விரைந்து தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்: பைசர் முஸ்தபா

எல்லை நிர்ணயம் குறித்த மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் அறிக்கை இவ்வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரான பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

“எல்லை நிர்ணயம் தொடர்பில் தொழில்நுட்ப ரீதியில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. அவை இவ்வாரத்துக்குள் சீர் செய்யப்படும். அது முடிவடைந்தவுடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும்.

எல்லை நிர்ணய மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் தலைவரான அசோக்க பீரிஸ் எமக்கு ஒத்துழைப்பு வழங்குவதைவிடுத்து, ஊடகங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

எனவே, அவரது கடமைகளையும் நிறைவேற்ற வேண்டிய நிலைமை அமைச்சு அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

அசோக்க பீரிஸ் ஒத்துழைக்கவில்லை என்பதால் அறிக்கையினை இழுத்தடிக்க முடியாது.

அதேவேளை, எமக்கு பல சவால்கள் இருக்கின்றன. ஆனாலும் விரைந்து தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம் எனவும் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.