உணர்ச்சிவசப்பட்டு அரசியல் பழிதீர்ப்பதற்கு அரங்கம் அமைத்துக் கொடுக்கும் மகராஜா நிறுவனம் அதனது ஊடக தர்மத்தை மீள்பரிசீலனை செய்யவேண்டும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தரும் கல்முனை தொகுதி வேட்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம். ஏ. கலீலுர் ரகுமான் அவர்கள் ஜனவரி 15, 2017 மின்னல் நிகழ்சி தொடர்பாக விடுத்த அறிக்கையானது.
ஜனவரி 15, 2017 அன்றைய மின்னல் நிகழ்வில் பக்குவம் பேணவேண்டிய இரண்டு பெரும் புள்ளிகளான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், பிரஜைகள் குழு தலைவர் திரு. ஸ்ரீரங்காவும் முன்னாள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் ஜனாப் Y.L.S. ஹமீது அவர்களும் தமது தனிப்பட்ட பளிதீர்புக்களை மையப் படுத்தி மகாராஜா நிறுவனத்தின் சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்வினூடாக ஒரு கட்சியின் தலைமையையும் அதனது நடவடிக்கைகளையும் மிகவும் அநாகரிகமான முறையில் விமர்சிதமையானது சம்மந்தப்பட்ட இருவரினதும் தனிநபர் ஒழுக்க விழுமியங்களை கேள்விக்குள்ளாகி இருப்பதோடு மகாராஜா நிறுவனம் அதனது மின்னல் நிகழ்வு நடாத்தும் திரு. ஸ்ரீரங்காவின் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆதங்கத்தையும் முஸ்லிம் சமூக இளைஞர்கள் மத்தியில் உருவாக்கி இருக்கின்றது.
திரு. ஸ்ரீரங்கா அவர்கள் தான்தோன்றித் தனமாக தனது சொந்த நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக் கொள்வதற்காக சக்தி தொலைக்காட்சி மின்னல் நிகழ்வை பயன்படுத்தி வருகின்றார் என்று இலங்கை அரசியல் களத்தில் இருக்கின்ற தமிழ், முஸ்லிம் மட்டுமல்ல சிங்கள அரசியல் ஆய்வாளர்களும் நம்புகின்றார்கள் என்பதும் அது மட்டுமல்லாது முஸ்லிம்களுக்கு மிகவும் இக்காட்டான சவாலான அரசியற் சூழ்நிலைகளில்கூட அவர் தனது ஊடக தர்மத்தை மீறி தனது நிகழ்ச்சியின் மூலம் முஸ்லிம் தலைமைகளையும் கட்சிகளையும் அவற்றின் செயற்பாடுகளையும் மலினப்படுத்தி வருவது மறைக்க முடியாத உண்மையாகும்.
இவ்வாறன இவரது அதிகப் பிரசங்கிதனத்தை ஜீரணிக்க முடியாமல் சகோதர மலைநாட்டு தமிழ் சமூகமானது சென்ற பாராளுமன்ற தேர்தலில் இவரை தூக்கி வீசினார்கள் என்பதே உண்மை.
தனக்கென்று ஒரு நிலையான அரசியல் போக்கினையோ கருத்துக்களையோ கொண்டிராத இவர் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியை மாற்றி எழுத மறைமுகமாக செயற்பட்டுவருகின்ற மூன்றாம் சக்திகளின் சம்பளப் பட்டியலில் இருக்கின்றாரோ என்ற ஐயப்பாடும் முஸ்லிம் சமூக சிந்தனாவாதிகளிடம் இல்லாமல் இல்லை. முஸ்லிம்கள் சமூகத்தின் தரப்பில் ஒரு மீடியா உருவாகிவிடக்கூடாது என்ற அச்சத்தை அவர் அந்த நிகழ்வில் வெளிப்படுத்தும் விதம் சான்று பகர்கிறது.
இவ்வாறு முஸ்லிம் சமூகம் அச்சப் படுகின்ற சக்திகளின் பட்டியலில் ஸ்ரீரங்கா அவர்கள் மாறி இருக்கிறார் என்ற உண்மையை கருத்திற்கொண்டு மகாராஜா நிறுவனமானது இவரது நகர்வுகளை அவதானித்து விசாரணைக்கு உட்படுத்தி தமது தொலைகாட்சியின் மின்னல் நிகழ்வினை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென்பது இன்றைய முஸ்லிம் தரப்பு சக்திகளின் வேண்டுகோளாகும்.
