SLMC யை மீட்டெடுப்பதென்பது புதிய தலைமுறை இளம் தலைவர்களது கரங்களிலேயே தங்கியுள்ளது

 

சூரியன் இருக்கும் வரை தான் நட்சத்திரங்கள் ஒளிவிட்டுப் பிரகாசிக்க முடியும். 

தேசிய அரசியல் கட்சிகள் “முஸ்லிம் கங்கிராஸ்” என்ற மக்கள் சக்தியை அன்றும் இன்றும் எவ்வாறு கையாண்டு வருகின்றன :

o “முஸ்லிம் காங்கிரஸ்” தலைமையுடன் நேரடியாக உடன்பாடுகளுக்கு வருதல் ஆனால் சமூகம் சார்ந்த எந்தவொரு ஒப்பந்தத்தையும் செய்து கொள்வதில்லை.

o கட்சித் தலைமையுடன் உடன்பாடுகள் எய்த முடியாது போனால், அல்லது கட்சி பிறிதொரு தரப்புடன் கூட்டணி சேர்ந்து விட்டால் கட்சிக்குள் சிலரை விலைக்கு வாங்கி பிளவுகளை ஏற்படுத்துதல்.

o முஸ்லிம் காங்கிரஸிற்குள் அதிகார இழுபறிகள் ஏற்படுகின்ற பொழுது எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்து கட்சியை கூறு போடுவது. 

கடந்த காலங்களில் ஏதோ ஒரு வகையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தேசியக் கட்சிகளால் கட்சி மொத்தமாகவும் சில்லறையாகவும் காவு கொள்ளப் பட்டிருக்கின்றமையே வரலாறு.

“முஸ்லிம் காங்கிரஸ்” எனும் இயக்கத்தை மக்கள் நம்மட கட்சி, நமது வியர்வையாலும் இரத்தத்தாலும் நீரூற்றி வளர்த்த கட்சி என்று மக்கள் உரிமை பாராட்டுகின்றார்கள், கட்சித் தலைமையும் முன்னணி உறுப்பினர்களும் தவறுகள் செய்தாலும் மக்கள் மன்னித்து மறந்து விடுகின்றார்கள்.

“முஸ்லிம் காங்கிரஸ்” எனும் மக்கள் சக்தியை மையத்திலும் பிராந்தியத்திலும் பேரம் பேசும் வலிமையுள்ள சக்தியாக வைத்திருப்பதில் தற்போதைய தலைமையும் முன்னணி உறுப்பினர்களும் பாரிய தவறுகளை இழைத்திருக்கின்றார்கள்.

கட்சி பல காங்கிரஸ்களாக பிளவு பட்டிருக்கிறது, என்றாலும் ஒரு மறுக்க முடியாத உண்மை இருக்கின்றது அதாவது “முஸ்லிம் காங்கிரஸ்” என்ற மக்கள் இயக்கத்தை கூட்டிக் கொடுப்பதன் மூலம் அல்லது காட்டிக் கொடுப்பதன் மூலமே உள்ளேயும் வெளியேயும் பல குறுநில மன்னர்கள் கோலோச்சிக் கொண்டிருக்கின்றார்கள்.

சூரியன் இருக்கும் வரை தான் நட்சத்திரங்கள் ஒளிவிட்டுப் பிரகாசிக்க முடியும்.

தற்பொழுது பல கூறுகளாக பிளவுபட்டு ஒருவரை ஒருவர் மிகைக்க முயலுகின்ற சமரில் எந்தவொரு காங்கிரஸும் வெற்றியடையப் போவதில்லை, நிச்சயமாக முஸ்லிம் சமூகமே தனது அரசியல் இருப்பை அரசியல் அடையாளத்தை இழந்து தவிக்கப் போகின்றது. 

எமது போராட்ட அரசியல் சூதாட்ட அரசியலாக மாறியதால் இன்று பிளவுண்டு சின்னாபின்னப்பட்டு பேரின சக்திகளிடம் மொத்தமாகவும் சில்லறையாகவும் சரணாகதி அரசியலாக அடகு வைக்கப்பட்டுள்ளமை ஒவ்வொரு போராளியினையும் உறுத்திக் கொண்டிருக்கின்ற உண்மையாகும். 

இந்த மக்கள் இயக்கத்தையும் உரிமைப் போராட்டத்தையும் மீட்டெடுப்பதென்பது புதிய தலைமுறை இளம் தலைவர்களது கரங்களிலேயே தங்கியுள்ளது, எதிர்காலத்தில் அவ்வாறான காட்டிக் கொடுப்புக்களும் கூட்டிக் கொடுப்புக்களும் இடம் பெறா வண்ணம் கூட்டுப் பொறுப்பும், வெளிப்படைத் தன்மையும், பொறுப்புக் கூறலும் உள்ள தலைமைத்துவக் கட்டமைப்பையும் யாப்பையும் தயாரித்து கட்சியை தீவிரமான புனரமைப்புக்குள் கொண்டு வருதல் காலத்தின் கட்டாயமாகும்.

As sheikh இனாமுல்லாஹ் மஸீஹுதீன்