மோப்பநாய்கள் மூலம் களஞ்சியசாலை ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்ட கட்டிட பொருட்கள் கண்டுபிடிப்பு !

க.கிஷாந்தன்

 

பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்மலை வீதியில் நியகங்தொர பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பூண்டுலோயா பிரதேச வைத்தியர் ஒருவரின் கட்டிடத்தின் களஞ்சியசாலையில் நிர்மாண பணிகளுக்காக வைத்திருந்த உபகரணங்களை களவாடி சென்ற சந்தேக நபரை மோப்பநாய்களின் உதவியோடு பிடிக்கப்பட்டதாக பூண்டுலோயா பொலிஸ் நிலைய பதில் கடமை அதிகாரி தெரிவித்தார்.

15.01.2017 அன்று இரவு நடந்த இந்த சம்பவத்தில் கட்டிட வேலை பணிகளில் ஈடுப்பட்டிருந்த ஊழியர்கள் வேலை முடிந்து சென்ற வேளையில் குறித்த கட்டிடத்தில் உட்புகுந்த சந்தேக நபர் தந்திரமாக கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

 

இச்சம்பவம் தொடர்பில் குறித்த கட்டிடத்தின் உரிமையாளரான வைத்தியர் 16.01.2017 அன்று காலை முறைபாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

 

முறைபாட்டை ஏற்ற பொலிஸார் மோப்ப நாய்களை ஸ்தலத்திற்கு கொண்டு விசாரணை நடவடிக்கையில் ஈடுப்பட்ட போது அந்த மோப்ப நாய்கள் சந்தேக நபரின் வீட்டை இணங்காட்டியுள்ளது.

 

அதன் பின் குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், குறித்த நபரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 18.01.2017 அன்று நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.