திருவிழாக் கொண்டாட்டங்களிலும் கேளிக்கைகளிலும் லயித்திருக்கின்ற ஒருசில பெற்றோர் சில வேளைகளில் தமது பிள்ளைகளையே தொலைத்துவிடுவதுண்டு. பிள்ளைக்கு ஒரு இனிப்பு பண்டத்தை காட்டிவிட்டு பெறுமதியான தங்க நகைகளை களவாடிச் சென்ற கதைகளையும் நாம் கேள்விப் பட்டிருக்கின்றோம். அவ்வாறு, சில அற்ப சந்தோஷங்களின்பால் முஸ்லிம்களின் கவனத்தை குவியச் செய்துவிட்டு அல்லது முஸ்லிம்களுக்கு சிறியதாக எதையேனும் கொடுத்துவிட்டு அதைவிட கனதியான ஒன்றை வேறொரு வழியில் பிடுங்கிக் கொள்ளும் முயற்சிகள் நாட்டில் இடம்பெறுகின்றதோ என்ற சந்தேகம் ஏற்படத் தொடங்கியிருக்கின்றது.
அரசியலமைப்பு சீர்திருத்தம், தீர்வுத்திட்டம், வடக்கு-கிழக்கு மாகாணங்களின் இணைப்பு பற்றி முஸ்லிம்கள் ஆழஅகல பேசிக் கொண்டிருந்த போது, சாவிகொடுக்கப்பட்டிருந்த இனவாத பொம்மைகளின் நர்த்தனம், ஆட்சியாளர்களின் மெத்தனம், முஸ்லிம் அரசியல்தலைவர்களின் பொடுபோக்குத் தனம் எல்லாம் இவ்வாறான ஒரு எண்ணத்திற்கே இட்டுச் செல்கின்றன. உள்நாட்டு அரசியல் நகர்வுகளில் சர்வதேசம் கொண்டிருக்கின்ற அளவுக்கதிகமான அக்கறை, பெருந்தேசிய கட்சிகளின் திரைமறைவு கூட்டு, முஸ்லிம் அரசியல்வாதிகள் மந்தமான செயற்பாடு என்பனவற்றை நோக்குகின்ற போது, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் அரசியலமைப்பில் முஸ்லிம்களுக்கு பாதகமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு விடுமோ என்ற சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க முடியாதுள்ளது.
புதிதாக உருவாக்கல்
இலங்கையில் அரசியலமைப்பை மீண்டும் மீண்டும் திருத்துவதை கைவிட்டு புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைவதற்கு அரசாங்கம் பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இருப்பினும், இன்றிருக்கின்ற அரசியல் களச் சூழலில் அரசாங்கத்தினால் மிகக் குறுகிய காலவரையறைக்குள் அரசியலமைப்பை உருவாக்க முடியுமா என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது. எவ்வாறெனினும் அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வரவேண்டிய அழுத்தங்களால், தற்போது இருக்கும் அரசியலமைப்பிலேயே மாற்றங்களை கொண்டு வருவதற்கு அரசாங்கம் யோசிக்கலாம் என்ற அனுமானங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதாவது, அரசியலமைப்புருவாக்க பணிகளை மேற்கொள்கின்ற சமகாலத்தில் அதற்கு சமாந்திரமாக இன்னுமொரு (20ஆவது) திருத்தத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் மந்திராலோசனைகளை நடத்தி வருவதாக அறியமுடிகின்றது.
எனவே இவ்விடயம் பற்றி இங்கு பேசியாக வேண்டும். முஸ்லிம்கள் இது குறித்து அதீத கவனம் செலுத்த வேண்டியதும் அத்தியாவசியமாகும். ‘இவ்வாறு நடக்காது என்றும் அதற்கான சாத்தியங்கள் இல்லை’ என்றும் சிலர் கூறலாம். ‘இது தேவையற்ற யோசனை’ என்று வேறுசிலர் அபிப்பிராயப்படலாம். ஆனால், அரசியலமைப்பு சீர்திருத்தமாயினும், 20ஆவது திருத்தமாயினும் -எதுவென்றாலும் அது சிறுபான்மை முஸ்லிம்களை பாதிக்காத விதத்தில் அமைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலாவது இதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது.
