.காவின் உயர்பீடம் தேசியப்பட்டியலை யாருக்கு வழங்குவதென்ற அதிகாரத்தை ஒரு போதும் அமைச்சர் ஹக்கீமிற்கு வழங்கியிருக்கவில்லை.அவர் கட்சியின் எந்த முடிவையும் சுயமாக எடுக்கும் அதிகாரம் (குறைந்தது மஷூரா சபையின் ஆலோசனையுடன் எடுக்கப்பட வேண்டும் என்பதே மு.காவின் யாப்பு கூறுவதாகும்.) மு.காவின் யாப்பின் பிரகாரம் எங்கும் இல்லை.இருந்தாலும் இது பற்றி யாருமே கேள்வி கேட்டதாகவும் இல்லை.

இன்று மு.கா ஒரு தீர்மானத்தை எடுப்பதற்காக கூட்டப்படும் உயர்பீடக் கூட்டங்களில் கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் முடுவுகளை எடுத்தாக அறிய முடியவில்லை.கூட்டத்தின் இறுதியில் தலைவரே முடிவெடுப்பார் என்பதே உயர் பீடக் கூட்டங்களில் அதன் உறுப்பினர்கள் கருத்தொருமைப்படும் விடயமாகும்.அப்படியானால் உயர்பீடக் கூட்டங்கள் கூட்டுவதில் உள்ள பயன்பாடு தான் என்ன? மர்ஹூம் அஷ்ரபுடைய காலத்தில்  ஒரு விடயத்தில் தீர்மானம் எடுப்பதற்கு பெரும் பான்மை உறுப்பினர்களின் கருத்தை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.தற்போது மு.காவின் உயர்பீடத்தில் ஒரு விடயம் விவாதத்திற்குட்படும் போது யார்? என்ன கதைக்கின்றார்கள் என்பது சமூக வலைத்தளங்களில் நாற்றமெடுக்க ஆரம்பித்துவிடும்.இதன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகவே இன்று உயர்பீடக் கூட்டங்களில் பலரும் ஆரோக்கியமான விவாதம் செய்ய அஞ்சுகின்றனர்.இந் நிலை மாற்றம்பெற வேண்டும்.அன்று மு.காவில் பல குழுக்கள் காணப்படவில்லை.இன்று ஒரு ஊரிலேயே மு.காவிற்குள் பல குழுக்கள் காணப்படுகின்றன.இதன் காரணமாக மு.காவினுள் அவ்வாறான இழி செயல்களை மாற்றுவது அவ்வளவு இலகுவானதுமல்ல.

 மு.காவின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரபினுடைய காலத்தில் உயர்பீட உறுப்பினர்களின் தொகை 23 ஆகவே இருந்தது (தற்போது கட்சியின் நிர்வாகிகளே முப்பது பேர் காணப்படுகின்றனர்.).அவ் எண்ணிக்கை திடீரென 85 ஆக அதிகரித்து தற்போது 90 (இவ் எண்ணிக்கையை மு.கா யாப்பின் 8.2எனும் பாகம் குறிப்பிடுகிறது) இல் வந்து நிற்கின்றது.இவர்களுக்குள் கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் ஒரு முடிவை எடுப்பது எப்போதும் கடினம் தான்.அஷ்ரபின் காலத்தில் விருட்சகமாக இருந்த மு.கா இன்று ஒரு சிறு செடி போல் காணப்படுவதால் உயர்பீட எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டுமே ஒழிய அதிகரித்திரிக்கக் கூடாது.இதிலிருந்து இப் பாகத்தை நடைமுறைச் சாத்தியமற்ற வகையில் ஆக்கியதன் மிகப் பெரும் பங்கு அமைச்சர் ஹக்கீமை சாரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேலுள்ள  “அத் தீர்மானங்கள் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரையும் பிணைப்பனவாகும்” என்ற வசனம்  மிக முக்கியமானதாகும்.தற்போதைய கட்சியின் தீர்மானங்கள் அனைத்தும் ஹக்கீமின் தீர்மானமாகவே காணப்படுகிறது.அவர் தீர்மானம் எடுப்பதற்கு முன்பு பலரும் தங்களுக்குள் அடித்துக்கொண்டாலும் அவர் ஒரு தீர்மானம் எடுத்துவிட்டால் அதற்கு உயர்பீட உறுப்பினர்கள் கட்டுப்பட்டுக்கொள்வார்கள்.இதனை வைத்து அதில் உள்ளவர்கள் தலைமைத்துவத்திற்கு சிறந்த முறையில் கட்டுப்படுகிறார்கள் என்று கூறினால் அதில் அவர்களது சுக போகங்கள்,அரசியல் எதிர்காலங்கள் சிந்திக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.எதிர்த்தால் கட்சியை விட்டுச் செல்ல வேண்டும்.மு.காவை விட்டுச் சென்றால் வெளியில் அரசியல் செய்வது அவ்வளவு இலகுவானதல்ல.

