ஹஜ் கடமையை ஏற்கனவே நிறைவேற்றிய ஒருவர் இரண்டாம் தடவை ஹஜ் கடமையை நிறைவேற்றுவதென்றால் ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
இந்த நடைமுறையை அமுல்படுத்துவதற்கு அரச ஹஜ் குழு தீர்மானித்துள்ளது.
குறிப்பிட்ட மட்டுப்படுத்தப்பட்ட ஹஜ் கோட்டாவே இலங்கைக்குக் கிடைத்து வருவதாலும், பெருந்தொகையானவர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக விண்ணப்பித்திருக்கின்றமையுமே இதற்கான காரணமாகும்.
இவ் வருடத்திற்கான ஹஜ் பயணிகள் தெரிவில் முதன் முறையாக ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி. மொஹமட் தாஹா சியாத் கருத்து தெரிவிக்கையில், “முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துக்கு இது வரை 12 ஆயிரம் ஹஜ் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. ஹஜ் பயணிகள் தெரிவின் போது விண்ணப்பிக்கப்பட்டுள்ள வரிசைக்கிரமங்கள் கவனத்திற் கொள்ளப்படவுள்ளன.
கடந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றிய விண்ணப்பதாரிகள் நீங்களாக விண்ணப்பங்கள் வரிசைக்கிரமமாக தெரிவிக்குட்படுத்தப்படும். விண்ணப்பதாரிகளின் விபரங்கள் பரிசீலினைக்குட்படுத்தப்படவுள்ளன.
கடந்த வருடம் நியாயமான காரணங்களினால் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கும் தெரிவின்போது சலுகை வழங்கப்படும். விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை முகவர்கள் ஊடாக அன்றி நேரடியாகவே திணைக்களத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்” என ஹஜ் குழு ஹஜ் கடமைக்கான விண்ணப்பதாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கிறது என்றார்.
இதே வேளை கடந்த வருடம் ஹஜ் கோட்டா பகிர்வு முறைக்கு எதிராக ஹஜ் முகவர்கள் சிலரினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.