புதிய அரசாங்கம் ஆட்சியமைத்த பிற்பாடு, அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் கருத்தறிவதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டு அக்குழுவானது பிரதேசவாரியாக மக்களின் கருத்துக்களை பதிவு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதற்கிடையில், இலங்கைப் பாராளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக மாற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சபையை நியமிப்பதற்கான கட்டமைப்பு தீர்மானத்தின் 05 (அ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 21 அங்கத்தவர்களை உள்ளடக்கிய வகையில் அரசியலமைப்புச் சபையினால் வழிப்படுத்தும் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவானது அரசியலமைப்பு பிரேரணை வரைவு தயாரிப்பில் முக்கிய பங்கினையாற்றி வருகின்றது. இக்குழுவில் தமிழர்கள் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், டி.எம்.சுவாமிநாதன், மனோகணேசன், எம்.ஏ.சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும், முஸ்லிம்கள் சார்பில் கட்சித் தலைவர்களான றவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, குறிப்பிட்ட பொருத்தமான விடயப்பரப்புக்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்கில் வழிப்படுத்தும் குழுவுக்கு உதவியாக ஆறு உப குழுக்களும் முகாமைத்துவ குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளன. அடிப்படை உரிமைகள் தொடர்பான உபகுழு, நீதித்துறை தொடர்பான உபகுழு, நிதி பற்றிய உபகுழு, பகிரங்க சேவை மறுசீரமைப்பு பற்றிய உப குழு, மத்திய – சுற்றயல் உறவுகள் பற்றிய உபகுழு, தேசிய மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் பொலிஸ், சட்ட வலுவூட்டல் பற்றிய உப குழு ஆகியவையே இந்த உப குழுக்களாகும்.
இந்த உபகுழுக்களின் அறிக்கைகள் வழிப்படுத்தல் குழுவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. ஆவர் அந்த அறிக்கைகளை அரசியலமைப்பு சபையின் நவம்பர் 19ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் முன்வைத்தார். இவ்விடயத்தை அரசியலமைப்பு சபை கலந்துரையாடிய பின்னர், பாராளுமன்ற செயன்முறைகளை மேற்கொள்வதற்காக அவ்விடயம் சபைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மூன்றுகட்ட செயன்முறை
அரசியலமைப்பு சீர்திருத்தம் என்பது மூன்று செயன்முறைக் கட்டங்களில் நடைபெறுமென அரசியலமைப்பு பேரவை குறிப்பிட்டுள்ளது. பொது ஆலோசனை செயன்முறை, அரசியலமைப்பு சபை செயன்முறை மற்றும் பாராளுமன்ற செயன்முறை ஆகியவையே அவையாகும். அந்த அடிப்படையில் நோக்கினால் இப்போது இரண்டாவது படிமுறையின் மத்திம கட்டத்திற்கு இச் செயன்முறைகள் வந்திருக்கின்றன. அரசியலமைப்பு சபையானது தனது பாராளுமன்ற செயன்முறைக்காக இதனை முன்னகர்த்தி, பாராளுமன்ற நடைமுறைகளின் ஊடாக இது நிறைவேற்றப்பட்ட பின் புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும் என்று சொல்லலாம்.
