அரிசியின் விலையை கிலோ ஒன்றுக்கு 76 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அமைச்சர் றிஷாட் எச்சரித்துள்ளார். அரிசி இறக்குமதியாளர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அதற்கு இணக்கம் தெரிவித்த பின்னரும் அரிசியின் விலையை அதிகரித்து விற்பனை செய்வதும் சந்தைக்கு அதனை விடாமலிருத்தலும் பிழையான நடவடிக்கையெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற (2017.01.03) தோற்பொருட்கள் காலணி தொடர்பான 9வது கண்காட்சியில் பிரதம விருந்தினராக அவர் கலந்து கொண்டார்.
அரிசி விலை தொடர்பில் அமைச்சர் இங்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,
ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அமைச்சர்களுடன் இணைந்து அரிசியின் விலையை கிலோ ஒன்றுக்கு 76 ரூபாவாக நிர்ணயித்தோம். 76 ரூபாவுக்கே அரிசியை விற்பனை செய்வதெனவும் அங்க முடிவு செய்யப்பட்டது. ஆதன் பின்னர் நானும் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, பிரதியமைச்சர் டாக்டர் சரத் அமுனுகம ஆகியோர் இறக்குமதியாளர்களுடன் இது தொடர்பில் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு குறிப்பிட்ட விலை நிர்ணயிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் இறக்குமதியாளர்கள் இறக்குமதி வரியை 15 சதவீதமாக குறைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். சுமார் 3 வாரங்களுக்கு முன்னர் அவர்களுடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் போதே அவர்களின் இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு தீர்க்கமான முடிவும் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஒரு வாரங்களுக்கு முன்னர் அதே இறக்குமதியாளர்கள் இறக்குமதி வரியை 5 சதவீதத்தால் குறைக்குமாறு மீண்டும் விடுத்த கோரிக்கையையும் ஜனாதிபதியின் ஆலோசனையைப் நிதியமைச்சருடன் இணைந்து ஏற்றுக்கொண்டோம். ஆனால் இற்றை வரை விலைகள் குறைந்ததாக இல்லை 76 ரூபாவுக்கு மேல் அரிசியை விற்பனை செய்ய முடியாது அவ்வாறு விற்பனை செய்தால் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அரசாங்கம் நினைத்திருந்தால் இறக்குமதி செய்து 76 ரூபா இற்கு விற்றிருக்க முடியும் நாம் அவ்வாறு செய்யவில்லை வர்த்தக சங்கங்களுக்கு இதனை வழங்கியே மக்களுக்கு அரசியை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தும் அவர்கள் அதனைச் சரியாக நிறைவேற்றவில்லை அரிசி இறக்குமதியாளர்களின் இந்த நடவடிக்கை தொடர்ந்தால் எதிர்வரும் காலங்களில் முக்கியமான முடிவுகளை எடுக்கவேண்டி நேரிடும்.
அத்துடன் இலங்கை முழுவதிலுமுள்ள 320 சதொச கிளைகளிலும் 76 ரூபா இற்கு தற்போது அரிசி விற்பனை செய்யப்படுகின்றது என்றும் அமைச்சர் றிஷாட் கூறினார்.