பஷீருடன் இணைந்து கட்சி தலைமைத்துவத்தை வெளியேற்ற மு.கா முக்கியஸ்தர்கள் சதி முயற்சி!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் “வசந்தம்” தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துகள் மற்றும் அவரது முகநூலில் வெளியிட்ட பதிவுகளையடுத்து எழுந்துள்ள நிலைமைகளைப் பயன்படுத்தி கட்சியின் செயற்பாடுகளை ஸ்தம்பிதமடையச் செய்து அதிகாரத்தைக் கைப்பற்றும் சதி முயற்சிகள் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் தற்போது தகவல்கள் கசிந்துள்ளன.

நேற்றிரவு (31) கொழும்பு கோட்டை பிரதேசத்திலுள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் வரவேற்பாளர் பிரிவில் கூடிய கட்சியின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் மூவர் உட்பட ஒன்பது பேர் (அனைவரும் உயர்பீட உறுப்பினர்களே) இது தொடர்பில் கலந்தாலோசனையில் ஈடுபட்டிருந்தனர்.

தவிசாளர் பஷீர் சேகு தாவூத் தெரிவித்துள்ள கருத்துகளால் தற்போது எழுந்துள்ள நிலைமைகளை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதும் இதற்காக பஷீர் சேகு தாவூதுடன் இணைந்து செயற்படுவது குறித்தும் இவர்கள் ஆலோசித்துள்ளனர். 

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் ஆகியோரைக் கட்சிக்குள் உள்வாங்கிக் கொள்வது தொடர்பிலும் இங்கு கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது

மேலும் இம்மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள பேராளர் மகாநாட்டை நடத்த விடாமல் தடுப்பது குறித்தும் சபாஷிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் உயர்பீடத்தைச் சேர்ந்த ஏனைய முக்கியமானவர்களையும் ரவூப் ஹக்கீமுக்கு எதிரான போக்கைக் கொண்டவர்களையும் தங்களுடன் இணைத்து பெரும்பான்மை பலத்துடன் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி தலைமைத்துவத்திலிருந்து ஹக்கீமை நீக்குவது தொடர்பிலும் இங்கு கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தக் கலந்தாலோசனையில் ஈடுபட்டவர்களில் ஒருவர் (அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவரல்லர்) இன்று (01) தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக தன்னால் செயற்பட முடியாதென ஏனைய எண்மருக்கும் தொலைபேசியில் தெரிவித்துள்ள நிலையிலேயே இந்த விவகாரம் இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்தச் செய்தியை மிகுந்த பொறுப்புடன் இங்கு நான் பதிவிடுகிறேன். 

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்