அரசியலமைப்பு சட்டமூலத்தில் உள்ள பிரேரணைகள் அரசியலமைப்பு சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரால் அங்கீகரிக்கப்படுமிடத்து அரசியலமைப்பு சட்டமூலம் அமைச்சரவை அமைச்சர்களுக்கும் பாராளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்கப்படும். அரசியலமைப்பு சட்டமூலத்தில் உள்ள பிரேரணைகள் அரசியலமைப்பு சபையில் மிகக் குறைந்தளவானோரால் அங்கீகரிக்கப்படுமிடத்து குறித்த அரசியலமைப்பு சட்டமூலமானது பாரளுமன்றத்தினால் குறிப்பிட்ட ஒரு மாத காலத்துக்குள் மீளக்கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்படும். அதன் பின்னர் அரசியலமைப்பு சட்டமூலத்தில் உள்ள பிரேரணைகள் அரசியலமைப்பு சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரால் அங்கீகரிக்கப்படுமிடத்து அரசியலமைப்பு சட்டமூலம் அமைச்சரவை அமைச்சர்களுக்கும் பாராளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்கப்படும். ‘அரசியலமைப்பு சட்டமூலத்தில் உள்ள பிரேரணைகள்’ உரிய வகையில் அங்கீகரிக்கப்படுமிடத்து இப் பிரேரணைகள் அரசியலமைப்பு சட்டமூலமாக மாற்றப்படுவதுடன், அதன் பின்னர் ‘அரசியலமைப்பின் நீக்கத்துக்காகவும் மாற்றீட்டுக்காகவும் பயன்படுத்தும் சட்டமூலம்’ என்ற பெயரில் பாராளுமன்றத்திற்கு முன்னகர்த்தப்படும்.
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சாசனத்துக்கு நடைபெற்ற வாக்கெடுப்பு போன்று உத்தியோகபூர்வ வாக்கெடுப்புக்கள் இடம்பெற்று புதிய அரசியலமைப்பு இயற்றப்பட வேண்டும். அதன் பின்னர் அரசியலமைப்பு சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் அரசியலமைப்பு சாசனத்துக்கேற்ற வகையில் சட்டங்கள் இயற்றப்படும். இச் சந்தர்ப்பத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு குறையாத வாக்குகளால் இது நிறைவேற்றப்பட்ட பின்னர் சர்வஜன வாக்கெடுப்பிற்காக விடப்பட வேண்டும் என்பதும் வரண்முறையாகும்.
கவனமற்ற முஸ்லிம்கள்
புதிய அரசியலமைப்பு ஒன்று நடைமுறைக்கு வரும் பட்சத்தில் அதிலுள்ள ஏற்பாடுகள் நாட்டின் ஒவ்வொரு பிரஜையிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிச்சயம் தாக்கம் செலுத்தும். எனவே, சிறுபான்மை மக்கள் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து அதீத கவனம் செலுத்துவது ஒரு வரலாற்றுக் கடமை என்பதை அடிக்கோடிட்ட வார்த்தைகளால் குறிப்பிட விரும்புகின்றேன். அந்த வகையில், தமிழ் அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் மிகவும் அவதானத்துடனும் தூரநோக்குடனும் செயற்பட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகளும் அமைப்புக்களும் இன்னும் பிற்போக்குத் தனத்தையே வெளிப்படுத்தி நிற்கின்றன.
இதற்கு நல்ல உதாரணம் ஒன்று உள்ளது. அதாவது, பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான் குழுவில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான அமீர்அலி மற்றும் தௌபீக் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர். இக்குழுவுக்கு தமிழர் தரப்பில் மலையக மக்கள் முன்னணி, தமிழர் மகா சபா, வடமாகாண சபை என பல தரப்பினர் முன்மொழிவுகளை எழுத்துமூலமாக சமர்ப்பித்திருந்தனர். ஆனால், முஸ்லிம்; தரப்பில் இருந்து அவ்வாறான எவ்வித சமர்ப்பணமும் முன்வைக்கப்படவில்லை என்பது கவனிப்பிற்குரியது. இதுபோலவே, மக்கள் கருத்தறியும் குழு நாடு பூராகவும் நடாத்திய கருத்துக்கணிப்பின் போது முஸ்லிம்களும் ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த அக்கறையையே வெளிப்படுத்தினர். இதுதான் முஸ்லிம் அரசியல்வாதிகளதும் மக்களதும் நடைமுறை யதார்த்தமாக இருக்கின்றது.