மு.கா யாப்பின் 3.4ஆனது “உயர் பீட கூட்டங்களின் கூட்டக்குறிப்புக்கள் தமிழில் தயாரிக்கப்பட்டு வாசிக்கப்படவேண்டும். அத்துடன் கூட்டக்குறிப்புக்கள் முன்கூட்டியே உறுப்பினர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படவேண்டும். தேவை ஏற்படும் பட்சத்தில் வேறு மொழிகளில் பரிவர்த்தனை செய்யப்பட வேண்டும்.” எனக் கூறுகிறது.இப் பாகமும் இன்று நடைமுறையில் இல்லை.

3.1a எனும் பாகமானது “அதி உயர்பீடமானது  ஏதாவது ஒரு விடயத்தில் இறுதி முடிவை எடுப்பதற்காக சமர்பிக்கும் சகல யோசனைகளையும் /தீர்மானங்களையும்  பரிசீலிப்பதற்கான மஷூறா சபை பின்வருமாறு அமையும்

பதவி வழியாக -அத்தியாயம் .8.3a யில் குறிப்பிடப்பட்டுள்ள 30 உத்தியோகத்தர்களும் மேலதிகமாக மஷூறா சபையின் ஆலோசனையுடன் மூன்று மாதங்களுக்கொருமுறை சுழற்சி முறையில் நியமிக்கப்படும் துறை சார்ந்த ஐவரும் இடம்பெறுவர்.மஷூரா சபையின் அனுமதிபெறாத எந்த ஒரு விடயமும் கட்சி சார்ந்த முடிவாக கொள்ளலாகாது.மஷூரா சபையின் செயலாளராக கட்சியின் செயலாளர் நாயகம் இருப்பார்.”

இப் பாகத்திலிருந்து மஷூறா சபை என்பது உயர் பீடத்திலிருந்து வேறுபட்ட ஒரு தனிப்பிரிவு என்பதை மிக இலகுவாக அறிந்து கொள்ள முடிகிறது.இருந்தாலும் தற்போது மஷூரா சபையென உயர்பீடத்தை பலரும் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.இம் மஷூறா சபையில் இடம்பெறும் 8.3a யில் குறிப்பிடப்பட்டுள்ள 30 உத்தியோகத்தர்களும் என்பவர்கள் தலைவர்,தவிசாளர்,சிரேஷ்ட பிரதித்  தலைவர்,பிரதித் தலைவர் – 1,பிரதித் தலைவர் – 2 ,பிரதித் தலைவர் – 3,பிரதித் தலைவர் – 4,செயலாளர் நாயகம்,பொருளாளர்,மஜ்லிஸ் – ஈ – சூறா தலைவர்,தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளர் ,தேசிய பிரசாரச் செயலாளர்,தேசிய அமைப்பாளர்,சர்வதேச விவகாரங்கள் பணிப்பாளர்,யாப்பு விவகாரங்கள் பணிப்பாளர் ,இணை அங்கங்களின் பணிப்பாளர்,உலமாக்கள் காங்கிரஸின் பிரதிநிதி ,அரசியல் விவகாரங்கள் பணிப்பாளர் ,பிரதித் தவிசாளர்,பிரதிச் செயலாளர் நாயகம் ,பிரதிப் பொதுப் பொருளாளர்,மஜ்லிஸ் – ஈ – சூறாவின் பிரதித் தலைவர் ,பிரதித்  தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளர்,பிரதித் தேசிய அமைப்பாளர்,செயலாளர்- அரசியல் மற்றும் மத விவகாரம்,செயலாளர்-கல்வி மற்றும் கலாச்சார விவகாரம்,செயலாளர்-இளைஞர் மற்றும் தொழில் வாய்ப்பு விவகாரம்,செயலாளர்-சமூக மற்றும் அணர்த்த நிவாரண விவகாரம்,செயலாளர்-தொழில் சங்க விவகாரம் ஆகியவர்களாகும்.

