சுதந்திர நாட்டில்….

வெள்ளையனே வா
வேறு வழியில் வா
உள்ள நாட்டை நீ
ஊடுருவிப் பிடி.

சொந்த நாட்டையே
சுரண்டி வாழ்பவரை
அந்த மானுக்கு அனுப்பி
அப்படியே புதை.

ஜனநாயகப் போர்வைக்குள்
ஜாதி பேதம் தூண்டுபவரை
சொட் கண் முன் நிறுத்தி
சுட்டுக் கொல்

குடுவைக் கடத்திக்
கொண்டு வருவோரை
நடு ரோட்டில் நிற்பாட்டி
நாய் போல் சுடு

எழுபது வருடமாய்
எழுதப் படும் துவேசத்தை
கழுதையில் கட்டி
கடலுக்குள் வீசு

சீனிக்கு அமைச்சென்றும்
தீனிக்கு அமைச்சென்றும்
வீணான அமைச்சுக்களுக்கு
விடை  கொடுத்தனுப்பு

மட்டக்களப்புடன் நீ
விட்டுப் போன தண்டவாளம்
சொட்டும் மாற்றமின்றி
‘சுதந்திரமாய்’ இருக்கிறது

கொடியில் உள்ள சின்னம் 
லயனாக மாறிய பின்னும்
கொடிய லயன் மாறாமால்
குமுறுகிறார் தோட்ட மக்கள்

பெப்ர’வரி’ சுதந்திரத்தில்
வரி மட்டும் மிச்சமிருக்கு.
தப்ப வழி இன்றித்
தவிக்கிறார் மக்கள்.

வெள்ளையரின் ஆட்சியின் பின்
கொள்ளையர் ஆண்டதால்
பொல்லாத வெள்ளையரை
புகழும் நிர்ப்பந்தம்.

சுதந்திர இலங்கையின்
சுகம் பல இருந்தாலும்
விதம் விதமாய் ஆண்டவரால்
விகாரமானது சுதந்திரம்.

(நிஷவ்ஸ் – 03/02/2017)