இதற்கும் மேலாக, அரசியலில் பழுத்த அனுபவம் உள்ளவராகவும் முஸ்லிம் தனித் தேசிய அரசியல் இயக்கத்தின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் மதிப்பிற்குரிய அஷ்ரப் அவர்களின் பாசறையில் வளர்ந்தவர் எனவும் தன்னை அடையாளப் படுத்திவரும் சகோதரர் Y.L.S. ஹமீது அவர்கள் திரு. ஸ்ரீரங்காவின் கபடத் தனமான டியூனுக்கு பாடுகின்ற அளவுக்கு அவரது தனிமனித பண்பு கீழே இறங்கி இருக்கின்றது என்பது வேதனையான துரதிஷ்டவசமான ஓன்று.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை தனக்கு வழங்கப் படவேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டதாக வாதிக்கப்பட்டுவரும் தேசியப் பட்டியல் விடயமானது நீதிமன்றம் வரை சென்று நியாய அநியாயங்களோடு தீர்ப்பு ஒன்றினை எதிர்பார்த்திருக்கின்ற வேளையில், யாரோ ஒருவர் முகப் புத்தகத்தில் எழுதிய கருத்துக்களை ஜீரணித்துக் கொள்ளும் பக்குவத்தை இழந்து தனக்கு தேசியப் பட்டியல் விடயத்தில் அநீதி இளைத்ததாக தன்னால் குற்றம் சாட்டப் பட்டுவரும் ஒரு வீரியமான கட்சியின் தலைமையையும் அந்த கட்சியின் செயற்பாடுகளையும் பொது அரங்கு ஒன்றில் மலினப்படுத்தி உணர்ச்சி வசப்பட்டு கருத்துக்கள் வெளியிட்டமையானது இலங்கை முஸ்லிம் சமூகத்தின் எந்த தரப்பினராலும் எந்த பரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஓன்று.
அதனையும் தாண்டி பத்தாண்டுகளாக ஒன்றாக இருந்து நட்பு அடிப்படையிலும் சரி கட்சி அடிப்படையிலும் சரி சகோதரர் ரிஷாத் பதியுதீன் அவர்களது தனி நபர் செயற்பாடுகள் அரசியல் நகர்வுகள் ஒவ்வொன்றையும் ஆமோதித்து ஒத்திசைத்து செயற்பட்டுவந்த முன்னாள் செயலாளர், மூன்றாம் தரப்பு இரண்டாந்தர ஊடகவியலாளர் ஸ்ரீரங்காவின் அனுசரணையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் உணர்ச்சிவசப் பட்டு கட்டுபாட்டை இழந்து தனிநபர் பழிதீர்த்தலை அரங்கேற்றிய நிகழ்வானது கண்ணாடி அறை ஒன்றில் நின்று கொண்டு தான் உடை மாற்றுகின்ற ஒரு நிகழ்வுக்கு ஒப்பானது.
தனது சமூகம் சார்ந்த அல்லது மக்கள் சார்ந்த நலன்களில் அக்கறை கொண்டு பல்வேறுபட்ட அச்சுறுத்தல்களையும் தாண்டி தியாக மனப்பாங்கோடு களமிறங்குகின்ற தனி நபர்கள் தலைமைகள் இளவரசர் சார்ள்ஸின் குடும்பமாக இருக்க வேண்டுமென்பதில்லை என்பதை முன்னாள் செயலாளர் Y.L.S. ஹமீது அவர்கள் நன்கு புரிந்து வைத்திருக்க வேண்டும்.
அவ்வாறாயின் வீதி விளக்கு வெளிச்சத்தில் கல்வி கற்ற முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகான் லிங்கன், ஆறு கிலோமீட்டர் கால் நடையாகச் சென்று கல்விகற்ற முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம், இந்த நாட்டு மக்களின் வீடில்லா பிரச்சினையை விசாலமாக சிந்தித்த ஒரு வறிய குடும்பத்தில் பிறந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச, ஒரு கிராம சேவக உத்தியோகத்தரின் மகனான மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள், ஏன் நீங்களும் நானும் கூட இரவரசர் சார்ள்ஸின் குடும்பமாகதான் இருந்திருக்க வேண்டும்.
கல்முனை மண்ணையும் மக்களையும் மிகவும் நேசிப்பவன் என்ற அடிப்படையிலும், மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் வாழ்ந்து வருகின்ற இலங்கை முஸ்லிம் சமூகதின் மீது அக்கறையுள்ள சகல தரப்பினரும் பக்குவத்தோடும் பொறுப்புணர்வோடும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் எமது சமூகத்தின் கட்டுக்கோப்பையும் ஒற்றுமையையும் சிதைக்க கங்கணக்கட்டிக் கொண்டு காத்துக் கிடக்கின்ற மூன்றாம் நிலை சக்திகளின் வலையில் விழுந்து கோடரிக் காம்புகளாக நாம் மாறிவிடக் கூடாது என்றும் மிக வினையமாக கேட்டுக் கொள்கின்றேன்.