இவ்வாறு, அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்ற போதும், அதனை சமர்ப்பித்து வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் அடுத்தடுத்து முட்டுக்கட்டைகள் போடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் அதிர்வுகளை ஏற்படுத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சி பகீரத பிரயத்தனங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றது. இனவாதமும் பெருந்தேசியவாதமும் தேவையானபோது இரகசியமாக கைகோர்;த்திருக்கின்றன. வழக்கம்போல், சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலும் இதில் செல்வாக்கு செலுத்துகின்றது. மிகக் குறிப்பாக, ‘புதிய அரசியலமைப்பை உருவாக்க விடமாட்டோம்’ என்று முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல வெளியிட்டுள்ள கருத்து, கூட்டு எதிர்;க்கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாhடாகவே நோக்கப்படுகின்றது. இவ்வாறான நிலைமைகள் சர்வஜன வாக்கெடுப்பை பாதகமாக்கிவிடக் கூடும்.
எனவே, வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தாமதம், தடங்கல் ஏற்படலாம் என்று அரசாங்கம் முன்னுணர்ந்து கொண்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புக்களின் அழுத்தம் காரணமாக ஏதாவது ஒரு ஏற்பாட்டை அரசியலமைப்பின் ஊடாக மேற்கொள்ள வேண்டிய இக்கட்டில் அரசாங்கம் இருக்கின்றது. ஆனாலும், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளை அரசாங்கம் கைவிடப் போவதில்லை. மாறாக, அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளை முன்னெடுத்துக் கொண்டே அதற்கு சமாந்தரமாக இப்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் ஒரு திருத்தத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சிக்கும் வாய்ப்புக்கள் இருப்பதாக ஒரு சில அரசியல்வாதிகள் ஊகிக்கின்றனர். அதாவது, ஐ.நா. கூட்டத்தொடரில் தீர்மானம் எதையும் எடுக்காமல் தடுக்கும் முன்னேற்பாடாக 20ஆவது திருத்தத்தை கொண்டு வந்து, சர்வதேசம் விரும்புகின்ற ஓரிரு மாற்றங்களை நிகழ்த்திக் காட்டும் உத்தியாக இது அமையலாம். இதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை.
வேறு தேர்தல் முறைமை
இதேவேளை, ‘அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை கொண்டுவரும் முயற்சிகளை மீண்டும் அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக நம்பகரமாக அறியமுடிகின்றது’ என்று இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் அண்மையில் குறிப்பிட்டுள்ளார். ‘அவ்வாறு ஒரு திருத்தம் வருமாக இருந்தால் அதில் தேர்தல் முறைமை மறுசீரமைப்பு பிரதான இடம்பிடிக்கும்’ என்று அவர் அடித்துக் கூறுகின்றார்.
உண்மையிலேயே 20ஆவது திருத்தம் கொண்டு வரப்படாவிட்டால் கூட, புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பில் அவ்விடயம் முக்கிய வகிபாகத்தை கொண்டிருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதற்கு முன்னரே வழிப்படுத்தும் குழுவானது தமது கூட்டங்களின் போது தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பில் அதிகம் கலந்துரையாடி இருக்கின்றது. இக் குழுவினரால் ஆழமாக கலந்தாலோசித்து தீர்க்கமான முடிவுகளை இயற்றுவதற்காக எடுக்கப்பட்ட துறைகளில் தேர்தல் சீர்திருத்தம் என்ற பிரிவு முக்கிய இடம் வகிக்கின்றது. ஆகவே, மேற்குறிப்பிட்ட அடிப்படையில் நோக்கினால், எவ்வழியிலேனும் தேர்தல் முறை மறுசீரமைப்பு கொண்டுவரப்படப் போகின்றமை தெளிவாகின்றது.
தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பில் இதற்குமுன் பல முறைமைகள் முன்மொழியப்பட்டிருந்தாலும், தொகுதிவாரியான முறைமையே இப்போது இறுதிக்கட்ட பரிசீலனையில் இருப்பதாக ஹிஸ்புல்லாஹ் தெரிவிக்கின்றார். அவரது கருத்தின்படி, 140 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி வாரியாக தெரிவு செய்யப்படுவதுடன் மாகாண ரீதியாக தோல்வியடைந்தவர்களில் ஆகக் கூடிய வாக்கெடுத்த கட்சியில் இருந்து 70 பேருக்கு நியமன எம்.பி. வழங்கப்படக் கூடும். அதேவேளை 30 தேசியப்பட்டியல் எம்.பி.களும் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது. இது உத்தியோகபூர்வ தகவல் அல்ல எனினும் தொகுதிவாரி முறைமையே பிரதானமாக அமையும் என்ற கருத்தை பலரும் முன்வைக்கின்றனர்.
எவ்வாறிருப்பினும், இதையொத்த ஒரு தேர்தல் முறைமை ஒன்று அமுலுக்கு வந்து அதன்கீழ் தேர்தல் இடம்பெறுமாக இருந்தால் மட்டுப்படுத்தப்பட்ட முஸ்லிம் வேட்பாளர்களே பெரும்பான்மை கட்சிகளின் ஊடாக களமிறக்கப்படுவார்கள். ஒட்டுமொத்தமாக வாக்குகளால் தெரிவு செய்யப்படும் முஸ்;லிம் எம்.பி.க்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே அமையும் என்று கூறப்படுகின்றது. அதேபோல் முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாக போட்டியிடும் பட்சத்தில், ‘தோல்வியடைந்ததில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற கட்சி’ என்ற அடிப்படையிலும் எம்.பி.களை பெறுவது சவாலாக இருக்கும். இவ்விரு தெரிவுகளிலும் பின்தங்கியுள்ள முஸ்லிம் கட்சிகளுக்கு கணிசமான தேசியப்பட்டியல் ஆசனங்களாவது வழங்கப்படும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.
முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தும் விதத்தில் எல்லைகளை சரியாக மீள் நிர்ணயம் செய்யாது, தொகுதிவாரியான தேர்தல் முறைமை நடைமுறைக்கு வரும் பட்சத்தில் முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வெகுவாக குறைவடைய வாய்ப்புள்ளது. அவ்வாறு நடப்பதற்கு நாம் இடமளிப்போம் என்றால் அது இனிவரும் தலைமுறைக்கு நாம் செய்யும் பெரும் துரோகமாகவே அமையும். எனவே, முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்களை, அபிலாஷைகளை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளோடு, அரசியலமைப்பு மறுசீரமைப்போ, திருத்தமோ முன்வைக்கப்பட வேண்டும்.
அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எவ்வாறான தீர்வுகளை அரசியலமைப்பின் ஊடாக கொண்டு வரப்போகின்றது என்பதில் தெளிவான புரிதல்கள் கிடையாது. வழிப்படுத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் றவூப் ஹக்கீமும், றிசாட் பதியுதீனும் ஒரு ‘ஜென்டில்மேன் உடன்பாடு’ போல, அரசியலமைப்பு உருவாக்கம் பற்றியோ, தேர்தல் மறுசீரமைப்பு பற்றி பகிரங்கமாக பேசாதிருப்பது பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக மு.கா. தலைவரின் மௌனம், ஆட்சியாளர்களின் மர்மங்கள் நிறைந்ததாக தெரிகின்றது. இதனால், ஏகப்பட்ட மனக்குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
இதன்பிறகு அமுலுக்குவரும் அரசியலமைப்பை அடுத்தடுத்த தலைமுறையின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போகின்றது என்ற அடிப்படையில் ‘அரசியலமைப்பு சீர்திருத்தம்’ பற்றி கூடிய கவனம் செலுத்துகின்ற சமகாலத்தில், பாராளுமன்ற உறுப்புரிமை குறைந்தால் முஸ்லிம்கள் மேலும் செல்லாக் காசாகி விடுவார்கள் என்ற பொறுப்புணர்வோடு, ‘தேர்தல் முறைமை மறுசீரமைப்பு பற்றி’ எல்லா முஸ்லிம் எம்.பி.க்களும் உடனடியாக அக்கறை செலுத்த வேண்டும்.
• ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 01.01.2017)