அரசாங்கம் தற்போது தனியார் நிறுவனமாக மாறிவிட்டது என்கிறார் மகிந்தானந்த அளுத்கமகே

ஜனவரி 8 ஆம் திகதி பதவிக்கு வந்த இன்றைய அரசாங்கம் தற்போது ரணில் விக்ரமசிங்கவின் தனியார் நிறுவனமாக செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று கூட்டு எதிர்க்கட்சி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் தற்போது தனியார் நிறுவனமாக மாறிவிட்டது. இந்த நிறுவனம் வங்கி நிதி நடவடிக்கைகள் தொடர்பில் உலக பிரசித்தி பெற்றுள்ளது.

ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக இருக்கும் போது இந்த கொள்ளைகள் நடக்கின்றன.

ரணில் விக்ரமசிங்கவின் தனியார் நிறுவனத்திற்கு நாட்டை ஆள இடமளிப்பதா இல்லை அவர்களை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துவதா என்று தீர்மானத்தை எடுப்பது நிறைவேற்று அதிகாரம் கொண்டவருக்கு உள்ள முக்கிய சவாலாகும் என அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள மோசடியாளர்களுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தின் கீழ் 7 வது வெளிகொணர்வாக அமைச்சர் பீ. ஹெரிசனுக்கு எதிராக இன்று இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

நெல் விற்பனை சபையின் நெல்லை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 10 பில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் அமைச்சர் ஹெரிசனுக்கு எதிராக இந்த முறைப்பாட்டை செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.