றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுடீனின் மரணம் தொடர்பிலான சாட்சிகளை மறைக்க முற்பட்ட குற்றச்சாட்டில், கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்ட பொலிஸ் குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை எதிர்வரும் 16ம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அனுர பத்ததாஸ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, தாஜூடினின் மரணம் இடம்பெற்ற அன்று மற்றும் அதற்கு அண்மித்த தினங்களில் அனுர சேனாநாயக்கவின் தொலைபேசியில் இருந்து, ஜனாதிபதி செயலகத்திற்கு அழைப்புகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இன்று சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிஸ்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த அழைப்புகள் யாருக்கு மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் இருவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் கூறியுள்ளதாக, எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.