மு.கா யாப்பில் எந்த தீர்மானங்கள் எடுப்பதாக இருந்தாலும் அது மஷூறா சபையின் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே உள்ளது.இன்று மஷூறா சபை ஒன்று எதற்காகவும் கூட்டப்படுவதாக அறிய முடியவில்லை.இந்த மஷூரா சபையின் அதிகாரத்தை எடுத்து நோக்க ”மஷூரா சபையின் அனுமதிபெறாத எந்த ஒரு விடயமும் கட்சி சார்ந்த முடிவாக கொள்ளலாகாது.” எனும் வசனமே போதுமானதாகும்.மு.கா யாப்பின் 8.9.m ஆனது “உயர்பீடத்தின் சகல தீர்மானங்களும்/நடவடிக்கைகளும் மஷூரா சபையின் ஆலோசனையுடனும் ஒப்புதலுடனுமே மேற்கொள்ளப்பட வேண்டும்” எனக் கூறுகிறது.மு.கா யாப்பின் 3.3 ஆனது கட்சித் தலைவரின் விசேட அதிகாரங்கள் குறித்து பேசுகிறது.இவ் அதிகாரத்தின் படி மு.காவின் தலைவர் கட்சி பற்றிய எந்த முடிவையும் எடுக்க முடியும்.இப் பாகத்திலும் மஷூரா சபையின் ஆலோசனையுடன் முடிவெடுக்கப்பட வேண்டும் என்றே கூறுகிறது.மு.காவின் தேசிய மாநாட்டில் வைத்து சூறா சபையின் தலைவரே மஷூரா சபையின் ஆலோசனை இன்றி நீக்கப்பட்டார்.இதுவும் மு.காவின் யாப்பிற்கு முரணானதே.இது தொடர்பில்  ஆராய்ந்த போது தற்போது மஷூறா சபை என்பது இயக்கத்தில் இல்லை என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.மு.காவின் யாப்பில் உள்ள மிக முக்கிய பாகமான இது இன்று நடைமுறையில் இல்லாமை மு.காவின் மொத்த யாப்பின் செயற்பாட்டையும் கேள்விக்குட்படுத்துகிறது.

இதில் உள்ள சிறப்பம்சமாக “மஷூறா சபையின் ஆலோசனையுடன் மூன்று மாதங்களுக்கொருமுறை சுழற்சி முறையில் நியமிக்கப்படும் துறை சார்ந்த ஐவரும் இடம்பெறுவர்”எனும் வசனத்தை நோக்கலாம்.மு.கா யாப்பின்  3.3எனும் பாகமானது ஒரு விடயத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கு துறைசார் நிபுணர்கள் தேவைப்படுவார்கள்.முஸ்லிம்களின் திருமண வயதெல்லை மாற்றம் போன்றவற்றில் சரியான தீர்மானம் எடுக்க அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் முக்கிய பிரதிநிதிகள்,இஸ்லாமிய அறிஞ்சர்களை  உள் வாங்கி செயற்பட்டிருக்கலாம்.இருந்தாலும் யாப்பின் இந்த பாகங்களை மு.கா சரியான விதத்தில் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

         தற்போது இப் பாகத்தை வைத்தே அமைச்சர் ஹக்கீமிற்கு எதிரான மிகப் பெரும் காய் நகர்த்தல்கள் இடம்பெற்று வருகின்றன.மு.கா பேராளர் மாநாட்டை நடாத்துவதற்கான திகதியை குறித்துவிட்டது.மு.கா யாப்பின் 8.5 ஆனது “வருடாந்த பேராளர் மாநாட்டிற்கு முந்தையதான உயர்பீடத்தின் இறுதிக் கூட்டத்தில் (தவறாது நடத்தப்படவேண்டிய உயர்பீடக் கூட்டம்) கட்சியின் நிர்வாக உத்தியோகத்தர்கள் தெரிவு நடைபெறும். “ என கூறுகிறது.அதாவது மிக விரைவில் நிர்வாகத் தெரிவு இடம்பெறவுள்ளது.இதில் தலைவருக்கு ஒருவரை பரிந்துரை செய்யும் போது மு.கா யாப்பின் அடிப்படையில்  மஷூரா அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட வேண்டும்.இவ்வளவு நாளும் மு.கா இப்படியான ஒரு சவாலை எதிர்கொண்டிருக்கவில்லை.இம் முடிவானது புதுமையானதொரு  அனுபவத்தை தரலாம்.இருந்தாலும் இதன் போது யாரை தலைவராக நியமிக்கப் போகிறார்கள் என்பது வினாவாகும்.இதில் குறித்த அமைப்பினர் தோல்வியை தழுவும் போது பகிரங்கமாக அவர்கள் மு.காவை எதிர்த்து செயற்படுவார்கள் என நம்பப்படுகிறது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.