சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக வர்த்தக மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (16) அதிகாலை 2.50 அளவில் பயணமாகிச் சென்றுள்ளார்.
பிரதமர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை டாவோஸில் தங்கியிருந்து சந்திப்புக்களை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடமும், உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு கிடைத்திருந்த நிலையில், அங்கு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட சர்வதேச உடன்படிக்கைகள் இலங்கையின் எதிர்கால பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பாரிய அனுகூலத்தை ஈட்டித்தந்தன.
உலக பொருளாதாரத்தின் புதிய மேம்பாடுகளை ஆழமாக ஆராயும் 2017 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மாநாட்டில் 40 க்கும் அதிகமாக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
மாநாட்டின் இறுதியில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முக்கிய அரச தலைவர்களுடனும், முன்னணி வர்த்தக சமூகத்தினருடனும் பல கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.
எதிர்கால உலகை மிகவும் பயனுள்ளதாக்குதல், உலகத் தலைவர்களின் திட்டங்களை ஒருமுகப்படுத்தல், பூகோளமய மற்றும் பிராந்திய பொருளாதார நிகழ்ச்சித் திட்டத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபடல் உள்ளிட்ட விடயங்கள் இன்றைய மாநாட்டில் முக்கிய பணிகளாக இடம்பெறவுள்ளன.
இதுதவிர. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு கிடைக்கப்பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
ஜி.எஸ்.பி வரிச்சலுகையை இலங்கைக்கு பெற்றுக்கொடுக்க ஐரோப்பிய வர்த்தக சங்கம் தற்போது தீர்மானித்துள்ளது.